SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பால் வெங்காயம் விலை கடும் உயர்வு

2019-09-23@ 00:34:37

* தமிழகத்தில் கிலோ 70 ரூபாயாக அதிகரிப்பு
* கையிருப்பு, ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு வருமா?

சென்னை: சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால், வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் கிலோ 70க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி நெருங்கும் நிலையில் இந்த திடீர் உயர்வு கலக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது. இதனால், இருப்பு வைக்கவும், ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நாட்டின் மொத்த வெங்காய விளைச்சலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் கிழக்கு மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தில் மேற்கு மாவட்டங்கள் ஆகியவைதான் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இந்த பகுதிகளில் பலத்த மழையால் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் மட்டுமே மார்க்கெட்களுக்கு சப்ளை ஆகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள லாசல்கான் மார்க்கெட்தான் நாட்டின்  மிகப்பெரிய வெங்காய மொத்த விலை சந்தை. இங்கு கடந்த வாரமே வெங்காயம் கிலோ 45ஐ எட்டி விட்டது. நேற்று முன்தினம் கிலோ 33 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இங்கு வெங்காயம் கிலோ ₹10 ஆக குறைந்து, விவசாயிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது. தற்போதைய விலை உயர்வு, 2015ம் ஆண்டுக்கு பிறகு புதிய உச்சமாக கருதப்படுகிறது. சில்லரை விலையில் ஒரு  கிலோ வெங்காயம் டெல்லியில் கிலோ ₹65, கொல்கத்தாவில் ₹56, மும்பை மற்றும் பெங்களூருவில் ₹50க்கு விற்கப்படுகிறது. சில பகுதிகளில் கிலோ ₹80 வரை சென்று விட்டது. சென்னையில் கிலோ 70ஐ தொட்டு விட்டது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: தினமும் 70 லாரிகளில் வந்து கொண்டிருந்த வெங்காயம் 30 லாரிகளாக குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ₹30க்கு  விற்கப்பட்ட வெங்காயம், தற்போது 20 அதிகரித்து கிலோ 50க்கு விற்கப்படுகிறது. மேலும் வரத்து குறைந்தால் மொத்த விலையே 70 வரை உயரலாம். வரத்து குறைவால் தான் இந்த விலை உயர்வு என்றார். வரும் நாட்களில் மொத்த விலை உயர்ந்தால் சில்லரை விலையில் கிலோ 100 வரை வரும் நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளது. ஓட்டல்களில் பிரியாணி, ஆம்லெட் போன்றவற்றிற்கு வெங்காயம் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு  வருகிறது. இந்த விலை உயர்வால் அவர்கள் விலையை உயர்த்தலாமா? என்று ஆலோசித்து வருகின்றனர். சில ஓட்டல்களில் ஆம்லெட்களில் வெங்காயத்தை குறைத்து முட்டைகோஸை பயன்படுத்த தொடங்கியுள்ளதாகவும் ஓட்டல்களில்  சாப்பிடுபவர்கள் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர்.

என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?
அவசர காலங்களில் சமாளிக்க, அரசு கிடங்குகளில் 56,000 டன் வெங்காயம் இருப்பு வைக்கப்படுகிறது. இதில் 16,000 டன் வெங்காயம் ஏற்கெனவே சந்தைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு விட்டது. டெல்லியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 200 டன்  வெங்காயம் குடோன்களில் இருந்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த வாரம் வெங்காயம் விலை உயர்ந்தபோதே மத்திய அரசு வெங்காயத்துக்கான குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 850 டாலராக நிர்ணயித்தது. அதோடு, 2,000 டன் வரை வெங்காயம் இறக்குமதிக்கு வரி ரத்து செய்யப்பட்டது.  ஆனாலும், விலை கட்டுப்படவில்லை. எனவே, அடுத்த கட்ட நடவடிக்கையாக, இருப்புக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

இருப்பு மிக குறைவு
மகாராஷ்டிரா மாநிலம் லாசல்கான் வெங்காய சந்தையில் கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 2,545டன் வெங்காயம் வரத்து இருந்தது. இது கடந்த வாரம் 1,200 டன்களாகவும், கடந்த வெள்ளிக்கிழமை 1,080 டன்களாகவும் குறைந்துவிட்டது.  விவசாயிகள் மற்றும் ஸ்டாக்கிஸ்டுகளிடம் இருப்பு 20 சதவீதம் மட்டுமே பாக்கி உள்ளது. அடுத்த மாத இறுதியில் சந்தைக்கு புதிய வரத்து வரும் வரை இதை வைத்துதான் சமாளிக்க வேண்டி வரும். எனவே இன்னும் 4 முதல் 6 வாரங்களுக்கு  விலை தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்