SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலில் இலையை பகைத்து ெகாண்ட ஓய்வூதியர் வீட்டின் முன்பு நிழற்கூரை முளைத்த கதையை சொல்கிறார் : wiki யானந்தா

2019-09-18@ 00:11:36

‘‘அண்ணனை பகைத்து கொண்டால் என்ன ஆகும் தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ம். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கூலநாயக்கன்பட்டி கிராமத்தின் ஒரு பகுதியில் வசிக்கும், ஒரு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் குடும்பத்தினர், கடந்த தேர்தலின்போது அதிமுகவிற்கு ஆதரவாக இல்லாமல், திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இதை இலை கட்சி அமைச்சரிடம் அடிப்பொடிகள் போட்டு கொடுத்து விட்டனர். இதனால் கடுப்பான அமைச்சரின் கண்ணசைவில் அந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் குடும்பத்துக்கு இடைஞ்சல் கொடுக்க அனுமதி கொடுத்தாராம். இதுதான் வாய்ப்பு என்று உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் பயணிகள் நிழற்கூரை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இந்த நிழற்கூரையை, மாஜி அரசு ஊழியர் வீட்டு வாசலை மறைத்து ரோட்டோரம் அமைக்க அமைச்சர் சிக்னல் கொடுத்துள்ளார். அதன்படி, பயணிகள் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வீடு, கடை, வணிக வளாகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றின் வாயிலை இடைமறித்து, பயணிகள் நிழற்கூரை அமைப்பது இல்லை, ஆனால், எனது வீட்டு வாயிலை வேண்டுமென்றே இடைமறித்து பயணிகள் நிழற்கூரை அமைத்துள்ளார்கள், இது பழிவாங்கும் நடவடிக்கை என அந்த மாஜி அரசு ஊழியர் புலம்பி தள்ளுகிறார்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோவையில டிரான்ஸ்பரை கண்டித்து அதிகாரிகள் ஏன் கொதித்து போய் இருக்காங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் உதவி ஆணையாளர்கள், நகரமைப்பு அலுவலர், உதவி நகரமைப்பு அலுவலர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் மீது தொடர்ச்சியாக மாமூல் வாங்குவதாக புகார்கள் வந்துகொண்டே இருந்தன. இதையடுத்து, இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மாநகராட்சி கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் உதவி ஆணையாளர்கள் மீது அங்கு பணிபுரியும் ஊழியர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதாவது, பைல்கள் எதையும் நகர்த்தாமல் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கிறார்களாம். மாமூல் கிடைக்கும் வரை இந்த பைல்கள் எங்கும் நகர்வது இல்லையாம். நகரமைப்பு துறையை சார்ந்த பைல்களை சரிபார்க்க நகரமைப்பு அலுவலர், உதவி நகரமைப்பு அலுவலர்கள் உள்ளனர். ஆனாலும், அந்த பைல்களையும் இவர்கள் விடுவதில்லையாம். இரு உதவி ஆணையாளர்களும் அன்றாடம் வாரி சுருட்டுவதாக இங்குள்ள ஊழியர்கள் தொடர்ந்து புலம்பி வருகிறார்களாம். நானே ராஜா, நானே மந்திரி என்ற பாணியில் இருவரும் உலா வருவதால் மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது...’ என்றார் விக்கியானந்தா.

‘‘போலீஸ்காரங்க அரசு வக்கீல்களை பார்த்து அலறுகிறார்களாமே... அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்டத்துல நடந்த சிறுமி பாலியல் பலாத்கார விவகாரத்துல முக்கிய குற்றவாளிய தப்பிக்கவிட்டதாக ஒரு சர்ச்சை கிளம்பிருக்கு. இதுசம்பந்தமா அரசு வக்கீல் ஒருத்தரு, டிஐஜி, ஐஜி, டிஜிபி, ஹோம் செகரட்டரிக்கு கடிதம் போட்டுருக்காரு. அதுல, சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றவாளிய தப்பவிட்ட 3 இன்ஸ், 3 டிஎஸ்பி, 3 எஸ்பி மேல நடவடிக்கை எடுங்கன்னு பரிந்துரை செஞ்சிருக்காரு.  இதனால ஆடிப்போன புகாருக்குள்ளான போலீஸ் அதிகாரிங்க, பீதியில இருக்காங்களாம். இப்போ ஒவ்வொருத்தரும் வெவ்வேறு மாவட்டத்துல டூட்டி பார்த்தாலும், சமீபத்துல ஒன்னா சந்திச்சு ரகசிய கூட்டம் போட்டுருக்காங்க. அப்புறமா இந்த விவகாரத்துல இருந்து எப்படியாவது காப்பாத்துங்கனு, தங்களுக்கு வேண்டப்பட்ட அரசியல்வாதிங்க கிட்ட சிபாரிசுக்கு நிக்கறாங்களாம். வழக்குப்பதிவு பண்ணும் போதும், குற்றச்சாட்டு பதிவு செய்யும்போதும் பொறுப்புல இருந்த ஒரே அதிகாரி தான், இவங்கள எல்லாம் ஒருங்கிணைக்குற வேலைய பார்க்குறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘அந்த அரசு வக்கீலை பாராட்டியே ஆக வேண்டும். சிறுமி விஷயத்தில் சில்லறை பார்க்கும் காக்கிகளுக்கு புத்தி புகட்ட வேண்டும். அப்புறம் வேலூர் மேட்டர் ஏதாவது இருக்கா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ம் இருக்கு. தமிழகத்தில் உள்ள டிடிசிபி எனப்படும் அரசு, நகர ஊரமைப்பு இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே பத்திரப்பதிவு செய்து வீட்டுமனைகளாக விற்பனை செய்ய முடியும். தமிழகத்தில் வீட்டுமனை பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்காக வேலூர் உட்பட 13 இடங்களில் டிடிபிசி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. வேலூர் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தின் கீழ் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள், வீட்டுமனை பிரிவுகள் போன்றவற்றுக்கான திட்ட வரைபட அங்கீகாரம், ஒப்புதல் அளித்தல் அனுமதியில்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பலரும் டிடிபிசியின் அனுமதி கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்பங்களுக்கு வேலூர் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் பணம் கொடுத்தால் மட்டுமே சாதகமான பதில் கிடைக்குமாம். இல்லையென்றால் விண்ணப்பத்தில் குறை இருப்பதாக கூறி திருப்பி அனுப்பி விடுவார்களாம்.

அல்லது அந்த விண்ணப்பங்கள் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்படுமாம். கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ₹3.28 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக அப்போதைய துணை இயக்குனர்(பொறுப்பு) சுப்பிரமணியன் உட்பட 11 பேரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு ₹2 லட்சம் லஞ்சம் வாங்கிய நகர ஊரமைப்பு துணை இயக்குனர் ஞானமணியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடந்து வருகிறது. அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடந்தாலும் இந்த அலுவலகத்தை பொறுத்தவரை திருத்தவே முடியாது என்பதுதான் ரியல் எஸ்டேட் அதிபர்களின் குரலாக உள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்