SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உற்பத்தி 50 சதவீதம் குறைப்பு: விசைத்தறிகளில் நெய்யப்பட்ட ரூ1,200 கோடி துணிகள் தேக்கம்: 10 லட்சம் பேர் பாதிப்பு

2019-10-14@ 20:01:25

சோமனூர்: விசைத்தறி துணிக்கு விலை கிடைக்காததால் தமிழகத்தில் ரூ.1,200 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தியை 50 சதவீதம் குறைத்துள்ளனர். இது மேலும் அதிகரிக்க உள்ளதால் இத்தொழிலை சார்ந்துள்ள 10 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். விசைத்தறி துணி நெய்வதற்கு தேவையான நூல்களை நூற்பாலைகளிடமிருந்து பெற்று, அவற்றை சைசிங் மில்கள் மூலம் பாவுநூல்களாக மாற்றுகின்றனர். பின்னர் அவற்றை இவர்கள் கூலிக்கு நெசவு செய்யும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்களிடம் உள்ள சுமார் 5 லட்சம் விசைத்தறிகளுக்கு வழங்குகின்றனர். விசைத்தறியாளர்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் நெய்து ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு வழங்குகின்றனர். அதைப்பெறும் உற்பத்தியாளர்கள் துணிகளை தமிழ்நாடு உள்பட வட மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த துணிகளை ப்ளீச்சிங், டையிங், பிரிண்டிங் செய்து மதிப்பு கூட்டப்பட்ட துணிகளாக உருவாக்கி, தலையணை உறை, திரைச்சீலை, படுக்கை விரிப்பு, நைட்டி, சட்டைகள், பேண்ட்கள் உருவாக்கப்படுகிறது.

கடந்த சில மாதமாக பல்வேறு நாடுகளிடையே நிலவும் தொழில் போட்டியாலும், பஞ்சு நூல் இறக்குமதியை சீனா குறைத்ததாலும், இந்தியாவின் நூல் ஏற்றுமதி சரிந்து விலையும் குறைந்துள்ளது. இதனால் விசைத்தறிகளில் நெய்யப்படும் துணிகளுக்கான விலை மீட்டருக்கு ரூ.4 வரை சரிந்துள்ளது. இதனால் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க உற்பத்தி செய்யப்பட்ட துணிகளை விற்பனை செய்யாமல் இருப்பு வைத்துள்ளனர். இதனால் ஒவ்வொரு ஜவுளி உற்பத்தியாளரிடமும் கோடிக்கணக்கில் துணிகள் தேங்கி உள்ளது. அவற்றை விலை சீராகும்போது விற்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இதனால் விசைத்தறி துணி உற்பத்தி குறைக்கப்பட்டு வருவதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், நூற்பாலை தொழிலாளர்கள் என 5 லட்சம் பேர் நேரிடையாகவும், சார்பு தொழில்களில் மறைமுகமாக உள்ள 5 லட்சம் பேர் என மொத்தம் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு தறியின் மூலம் 50 மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. 5 லட்சம் விசைத்தறிகளில் 2.50 கோடி மீட்டர் உற்பத்தியாகிறது. இதன் விைல சராசரியாக மீட்டருக்கு ரூ.25 வீதம் ஒரு நாளைக்கு ரூ.62.50 கோடி துணி உற்பத்தியாகிறது. ஒரு மாதத்தில் ரூ.1,625 கோடிக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 50 சதவீதம் விற்பனையாகும். 50 சதவீதம் இருப்பில் இருக்கும். ஆனால் கடந்த 3 மாதமாக தொடர்ந்து விலை இல்லாததால், இருப்பு சதவீதம் அதிகரித்து வந்தது. இதனால் உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைத்தோம். எனினும் தற்போது சுமார் ரூ.1,200 கோடி அளவில் துணிகள் தேக்கமடைந்துள்ளது.’ என்றனர். இதுகுறித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கூறுகையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 சதவீத உற்பத்திக்கு தேவையான பாவுநூலை மட்டுமே கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். உற்பத்தியை குறைத்துள்ளதால் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நிர்ணய கூலியையும் குறைத்துள்ளனர். ஏற்கனவே நிர்ணய கூலி வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் குறைத்து வருவதால் நெசவுக்கூலி கட்டுப்படியாகாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailnewzealand

    நியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்

  • petroliranprotest

    பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

  • christmascele

    லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

  • ausfire2011

    ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

  • goalmineexplodechina

    சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்