SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசாமில் 19 லட்சம் வெளிநாட்டினர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் குடிமக்கள் கணக்கெடுப்பு: மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அடுத்த அதிரடியால் பரபரப்பு

2019-09-20@ 00:03:12

புதுடெல்லி: அசாமில் தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம், இம்மாநிலத்தில் 19 லட்சம் வெளிநாட்டினர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, ‘நாடு முழுவதும் குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் அசாம் மாநிலத்தில் அதிகளவில் தங்கியுள்ளனர். இவர்களை கண்டுபிடித்து வெளியேற்றுவதற்காக அங்கு, ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது.  இதன் இறுதி பட்டியல் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 19 லட்சம் பேர் சேர்க்கப்படவில்லை. இந்த இறுதிப் பட்டியல் திருப்தி அளிக்கவில்லை என பல தரப்பினர் குற்றம்சாட்டினர். இந்த பட்டியலில் விடுபட்டவர்கள்  பீதியடைத் தேவையில்லை எனவும், ‘உண்மையான குடிமக்கள் தங்களுக்குரிய ஆவணங்களை வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களில் சமர்ப்பித்து பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். அதிலும், தீர்வு ஏற்படாவிட்டால் உயர் நீதிமன்றம், உச்ச  நீதிமன்றத்தை நாடலாம்,’ எனவும் அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் கூறினார்.

அசாமில் வெளியிடப்பட்ட என்ஆர்சி இறுதி பட்டியலில், உண்மையான குடிமக்கள் பலர் விடுபட்டுள்ளதாகவும், சட்ட விரோதமாக குடியேறியவர்களின் பெயர் என்ஆர்சி பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, ‘அசாம் மாநிலத்தில் வங்காள மொழி பேசும் மக்கள், கூர்க்கர்கள் பலர் என்ஆர்சி  பட்டியலில் விடுபட்டுள்ளனர். அவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என வலியுறுத்தினார். இந்நிலையில், இந்துஸ்தான் என்ற இந்தி பத்திரிக்கை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநிலத்தில் மட்டும் அல்ல, நாடு முழுவதும் கொண்டு வருவோம் எனவும், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் பாஜ வாக்குறுதி  அளித்துள்ளது. இது குறித்து தேர்தல் பிரசார கூட்டங்களில் நான் தவறாமல் பேசினேன். என்ஆர்சி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துதான் கடந்த மக்களவை தேர்தலில் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதனால், என்ஆர்சி திட்டம் நாடு  முழுவதும் அமல்படுத்தப்படும். பட்டியலில் இடம் பெறாதவர்கள், சட்டப்படி நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர்.

 அசாம் மாநிலத்தில், என்ஆர்சி பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தை அணுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள், சட்ட உதவிகளை அசாம் அரசு செய்துள்ளது. எந்த நாட்டிலும், பிறநாட்டினர்  தங்குவதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. அமெரிக்காவில் போய் நீங்கள் குடியேற முடியுமா? உங்களால் முடியாது. நீங்கள் இங்கிலாந்து, நெதர்லாந்து, ரஷ்யாவில் போய் தங்க முயற்சித்து பாருங்கள். யாரும் உங்களை அனுமதிக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது, பிற நாட்டினர் இந்தியாவில் எப்படி தங்க முடியும்? இது புரிந்து கொள்வதற்கு மிக  எளிதானது. இதில் அரசியல் எங்கே இருக்கிறது? நாட்டு மக்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற வேண்டிய தேவை இப்போது வந்து விட்டது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gujarath_111

  குஜராத் மாநிலம் சூரத்தில் 10 மாடிகள் கொண்ட ஜவுளி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

 • srilankaa_twinnss1

  இலங்கையில் உலக சாதனை நிகழ்ச்சியாக அதிக இரட்டையர்கள் ஒன்று கூடிய மாபெரும் நிகழ்வின் மெய்சிலிர்ப்பூட்டும் படங்கள்

 • iyesu_kudaamuu1

  இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

 • nirmalaa_alawaa1

  டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

 • telanagana_leopardd1

  தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்