SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்னாச்சு கெடுபிடி?

2019-09-23@ 00:33:58

தனியார் கல்லூரிகளின் கட்டண கொள்ளையை தடுக்கிறோம். தகுதியில்லாதவர்கள் பணம் கொடுத்து மருத்துவ கல்லூரிகளில் சேர்வதை நிறுத்துகிறோம் என கூறிக்கொண்டு நாடு முழுவதும் மத்திய அரசு நீட் தேர்வை அமல்படுத்தியது.  ஆனால் உண்மையில் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. நீட் தேர்வுக்கு தனிப்பயிற்சி தேவைப்படுவதால் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டாகனியாகி விட்டது.  நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டுகளில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம், அதிலிருந்து விதிவிலக்கு தேவை என தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் போராடி  சலித்து விட்டன. நீட் தேர்வுக்கான கெடுபிடிகள் கொடுமையிலும் கொடுமை. தேர்வு எழுதும் மாணவர்களிடம் டிரஸ்கோட் என்ற பெயரில் ஆடை சோதனைகள் அரங்கேறும். துப்பட்டா அணியக்கூடாது. காதணி, மூக்குத்தி, வளையல் அணியக்கூடாது என  பெண்களுக்கு விதிமுறைகள் பட்டியல் வேறு. கைக்கடிகாரம், உணவுப்பண்டங்கள், தண்ணீர் பாட்டில் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது. முழுக்கை சட்டை, மெல்லிய ஆடைகள், ஷூ அணியக்கூடாது என்ற ஆயிரம் கெடுபிடி கொடுமைகளையும் கடந்தே மாணவர்கள் தேர்வெழுதி வெற்றி பெற வேண்டியதிருக்கிறது.

ஆனால் இதையெல்லாம் தாண்டியும் முறைகேடுகள் நீட் தேர்வில் சகஜமாக நடக்கின்றன. அதற்கு உதாரணம் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர் உதித்சூர்யா விவகாரம். தேர்வில் தொடங்கி, கலந்தாய்விலும்,  கல்லூரி சேர்க்கையிலும் முறைகேடு நடத்தி கல்லூரியில் சேர்ந்து ஒன்றரை மாதம் படித்தும் விட்டார். அம்மாணவருக்கு பதிலாக  வேறொருவர் மும்பையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, அங்குள்ள ஒரு மையத்தில்  தேர்வெழுதி, தேனி அரசு மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரிக்கு மட்டுமே உதித்சூர்யா சென்றுள்ளார். தற்போது பூதாகரமாக வெளியாகியுள்ள இவ்விஷயத்தின் பின்னணியில் சில கேள்விகள் எழுகின்றன.நீட் தேர்வுக்காக நடக்கும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, கலந்தாய்வு, கல்லூரி சேர்க்கை அனைத்தும் கண் துடைப்புதானா? ஆள் மாறாட்டத்துக்கும், முறைகேடுகளுக்கும் அதிகாரிகள் துணை போகின்றனரா? என்கிற கேள்விகள் நியாயமானவை.  எஸ்எஸ்எல்சி சான்றிதழ், பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ் அனைத்திலும் மாணவரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும். அதில் உள்ள புகைப்படமும், நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படத்தையும் ஒரு நிமிடம் கூர்ந்து  கவனித்திருந்தாலே இந்த தவறை தடுத்திருக்கலாம். வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் மும்பையில், தமிழக மாணவரின் பெயரில் தேர்வு எழுதுகிறார் என்றால் அங்கு தேர்வு கண்காணிப்புகள் எந்தளவுக்கு உள்ளது?ஆள் மாறாட்டத்தில் தொடங்கி வெளிவரும் தகவல்கள் நீட் தேர்வை கேலிக்கூத்தாக்குகின்றன. யானை போனதை ஆராயாமல், ஊசி நுழைந்ததை உற்றுப்பார்க்கும் நீட் தேர்வு விதிமுறைகள் நியாயமற்றது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்