SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாழ்வான பிளாட்பாரம், குடிநீர் வசதியில்லை பாளை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

2019-09-17@ 12:40:04

நெல்லை: பாளை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பள்ளமான பிளாட்பாரம், பயணிகளுக்கு இருக்கை பற்றாக்குறை போன்ற குறைபாடுகளை போக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே தினமும் 7 முறை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல் இதே எண்ணிக்கையில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. செந்தூர் விரைவு ரயில் தவிற மற்ற ரயில்கள் அனைத்தும் பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இந்த மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரயிலில் பஸ்கட்டணத்தை விட பல மடங்கு குறைவாக இருக்கிறது. இதுபோல் சீசன் டிக்கெட் கட்டணம் மேலும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக நெல்லை- திருச்செந்தூர் மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக உள்ளது.

குறிப்பாக நெல்லை - திருச்செந்தூர் இடையே உள்ள முக்கிய ஊர்களான செய்துங்கநல்லூர், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, குரும்பூர், நாசரேத், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் அதிகம் பேர் சீசன் டிக்கெட் எடுத்து பயணிக்கின்றனர். இதுபோக திருச்செந்தூர் கோயிலுக்கு செல்பவர்கள் நாசரேத் சுற்றுபகுதிகளில் உள்ள சர்ச்களுக்கு செல்பவர்களும் பாசஞ்சர் ரயில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பாளை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எல்லா பாசஞ்சர் ரயில்களிலும் அதிகளவு பயணிகள் ஏறி இறங்குகின்றனர். பாளை, பெருமாள்புரம், என்ஜிஓகாலனி, மகாராஜநகர், சமாதானபுரம், கேடிசிநகர், மேலப்பாளையம் உள்ளிட்ட பாளையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து செல்பவர்கள் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

காலை 7.20 மணிக்கு பாளையை கடந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயிலிலும் காலை 8.40மணிக்கு திருச்செந்தூரில் இருந்து பாளையை கடந்து சந்திப்புக்கு செல்லும் ரயிலிலும் அதிகளவில் பயணிகள் ஏறி இறங்குகின்றனர். பாளை ரயில் நிலையத்திற்கு மாலை வந்து செல்லும் ரயில்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது இந்த வழித்தடத்தில் அதிகபட்சம் 5 பயணிகள் பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தன. அகல பாதையாக மாற்றப்பட்ட பின்னர் 8 பெட்டியாக மாற்றி தற்போது கூட்டத்திற்கு ஏற்ப அதிகபட்சமாக 11 பெட்டிகள் வரை இணைக்கப்படுகின்றன. பெண்களுக்காக தனி 2 பெட்டிகள் உள்ளன. தற்போது இந்த ரயில் நிலையத்தில் காலையில் மட்டும் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. பாளை ரயில்நிலையத்தை தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் நிலையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக பிளாட்பாரம் பிராட்கேஜ் ரயிலின் உயரத்திற்கு ஏற்ப சந்திப்பு ரயில் நிலையத்தில் இருப்பது போல் இல்லை. இதனால் பெண்கள், வயதான பயணிகள், சிறுவர்கள் ரயில் பெட்டிகளில் ஏறவும் இறங்கவும் மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு கழிப்பறைகள் தனித்தனியாக இருந்தாலும் எப்போதும் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. ரயில்கள் வரும் நேரத்திலாவது திறந்து வைக்கலாம்.

ரயிலுக்காக பயணிகள் காத்திருக்க போதிய இருக்கை வசதியில்லை. இதனால் பிளாட்பாரங்களில் நீண்ட நேரம் நிற்க முடியாமல் பெண்கள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும். ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்துவிட்டு பிளாட்பாரத்தில் ஏறும் படிக்கட்டுகளுக்கும் கூரைக்கும் இடையே உள்ளபகுதி தாழ்வாக இருப்பதால் சற்று வளர்ந்தவர்கள் கூட குனிந்து செல்லும் நிலை உள்ளது. டிக்கெட் கவுன்டர் பகுதியில் காத்திருப்பு இருக்கைகளில் ஒன்று ஆட்டம் கண்டுள்ளது. எனவே அதிக பயணிகள் பயன்படுத்தும் பாளை ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் உயர்த்துவது. மாலையிலும் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி, தட்கல் டிக்கெட் எடுக்கும் வசதி, கூடுதல் இருக்கைகள், மின்விளக்கு வசதிகள் போன்றவைகளை அமைக்கவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இந்த ரயில் நிலையத்திற்கு ரயில்கள் வந்து செல்லும் நேரத்தை கணக்கிட்டு முக்கிய பகுதிகளுக்கு நகர பஸ்களையும் இயக்கவேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிக்கு புதிய டாய்லெட்

பாளை ரயில் நிலையத்தில் மாற்று திறனாளிகளுக்கு உரிய வசதிகளுடன் புதிய டாய்லெட் கட்டும்பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனை பயணிகள் வரவேற்றுள்ளனர். இதுபோல் தேவையான பிற வசதிகளையும் செய்து முடிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

  • 15-10-2019

    15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்