SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொத்துக்களை பார்த்துக்கொள்ள சிறைப்பறவை புது நபரை நியமிக்க இருப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-10-18@ 00:28:55

‘‘சிறைப்பக்கமே வரவேண்டாம்னு சொல்லிட்டாராமே, யாரு... எதற்கு என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார் பீட்டர்மாமா.
‘‘கிப்ட் மனுஷனை தான் சிறை பக்கமே வரவேண்டாம்னு சிறைப்பறவை சொல்லியிருக்கு. அவன் வந்து சந்தித்தால் என் விடுதலையில் சிக்கலாகும். ஒரு சின்னத்தை கூட கைப்பற்ற முடியாத ஆள நம்பி பிரயோஜனம் இல்ல. எனக்கு கர்நாடக  ஆசாமியே போதும், அவருக்கு நிறைய செல்வாக்கு இருக்கு. இலை கட்சியிலேயே இன்னும் எனக்கு செல்வாக்கு இருக்கு... என்னால் அமைச்சர், எம்எல்ஏ ஆனவர்கள்... வசதி படைத்த முன்னாள் எம்எல்ஏ, அமைச்சர்கள் எல்லோரும் என்  பின்னாடி தான் இருக்காங்க... நான் வெளியில் எப்போது வருவேன்னு காத்திருக்காங்கன்னு சொன்னாராம். அதோட தன் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை வேறு ஒருவருக்கு மாற்றித் தரவும் யோசித்து வருகிறாராம். இல்லாவிட்டால்  வெளியே வரும்போது எல்லாத்தையும் வித்து தன் பெயருக்கு மாற்றிவிடுவார்கள் என்று பயப்படுகிறாராம். சிறையில் அவரை சந்தித்தவர்கள் இந்த விவரங்களை வெளிப்படையாகவே சொன்னார்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோவையில் தலைமை தலையாட்டினாலும்... இடையில் இருப்பவர்கள் செய்யற சில்லரை வேலைக்கு அளவே இல்லை போல இருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழக அரசின் வனத்துறை கோவை போளூவாம்பட்டி ரேஞ்சில் பணியாற்றி வரும் வனவர் ஒருவர், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு தன் சொந்த விருப்பத்தின்பேரில் பணி மாறுதல் கேட்டுள்ளார். அவருக்கு முதன்மை  தலைமை வனப்பாதுகாவலர் மூலமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பணியாணை வழங்கப்பட்டது. தலைமை தான் ஓகே சொல்லிடிச்சே என்று ரொம்ப சந்தோஷப்பட்டார் வனவர். ஆனால் அவருக்கு ஆப்பு, கோவை மாவட்ட வன அலுவலர்  வடிவில் வந்து நின்றது. அவரை உடனே பணியில் இருந்து விடுவிக்காமல் இழுத்தடித்து வருகிறார். இதனால, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வனவர், மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். தலைமை நினைச்சாலும் கீழே இருப்பவர்கள்  தொல்லை தாங்க முடியல... பைசா கேட்டா கொடுத்துட்டு போறேன்... கேட்கவும் மாட்டேன்கிறாங்க.. அனுப்பவும் மாட்டேன்கிறாங்க என்று அவர் புலம்புகிறார்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தீபாவளி கூட வந்துடும் போலிருக்கு... தமிழகத்துக்கு பாஜ தலைவர இன்னும் போடாம இருக்காங்களே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘காலியாக இருக்கும் தமிழக பாஜ மாநில தலைவர் பதவியை பிடிக்க  தலைவர்களிடையே கடும் போட்டியாம். தென்மாவட்டம், வடக்கு மாவட்டத்தை தொடர்ந்து, தற்போது மேற்கு மாவட்டத்தில் இருந்தும் போட்டி எழுந்துள்ளது. இப்பகுதியை  சேர்ந்த இருவர் ரேஸில் குதித்துள்ளனர். ஒருவர், மத்திய அமைச்சர் மூலமாக காய் நகர்த்தி வருகிறார். இன்னொருவர், தனக்கு இருக்கும் அனுபவத்தை கருவியாக கொண்டு, டெல்லியில் முகாமிட்டு, தனது பணியை ஜரூராக செய்து வருகிறார்.  மேற்கு மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு என்ற தகவல் வெளியாகி, காற்றில் உலா வருகிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இடைத்தேர்தலில் யாருக்கு வசூல் வேட்டை...’’ என்றார் பீட்டர் மாமா.
‘நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை காட்டி கூட்டுறவுத்துறையில் கட்டாய வசூல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறதாம். மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், நகர வங்கிகள், நிலவள வங்கிகள், வேளாண்  உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், பிரதம பண்டக சாலைகள், நுகர்வோர் பண்டகசாலைகள் ஒவ்வொன்றில் இருந்தும், ₹10 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை வசூலித்து தர வேண்டுமென்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம். ஒவ்வொரு சங்க  செயலாளரும் கட்டாயம் தர வேண்டுமென்ற நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனராம்.
ஒவ்வொரு துணைப்பதிவாளர் அலுவலகத்திலும் வசூலித்து, மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகத்தில் தர வேண்டுமாம். மாவட்ட இணைப்பதிவாளர், ‘மேல்மட்டத்தில்’ ஒப்படைக்கும் வேலையை செய்ய வேண்டுமாம்... உதாரணமாக,  விருதுநகர் மாவட்டத்தின் 185 சங்கங்களில் இருந்தும் ₹2 கோடி வரை வசூலித்து தரவேண்டுமென்ற இலக்கு நிர்ணயித்து, பாதியளவிற்கு வசூல் நடந்துருச்சு... இடைத்தேர்தல் வரும் போதெல்லாம் தேர்தலை மையமாக வைத்து சங்கங்கள்,  பொருட்கள் சப்ளை செய்வோர், லாரி குத்தகைதாரர்கள் என மாநிலம் முழுக்க சுமார் நூறு கோடி வரை வசூல் வேட்டை நடத்துவது ‘வழக்கமான நிகழ்வாக’ மாறிப் போயிருச்சாம்பா... இடைத்தேர்தல் வரும்போதெல்லாம் எங்களைத்தான்  நோண்டி, நொங்கெடுக்கின்றனர். நாங்கள் என்ன செய்ய... மக்களுக்கான விநியோகத்தில் கை வைத்துதான் தர வேண்டியிருக்கிறது என்று ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் புலம்பல் ஓங்கி ஒலிக்கிறதாம்... அதை சென்னையில் உள்ள  மேலிடத்துக்கு தகவலாக பாஸ் செய்து இருக்காங்களாம்... நாங்க எத்தனை பேருக்கு பணத்தை கொடுக்கிறது... இனியும் கொடுக்க வேண்டும் என்றால் என் மனைவி நகை, வீடு போன்றவற்றை விற்றுதான் தரணும் என்று அதிகாரிகள் புலம்பி  தள்ளுவதாக ஊழியர்கள் பதற்றத்துடன் பேசிக் கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காக்கி வட்டார தகவல் ஏதாவது உண்டா..’’
 ‘‘வேலூர் செங்குட்டையில் ஜெயமான நிலவின் பெயரை கொண்டவரின் கடைக்கு சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ₹50 ஆயிரம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து கடையின் உரிமையாளர்  கொடுத்த தகவலின்பேரில், மேலும் சில இடங்களில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தார்களாம். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே சென்னையில் இருந்து போலீஸ்  உயரதிகாரிகள் போனில் தொடர்பு கொண்டு பிடிபட்ட குட்கா பொருட்களை உடனடியாக விடுவியுங்கள் என்று உத்தரவிட்டார்களாம். இதனால், அதிர்ந்து போன போலீசார் குட்கா பொருட்களை கடையின் உரிமையாளரிடமே  ஒப்படைத்துவிட்டார்களாம். இத நினைச்சு காக்கிகள் புலம்பி வர்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்