SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீலகிரியில் நிலச்சரிவு; கொடைக்கானலில் ராட்சதமரம் விழுந்தது கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு: பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் மறியல்

2019-10-18@ 00:28:11

திருவண்ணாமலை: பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி 37 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு  பருவமழை நேற்று முன்தினமே  தொடங்கி விட்டது. நீலகிரி, கோவை, கொடைக்கானல், புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 4 நாட்களுக்கு முன்னதாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலையில் பெய்த  கனமழையால், நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள 20 வீடுகளிலும், தாமரை நகர் குடியிருப்பு பகுதியில் 30 வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது. கால்வாய்  சீரமைத்து மழை வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை.

அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தாமரை நகர் மற்றும் வேட்டவலம் சாலை ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் தாமதமாக நகராட்சி ஆணையர் சுரேந்தர் உள்ளிட்டோர் வந்தனர். அப்போது, அதிகாரிகளை  முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். நிலச்சரிவு: நீலகிரி மாவட்டத்தில் 6-வது நாளாக நேற்றும் மழை  பெய்ததால்  குந்தாபாலம், மெரிலேண்டு உள்ளிட்ட 37 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக, மஞ்சூர்-ஊட்டி-குன்னூர், கிண்ணக்கொரை, அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிக்கும் கிராமங்களுக்கும் செல்லும் பொதுமக்கள்  அவதியடைந்தனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மஞ்சனக்கொரை  செல்லும் சாலை சேதமடைந்து போக்குவரத்து பாதித்தது. இதனால், நகராட்சியை கண்டித்து ஊட்டி-இத்தலார் சாலையில் சுமார் 200 பேர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஊட்டி  நகராட்சி கமிஷனர் நாராயணன் சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தார்.

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று ஒரே நாளில் 12 செ.மீ. மழை பதிவானது. இதனால் கொடைக்கானல் ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏரிச்சாலையில் உள்ள கடைகளில் தண்ணீர் சூழ்ந்து வியாபாரிகள்  அவதிக்குள்ளாயினர். மேலும், மச்சூர் பகுதி வத்தலக்குண்டு சாலையில் மிகப்பெரிய ஒரு ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. 2 மணிநேரம் போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதேபோல், வேலூர், திருச்சி  மாநகர்,  தஞ்சை திருவாரூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்டமாவட்டங்களிலும் மழை பெய்தது.

சுருளி அருவியில் குளிக்க தடை
தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி  பகுதியில் கைலாசநாதர் குகை, பூதநாராயணன் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில், வேலப்பர் கோயில், சுருளிமலை ஐயப்பன் கோயில், கன்னிமார் கோயில் புகழ் பெற்றவை. இதனால்  ஏராளமான சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் சுருளி அருவிக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். கனமழை காரணமாக அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. எனவே, பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தற்காலிக  தடை விதித்துள்ளனர்.

ஊட்டி மலை ரயில் 3 நாள் ரத்து
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வெள்ளி) முதல் 20ம் ேததி வரை 3 நாட்களுக்கு  மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் ரத்து செய்யப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • watervapormoon

  வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

 • kuwaitcamelRace

  குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

 • amazonTraders

  Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

 • dubaiairshow2019

  துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

 • LAautoshow

  லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டோ ஷோ: பார்வையாளர்களை அரசவைத்த BMW, Mercedes கார்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்