SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்: மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

2019-09-24@ 00:23:20

புதுடெல்லி: தீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை எம்பி  கனிமொழி மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேலிடம் நேற்று  கொடுத்துள்ளார்.
      மதுரையில் தொல்லியல் துறை அலுவலகம் அமைத்தல், அதேப்போல் கீழடியில் அருங்காட்சியகம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கனிமொழி எம்பி, மத்திய  கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேலிடம் நேற்று கொடுத்துள்ளார். அப்போது காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி. எஸ்.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.மத்திய அமைச்சரிடம் கொடுத்த கடிதத்தின் விவரம் வருமாறு,”தமிழர்களின் சங்க காலம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்கிற அரிய கண்டுபிடிப்பை கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் மூலம் அறிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது  கலாசார வரலாற்றில் மிகப்பெரும் திருப்புமுனை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.தமிழக தொல்லியல் துறை, `கீழடி முதல் வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ்  எழுத்து வடிவங்கள் கி.மு.6ம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது என்பதற்கு உரிய சாட்சியமாக அமைந்துள்ளது. குறிப்பாக கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழ்வாய்வில் தமிழர்கள் இலக்கியத்திலும் எழுத்துக் கலையிலும் 2,600  ஆண்டுகளுக்கு முன்னரே வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பதை, மறுக்க முடியாத சான்றாகத் தெரியவந்துள்ளது. பழங்கால தமிழர் நாகரிகம் என்பது, உலகின் மிகப் பழமையான நாகரிகம் என்று சொல்லப்பட்டு வந்த பிறகு, மேலும் வலு  சேர்க்கும் வகையில் இது உள்ளது. அத்துடன் இந்திய வரலாற்றையே இனி தமிழர்கள் வரலாற்றிலிருந்து தான் முன்னோக்கி பார்க்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இதைத்தவிரகீழடியில், நான்காவது முறையாக  நடத்தப்பட்ட அகழ்வாய்வின் கண்டு பிடிப்புகள், கரிம மாதிரிகள் உள்ளிட்டவைகள், அமெரிக்காவிலும், இத்தாலியிலும் உள்ள புகழ் வாய்ந்த சோதனை கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வேளாண் தொழில்களில் காளைகள் -  மிருகங்களை, தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் கலாசார பாரம்பரிய நிகழ்வுகள், வேளாண் சமூக அமைப்புகள் அப்போதே இருந்து வந்துள்ளதற்கான தேவையான அனைத்து சான்றுகளும் இந்த அகழ்வாய்வின் கண்டுபிடிப்பில் இருந்ததாகப் பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது.  அதனால் கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப் பட்டவைகளை வைப்பதற்காக உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப் பட வேண்டும். இது குறித்து மாநிலங்களவை மற்றும்  மக்களவையிலும் கனிமொழி  எம்பி, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். கீழடிக்குப் பிறகு அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் சனோவ்லி என்கிற இடம் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைப்போல் கீழடி  அகழாய்வுப் பகுதியும் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும் வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே இருக்கும் சென்னை  மண்டல அலுவலகத்துடன் தென் தமிழகத்திற்காக மதுரையிலும், தொல்லியல் துறை அலுவலகம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும். கீழடியில், அகழாய்வுப் பணிகள் துவக்கப்பட்ட அதே கால கட்டத்தில் தான் குஜராத் மாநிலம்  வாட் நகரிலும் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அங்கு மட்டும் அருங்காட்சியகம் அமைக்கப்பட தற்போது திட்டமிட்டுள்ளதை போல கீழடியிலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை, பார்வைக்கு வைக்க  அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும். மேலும் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க உதவிட அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதுரையில் தொல்லியல் துறையின் சார்பில் கிளை அலுவலகம்  ஏற்படுத்த வேண்டும்; கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்