SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூன்றாவது பட்ஜெட்

2019-09-22@ 00:10:50

ஆண்டுக்கு ஒரு முறை தான் நிதி ஆண்டின் துவக்கத்தில் ஆளும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும். ஆனால், மோடியின் இரண்டாவது ஆட்சியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எட்டே மாதத்தில் மூன்றாவது பட்ஜெட்டை தாக்கல்  செய்துள்ளார் என்று தான் கூற வேண்டும். சமீபகாலமாக அடுத்தடுத்து பெரும் சிக்கல்கள்.  முதலில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் சரிவு  என்று மத்திய அரசை சற்று கலங்கடித்தது. அது ஓரளவு சீராவதற்குள்,  அடுத்து  பொருளாதார சரிவு கடுமையாக பல துறைகளை பாதித்தது. வெளிப்படையாக முதன் முதலில் தெரியவந்தது ஆட்டோமொபைல் துறை தான். கார், இரு சக்கர வாகனங்கள், வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் என்று எல்லா வகையிலும்   விற்பனை தொடர்ந்து சரிந்ததை அடுத்து, தயாரிப்பு முடங்கியது. பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு அதிக அளவில் நடந்தது. இந்த துறை மட்டுமின்றி, ஜவுளி, ரியல் எஸ்டேட் என்று பல தயாரிப்பு துறைகள் முடங்க ஆரம்பித்தன. எல்லாவற்றுக்கும் காரணம், முன்பு மோடி அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் அடுத்து கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி முறை  தான் என்று அரசுக்கு புரிய இத்தனை நாளாகி விட்டது. இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது  என்று சர்வதேச  அமைப்புகள், சர்வதேச நிதியம் வரை சொன்னதும் விழித்து கொண்டது அரசு. தயாரிப்பு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார் நிதி  அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏற்கனவே ஒரு முறை வரிச்சலுகை அளித்த நிலையில் நேற்றுமுன்தினம், அதிரடி சலுகைகளை அறிவித்தார்.

மொத்தத்தில் நிறுவனங்கள் தனது வருமானத்தில் 34.9 சதவீதத்துக்கு பதில் 25.17 சதவீதம்  வரி கட்டினால் போதும்; புதிய நிறுவனங்களுக்கு 2023 வரை அதாவது தயாரிப்பை துவக்கும் வரை 15 சதவீத வரி தான். இப்படி சலுகைகளை  அறிவித்ததுடன், இன்னொரு பக்கம் ஜிஎஸ்டி வரியையும் குறைத்தார். ஓட்டலில் தங்கும் கட்டணம், கிரைண்டர், சமையல் புளி  என்று சிலவற்றுக்கு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாப வருவாய் அதிகரிக்குமே  தவிர, தயாரிப்பு அதிகரிப்போ, வேலைவாய்ப்பு பெருக்குவதோ போகப்போகத்தான் தெரியும் என்று விமர்சனம் எழத்தான் செய்கிறது. ஆனால், அரசின் இந்த வரிச்சலுகை  நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்று தொழில்துறை சார்ந்தவர்கள் திருப்தியாக கூறுகின்றனர். இன்னும் சலுகை அறிவிப்புகள் இருக்கிறதாம்; தாமதமானாலும், இப்போதாவது அரசு விழித்துக்கொண்டது அதற்குரிய பலன்களை தரும் என்று எதிர்பார்ப்போம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-10-2019

  15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MauCylinderBlastUP

  உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • NorthEastSyriaTurkey

  சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

 • DutchKingIndiaVisit

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

 • SaddleridgeFire19

  கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்