SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித் உடலை பெற்றோர்களிடம்கூட காட்டாதது ஏன்?தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் விளக்கம்

2019-10-31@ 00:24:22

சென்னை: சமூக வலைதளங்களில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் உடல் முழுவதுமாக மீட்கப்படவில்லை என்றும், அவனது உடலை பெற்றோர்களிடம் கூட காட்டவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து, தமிழக  வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: சிறுவன் சுஜித் துரதிர்ஷ்டவசமாக இறந்து விட்டான். 600க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களும்,  வேதனையுடன் வேலை செய்தனர். சுஜித் உடலை பெற்றோர்களிடம் கூட காட்டவில்லை என்று கேட்கிறீர்கள். அவர்களின் சொந்த போர்வெல்லில் விழுந்தாலும், சிறுவனின் பெற்றோர்களுக்கு ஆதரவாகவே நாங்களும் செயல்பட்டோம்.  சிறுவனின் தாய் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரும் அதையே கூறியுள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் தற்போது மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை முழுமையாக மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

களப்பணியாளர்களை விமர்சனம் செய்யக்கூடாது. ஒவ்வொரு நொடியும், எப்படியாவது குழந்தையை மீட்க வேண்டும் என்றுதான் போராடினார்கள். ஆனால், குழியில் இருந்து உடல் அழுகிய வாடை வந்தபிறகுதான், நாங்கள் மாற்று வழியை  தேடி போனோம். சுஜித் இறந்த வேதனை எல்லாருக்கும் இருக்கிறது.மாவட்ட, மாநில அளவில் உள்ள அதிகாரிகளுக்கு தனித்தனி பொறுப்பு இருக்கிறது. இன்று கூட சிலர் கூறுகின்றனர். குழந்தை குழியில் விழுந்து இரண்டு நாட்களுக்கு  பிறகுதான் பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்துக்கு சென்றார்கள் என்று கூறுகின்றனர். இந்த பணியில், ஒரு குழுவாக தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் கருத்துக்கள் அடிப்படையில்தான் மீட்பு பணிகள் நடந்தது. பேரிடர் மீட்பு  குழு, தீயணைப்பு குழு, போலீசார், தன்னார்வலர்கள் என ஒரு குழுவாக ஆலோசனை நடத்திதான் மீட்பு பணியில் ஈடுபட்டோம். ஆனால் எதிர்பாராதவிதமாக குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை. இனி இதுபோன்ற விபத்து நடக்க  கூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் தீ விபத்தில் பள்ளி குழந்தைகள் இறந்த உடலை அனைவரும் பார்க்கும்படி சம்பவம் நடந்தது. அதனால் சில பிரச்னைகள் ஏற்பட்டது. அதற்கு பிறகு மத்திய அரசு இதுபோன்ற சம்பவங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்று ஒரு  விதிமுறையை அறிவுறுத்தி உள்ளது. போரில் இறந்த வீரர்கள் உள்ளிட்ட இறந்தவர்கள் சடலத்தை காட்டக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இறந்த உடலில் அனைத்து உறுப்புகளும் இருக்கிறதா, இல்லையா என்று பார்க்காமல் அதற்கென்று உரிய  மரியாதையுடன் செயல்பட வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளது. அதன்படிதான் நாங்கள் செயல்பட்டோம். அப்படி உடலை காட்டினால், இந்த உறுப்பு இல்லையென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பார்கள். சுஜித்  பெற்றோர்களிடம், ஒவ்வொரு முறையும் என்ன நிலையில் உடல் உள்ளது என்று தெளிவாக சொல்லி இருக்கிறோம்.

ஆழ்துளை குழாயில் விழுவது என்பது ஒரு விபத்து. இடர்பேரிடர் என்பது சுனாமி மற்றும் வெள்ளம். இந்த மாதிரி, விபத்து ஏற்படும்போது இரண்டு மாதிரி வழிமுறைகள் கொடுத்துள்ளார்கள். அந்த இரண்டு முறையை செய்தோம். இந்திய  அளவில் இருக்கக்கூடிய அனைத்து வகையான உயர்தர கருவிகளை வரவழைத்து மீட்பு பணிகளை செய்தோம். தொழில்நுட்ப வல்லுனர்கள் கூடவே இருந்தனர். என்ன மாதிரி முறைகளை பயன்படுத்தி மீட்பு பணிகளை செய்கிறோம் என்று  தொடர்ச்சியாக கமென்டரி கொடுக்க முடியாததால், சிலர் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். சண்டிகரில் இருந்து கூட வல்லுனர் ஒருவரை விமானம் மூலம் வரவழைத்தோம். அனைவரையும் ஒருங்கிணைந்துதான் மீட்பு பணியில்  ஈடுபட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

மீட்பு பணிக்கு 11 கோடி செலவா?
சிறுவன் சுஜித் மீட்பு பணிக்கு 11 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே என்று நிருபர்களிடம் கேட்டனர். இதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் கூறும்போது, “பேரிடர் மீட்பு முயற்சியில் பணம் ஒரு பிரச்னையே  கிடையாது. வாட்ஸ்அப் மூலம் பல கோடி ரூபாய் செலவு செய்ததாக தவறான தகவல்  வருகிறது. அரசு சார்பில் எவ்வளவு பணம் செலவானது என்பது குறித்து எந்த அதிகாரியும், யாரிடமும் எந்த தகவலும்  தெரிவிக்கவில்லை. பேரிடர் மீட்பு  பணியில், உயிரிழப்பை தடுக்க மட்டுமே  முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்