SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தியாகம் செய்து அரசியலுக்கு வந்து பதவி, பொறுப்பு அடைந்தவர்களுக்குத்தான் தியாகத்தை புரிந்துகொள்ளும் அறிவும் பக்குவமும் கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும்

2019-11-08@ 00:03:48

சென்னை : தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவி பொறுப்பை அடைந்தவர்களுக்குத்தான் தியாகத்தை புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: திரும்பி வராதது காலம்; திருத்தி எழுதப்பட முடியாதது வரலாறு. எவ்வளவு படித்திருந்தாலும், சிலருக்கு இந்த அடிப்படை புரியாது. சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாபா.பாண்டியராஜன். நான் மட்டுமல்ல, திமுகவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அன்றைய மத்திய அரசு அமல்படுத்திய அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்த காரணத்தால், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டோம்.

அதற்கான ஆவணங்கள் சிறைத்துறையில், சட்டமன்ற ஆவணங்களில், நீதியரசர் எம்.எம்.இஸ்மாயிலால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நிரம்ப இருக்கின்றன. படிக்கத் தெரிந்தவர்கள், படிக்க மனமிருப்பவர்கள், பார்த்துத் தெரிந்து தெளிவு கொள்ளலாம். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற தன்முனைப்பால், தெளிவு பிறக்காது. அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப்பிரமாணம் எடுத்துவிட்டு,  நாலாந்தரப் பேச்சாளரின் நடையைத் தழுவி, பாண்டியராஜன் பேசி இருப்பது, உண்மையில் எனக்கு வருத்தம் தரவில்லை. ஏனென்றால், கல்லிலும் முள்ளிலும் நடந்து கடும் பயணம் மேற்கொண்டு, சொல்லடி பட்டு துயரங்களைத் தாங்கி, தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை  அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். ஆனால் பாண்டியராஜன், அந்த வகைப்பட்டவர் அல்ல என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. அவரது கட்சிக்காரர்களே முழுவதையும் அறிவார்கள்.

இதுபோன்ற எத்தனையோ ஏசல்களையும் இழிமொழிகளையும் அவமானங்களையும் சுமந்துதான், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தன்மான-அறிவியக்கம் எழுந்து, தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்த அவமானங்கள், வேரில் வெந்நீர் ஊற்றுவதற்காகச் செய்யப்படுகின்றன. ஆனால் அதனையும் நன்னீர் ஆக்கிக் கொண்டு, மேலும் வளர்ந்து படரும் சக்தி படைத்தது திமுக. எனவே, அமைச்சர் பாண்டியராஜனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு திமுகவினரை கேட்டுக் கொள்கிறேன். அவர் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் இந்த நாட்டு மக்களுக்குத் தோலுரித்துக் காட்டிவிட்டது; அவ்வளவு தான். பயனில் சொல் பாராட்டுவாரை பதர்தான் என்றார் அய்யன் திருவள்ளுவர். இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் - என்ற வள்ளுவரின் அறிவுரைக்கு ஏற்ப நாம் நடந்து கொள்வோம். மறப்போம், மன்னிப்போம்.

இதுதான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடங்கள். பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், என்ன புரிந்து கொண்டார் என்பதை, அவர் பயன்படுத்தும் சொற்களே காட்டிக் கொடுத்துவிட்டது. நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம்; இழி சொற்களை ஏற்க மாட்டோம்; அவை எங்கிருந்து புறப்பட்டதோ, அந்த இடத்திற்கே போய்ச் சேர்ந்துவிடும். வாழ்க வசவாளர்கள்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவைச் சேர்ந்த சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக நகர் தெற்கு பகுதி, 75வது வட்ட அவைத்தலைவர் ஆர்.வேலாயுதம் தலைமையில், அதிமுகவை சேர்ந்த ஓட்டேரி, எஸ்.எஸ்.புரத்தைச் சார்ந்த வி.வேளாங்கண்ணி, வி.பிரபு, வி.ரேகா, வி.சங்கீதா, எம்.ஜோதீஸ்வரன், ஏ.கோமதி, எஸ்.கோபாலகிருஷ்ணன், ஆர்.மனோ தமிழ்செல்வம், தேவராஜ், வி.நாராயணன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.ஆசைமணி, ஏ.கார்த்திக், ஏ.விஜி, ஏ.அஜீத், டி.ரேணுகா, ஆர்.தாஸ், எம்.கலையரசன், பி.தினேஷ், எம்.மனோஜ், பி.கோபிநாத், எம்.விக்னேஷ், சி.தமிழ்எழிலன், பி.அசோக்குமார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அப்போது, சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தாயகம்கவி எம்.எல்.ஏ., திருவிக நகர் தெற்கு பகுதி செயலாளர் எம்.சாமிக்கண்ணு, 75வது வட்ட செயலாளர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 08-12-2019

  08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-12-2019

  07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RioStarFerrisWheel

  பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • ambedh_day11

  இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

 • SydneyOrangeSky19

  ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்