SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனியாக வசிக்கும் வயதானவர்களா? அதுல்யா உங்களை பார்த்துக்கும்!

2019-10-09@ 17:20:10

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் வளர்ந்து வேலைக் காரணமாக வெளிநாட்டில் செட்டிலாகி இருப்பார்கள். இங்கு பெற்றோர்கள் மட்டும் தனியாக இருப்பார்கள். வருடத்திற்கு ஒரு முறை வெளிநாட்டில் இருக்கும் மகனையோ அல்லது மகளையோ சென்று பார்ப்பது தான் இவர்களின் வழக்கமாக இருக்கும். இவர்களுக்கு அங்கு முழுமையாக செட்டிலாக விருப்பமிருக்காது. அதே சமயம் இங்கு தனியாக இருக்கவும் கொஞ்சம் அசவுகரியமாக இருக்கும். வயதான காரணத்தால் இவர்களை பார்த்துக் கொள்ள ஒருவர் தேவைப்படும். இவர்களின் தேவைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு துவங்கப்பட்டது அதுல்யா அசிஸ்டெட் லிவ்விங். தற்போது சென்னையில் மட்டுமே மூன்று கிளைகளாக இயங்கி வரும் இதனை கிருஷ்ண காவ்யா நிர்வகித்து வருகிறார்.

‘‘மேனேஜ்மென்ட் துறையில் படிப்பை முடிச்சிட்டு, ஹெல்த் கேர் துறையில் 13 வருஷமா வேலை பார்த்து வந்தேன். அந்த துறையில் இருந்ததால் அதில் மக்களின் தேவை என்ன என்று புரிந்தது. அதனால் அதை நான் தனியாக செயல்படுத்த நினைத்தேன். முதலில் ஹெல்த் கேர் குறித்து கன்சல்டிங் மட்டுமே செய்து வந்தேன். அதாவது ஒருவர் மருத்துவமனையை துவங்க வேண்டும் என்றால், அதை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்ற ஆலோசனை வழங்கி வந்தோம். அதாவது மருத்துவமனையை ஒரு தொழிலாக எவ்வாறு துவங்கலாம் என்பது முதல் அதை செயல்படுத்துவது குறித்து அனைத்தும் செய்து தருவது தான் எங்களின் வேலை. மருத்துவமனையுடன் இணைந்து செயல்பட்டு வந்த போது தான், அங்கு சிகிச்சைக்காக வரும் வயதானவர்களின் பிரச்னைகள் பற்றி தெரிய வந்தது.

இவர்களால் எல்லா நேரத்திலும் மருத்துவமனைக்கு வரமுடியாது. சில சமயம் வீட்டில் நர்சிங் உதவி தேவைப்படும். சிலருக்கு பிசியோதெரபி ஒரு சிலருக்கு... ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக ஒவ்ெவாரு முறையும் அவர்கள் மருத்துவமனை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதை தவிர்க்க இவர்களுக்காக இந்த சேவையை அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து செய்து கொடுத்துவந்தோம்’’ என்றவர் அது தான் அசிஸ்டெட் லிவ்விங் கான்செப்டிற்கு ஒரு வழிகாட்டியாக அமைந்ததாக தெரிவித்தார். ‘‘இந்தத் திட்டத்திற்கு முழு காரணமாக இருந்தவர்கள் இரண்டு பேர். வயதான தம்பதியினரின் மகன் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். அவர்கள் வீட்டிற்கு மருத்துவ சேவைக்காக சென்ற போது, அவர்கள் ‘எல்லா வசதியும் இருக்கும் ஒரு அமைப்பு இருந்தா சொல்லுங்க. நாங்க இந்த வீட்டில் இருந்து அங்கு வந்து செட்டிலாயிடுறோம்’’ன்னு சொன்னாங்க. அவர்களின் அந்த திட்டத்தை குறித்து யோசனை இருந்தது.  இதற்கிடையில் நடைபெற்ற மற்றும் ஒரு சம்பவம் தான் இதற்கான வேலையை ஆயத்தப்படுத்தியது.

இவர்களை போல வயதான தம்பதியினர். இங்கு தனியாக வாழ்ந்து வந்தனர். அதில் வீட்டுத் தலைவன் காலமாகிட்டார். மகனோ வெளிநாட்டில். அம்மாவிற்கு அங்கு செல்ல விருப்பமில்லை. மகனுக்கு அம்மாவை தனியாக விட மனமில்லை. அவர்கள் தங்குவதற்கு ஏதாவது பாதுகாப்பான இடம் உள்ளதா என்று விசாரித்தார். இங்கு பெரும்பாலும் முதியோர் இல்லங்கள் தான் உள்ளன.அவர்களை வசதியாகவும் அதே சமயம் அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வசதியுள்ள இடங்கள் எங்கும் இல்லை. அதன் பிறகு தான் நாங்க தீவிரமா ஆய்வில் இறங்கினோம். அப்படி உருவானது தான் அதுல்யா அசிஸ்டெட் லிவ்விங்” என்றவர் இதன் இயக்கத்தை பற்றி விவரித்தார்.

‘‘எல்லா வசதிகளையும் கொண்ட தங்கும் இடம் தான் அசிஸ்டெட் லிவ்விங். வெளிநாடுகளில் இவை இயங்கி வருகிறது. சென்னைக்கு இது புதுசு. இங்கு எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் தங்கலாம். அதற்கான ஒரு குறிப்பிட்ட தொகையினை வாடகையாக தரவேண்டும். சிலர் வருட கணக்காக இருப்பாங்க. சிலர் மூன்று மாதம் சிலர் பத்து நாட்களுக்கு கூட இங்கு வந்து தங்கிவிட்டு செல்வாங்க. இவ்வளவு காலம் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்ைல. குடும்பத்தில் உள்ளவர்கள் திருமணத்திற்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை. வீட்டில் உள்ள பெரியவரால் பயணம் செய்ய முடியாது. அந்த தருணத்தில் ஒரு வாரம் அந்த முதியவர் இங்கு தங்கிவிட்டு சென்றார். இது முதியோர் இல்லமோ ரிடயர்மென்ட் ஹோமோ கிடையாது. வயதான காலத்தில் பிள்ளைகளால் பார்த்துக் கொள்ள முடியாத காரணத்தால் அவர்களின் மருத்துவம் மற்றும் உணவு என அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு இடம் தான். இங்கு 24 மணி நேரமும் மருத்துவ வசதி உண்டு. அதே போல் சாப்பாடு அவர்கள் சமைக்க வேண்டும் என்றில்லை. அவர்கள் இங்கு வரும் போதே அவர்களின் உணவு குறித்து உணவு ஆலோசகர் குறிப்பு எடுத்துக் கொள்வார். அதற்கு ஏற்ப அவர்களுக்கு உணவு வழங்கப்படும்.

தற்போது அரும்பாக்கம், பெருங்குடி மற்றும் டி.டி.கே சாலையில் இயங்கி வருகிறோம். இங்குள்ள ஒரு அப்பார்ட்மென்டில் தான் இவர்களுக்கான வசதியினை ஏற்படுத்தி வருகிறோம். ஒரு வீடு என்றால் அது ஒன்று, இரண்டு அல்லது மூன்று அறைகள் கொண்டதாக இருக்கும். அந்த வீடுகளை அப்படியே எடுத்துக் கொண்டு உள்ளலங்காரம் எல்லாம் வயதானவர்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்து தருகிறோம். அதாவது மூன்று அறைக் கொண்ட வீடு என்றால் அதில் ஒவ்வொருவரும் ஒரு அறையில் தங்கிக் கொள்ளலாம். மத்தபடி டைனிங் அறை மற்றும் லிவ்விங் அறை எல்லாம் மூவருக்கும் பொதுவானது. மேலும் சிறிய அளவில் சமையல் அறையும் உண்டு. அதில் சமைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சிலர் தண்ணீர் சூடாக குடிப்பாங்க. சிலர் டீ சாப்பிடுவாங்க. அது போன்ற சின்ன சின்ன வேலைகளை செய்து கொள்ளலாம். மற்றபடி அவர்களுக்கான மூன்று வேளை உணவும் அவர்கள் இருப்பிடத்திற்கு ஹாட் பாக்சில் வந்திடும். எல்லாவற்றையும விட இவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் அவர்களின் வசதிக்கு ஏற்ப அமைத்து இருக்கிறோம். இது தவிர எமர்ஜென்சி என்றால் அந்த நேரத்தில் உடனடியாக சிகிச்சை அளிக்க அனுபவமிக்க நர்சுகள் 24/7 இவர்களின் தேவைக்காகவே உள்ளனர்’’ என்றவர் இவர்களை எப்போதும் உற்சாகமாகவே வைத்துக் கொள்கின்றனர்.

‘‘சும்மா வீட்டில் இருந்தால் அவங்களுக்கு போர் அடிக்கும். அதனால் இவர்களை எப்போதுமே உற்சாகமாக வைத்துக் கொள்ள தேவையானதை செய்து வருகிறோம். காலையில் யோகாசனம், மூச்சு பயிற்சி இருக்கும். அதன் பிறகு சிலர் அவர்களின் சொந்த வேலைக்காக வெளியே செல்ல விரும்புவார்கள். அதற்கு நாங்க தடை விதிப்பதில்லை. ஆனால் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று எங்களுக்கு குறிப்பிட்டு செல்ல வேண்டும். சிலரால் தனியாக போக முடியாது, அவர்களுக்கு எங்களின் ஆட்கள் உடன் செல்வார்கள். மாதம் ஒரு முறை கோயில் அல்லது வேறு ஏதாவது இடத்திற்கு அழைத்து செல்வோம். எல்லா பண்டிகையும் கொண்டாடுவோம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமை காலை பஜன் இருக்கும். சில சமயம் இவர்களின் உறவினர்கள் அவர்களின் இல்லத்திற்கு அழைத்து செல்வார்கள். வெளிநாட்டில் இருந்து இவர்களின் பிள்ளைகள் வந்தால் அவர்களை இங்கு தங்க அனுமதிப்பதில்லை. ஆனால் இவர்களை அவர்களுடன் தங்கி வர அனுமதி தருகிறோம்.

எல்லாவற்றையும் விட எல்லாரும் ஒரே வயதினர் என்பதால் அவர்கள் ஒவ்வொருவரும் பல விஷயங்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்கிறார்கள். தற்போது சென்னையில் மட்டும் தான் செயல்பட்டு வருகிறோம். இங்கு வேறு இடங்களிலும் கிளைகள் துவங்கும் எண்ணம் உள்ளது. மேலும் படுத்த படுக்கையாக இருப்பவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர்களை பார்த்துக் கொள்ள என தனி ஒரு கம்யுனிட்டி அமைக்கும் எண்ணம் உள்ளது’’ என்கிறார் கிருஷ்ண காவ்யா.

-ஷம்ரிதி


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்