SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2016 தேர்தலில் திண்டிவனம், ராதாபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் தில்லுமுல்லு செய்து அதிமுக வெற்றி பெற்றது : திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

2019-10-05@ 12:10:10

புதுக்கோட்டை : சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த  புதுக்கோட்டை பரணி கார்த்திகேயன் தலைமையில் அமமுகவைச் சேர்ந்த 3000திற்கும் அதிகமானோர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கையால் இன்பதுரை தற்போது துன்பதுரையாகி விட்டார் என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், 2016ல் முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடந்திருந்தால் திமுக தான் ஆட்சியை பிடித்திருக்கும் என்றும் 2016 தேர்தலின் போது காலையிலேயே பிரதமர் மோடி வாழ்த்து சொன்னது தான் அதிமுகவின் வெற்றிக்கு காரணம் என்பதையும் சுட்டிக் காட்டினார். இதனிடையே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லை என்பதை நினைவுக் கூர்ந்த ஸ்டாலின், தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல, பாஜக ஆட்சி  தான் என்று குறிப்பிட்டார், மேலும் நிகழ்ச்சியின் ஸ்டாலின் உரையாடல் பின்வருமாறு :

*சுயமரியாதைக்காரர்கள் நாம். எனவே யாரும் காலில் விழாதீர்கள், எனக்கு அது பிடிக்காது. இனி யாரும் எனக்கு சால்வை, பூங்கொத்து அளிக்க வேண்டாம், புத்தகங்களை வழங்குங்கள்.

*திமுக என்பது ஜனநாயக கட்டமைப்பு கொண்ட கட்சி. பிற கட்சிகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்த ஆட்கள் இல்லை, ஆனால் திமுகவில் அந்த நிலை இல்லை.

*சூழ்ச்சி மூலமாகத்தான் அதிமுக வெற்றி பெற்றது. முறையாக தேர்தல் நடந்திருந்தால் இந்த நேரம் திமுக ஆட்சியில் இருந்திருக்கும்.தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே அதிமுகவிற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துவிட்டார், பிறகு அதிகாரிகள் என்ன செய்வார்கள்.

*விரைவில் உள்ளாட்சி தேர்தல் என்பது 'வரும் ஆனால் வராது' என்ற திரைப்பட வசனம் போல் இருந்து வருகிறது.

*2016 ராதாபுரத்தில் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இடைத் தேர்தலில் மட்டுமல்ல ராதாபுரத்திலும் திமுக தான் வெற்றி என செய்தி வரும்.

*2000 வாக்குகள் முன்னிலையில் இருந்த அப்பாவுவை திட்டமிட்டு அதிமுகவினர் தோற்கடித்துள்ளனர். அப்பாவுவை வெளியேற்றி 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டனர்.

*திண்டிவனம், ராதாபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றனர். மோடியின் தயவால் தான் அதிமுக வெற்றி பெற்றது. இல்லையெனில் திமுக தான் வென்று இருக்கும்.

*நீதிமன்ற மற்றும் இடைத்தேர்தல் தீர்ப்பிற்கு பிறகு நாங்குநேரி, விக்கிரவாண்டி, ராதாபுரம் என 3 சட்டமன்ற உறுப்பினர்களை திமுக கூட்டணி பெறும்.

*மறுவாக்கு எண்ணிக்கையில் திமுகதான் வெற்றி என சமூகவலைத்தளங்களில் வந்து விட்டது.

*சிறுபான்மை சமூகத்திற்கு ஆபத்து என கடிதம் எழுதியதற்காக மணி ரத்னம், ரேவதி உள்பட 49 பிரபலங்கள் தேசத் துரோக வழக்கு போடப்பட்டது கண்டனத்திற்குரியது.

*ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா அல்லது சர்வதிகார நாட்டில் வாழ்கிறோமா ? சிறுபான்மையினர் நலன் கருதி மோடிக்கு கடிதம் எழுதியது தேசத் துரோக குற்றமா ?

*மணி ரத்னம், ரேவதி உள்பட 49 பிரபலங்கள் மீதான தேசத் துரோக வழக்கை பிரதமர் மோடி வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 07-12-2019

  07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RioStarFerrisWheel

  பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • ambedh_day11

  இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

 • SydneyOrangeSky19

  ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

 • victoriafallsdry2019

  தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்