SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை துக்ளக் பிழையை நாடு மறக்காது, மன்னிக்காது : காங். தலைவர் சோனியா விமர்சனம்

2019-11-09@ 00:14:46

புதுடெல்லி: ‘மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது துக்ளக் தவறு. இதனை நாடு மறக்காது, மன்னிக்காது,’ என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்தனர். வங்கியில் இருந்து தங்களுடைய சொந்த பணத்தை எடுக்க முடியாமல் நாள் கணக்கில் காத்திருந்தனர். பலர் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறின. இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து நேற்றுடன் 3 ஆண்டுகள் ஆகின்றது.  இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலமாக மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து, மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ளது. 120 உயிர்களை பலிகொண்ட மற்றும் இந்தியாவின் நடுத்தர மற்றும் சிறு தொழில்களை அழித்த இந்த நடவடிக்கை துக்ளக் தவறாகும். இந்த தவறான செயலுக்கு பிரதமர் மற்றும் அவரது சக அமைச்சர்கள் ஒருபோதும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

இந்த முட்டாள்தனமான மற்றும் குறுகிய பார்வை கொண்ட இந்த நடவடிக்கைக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பதற்கு மோடி அரசானது முயற்சித்தாலும், நாடும், அதன் மக்களும், நாட்டின் நிலைக்கு அவர்கள்தான் பொறுப்பு என்பதை உறுதி செய்வார்கள்.2017ம் ஆண்டு முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பேசுவதை மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் நிறுத்திக்கொண்டனர். நாடு மறந்துவிட்டதாக நினைக்கின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியானது நாடு மட்டுமல்ல வரலாறும் அவர்களை மறக்காது, மன்னிக்காது என்பதை உறுதி செய்யும். ஏனென்றால் பாஜவை போல அல்லாது காங்கிரஸ் கட்சி நாட்டு நலனில் அக்கறை கொண்டு சேவையாற்றி வருகின்றது,’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், ‘பணமதிப்பிழப்பு தீவிரவாத தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள் ஆகின்றது. இந்த தாக்குதல் இந்திய பொருளாதாரத்தை சீரழித்தது, பல உயிர்களை பலிவாங்கியது. பல லட்சம் சிறு தொழில்களை அழித்தது, லட்சக்கணக்கான மக்களை வேலையிழக்க செய்தது. இந்த தீய தாக்குதலுக்கு பின்னால் இருந்தவர்கள் இதுவரை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படவில்லை,’ என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இது ஒரு பேரழிவு என்பதை நிரூபித்து நமது பொருளாதாரத்தை அழித்துவிட்டது. இதற்கு யாராவது பொறுப்பேற்க விரும்புகிறீர்களா?’ என்று பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘உயர் ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே  இது பொருளாதாரத்தையும், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் அழித்துவிடும் என்று நான் கூறினேன். புகழ்மிக்க பொருளாதார வல்லுநர்கள், சாதாரண மக்கள் மற்றும் நிபுணர்கள் தற்போது இதனை ஒப்புக்கொள்கின்றனர். ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களும் இது ஒரு பயனற்ற நடவடிக்கை என்பதை காட்டுவதாக உள்ளது,’ என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்