SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘56’ ஆல் உங்களை தடுக்க முடியாது... ப.சிதம்பரம் பிறந்தநாளுக்கு மகன் கார்த்தி சிதம்பரம் கடிதம்

2019-09-17@ 01:10:47

புதுடெல்லி: பிரதமர் மோடியின் மார்பளவை சுட்டிக்காட்டி, ‘எந்த 56 ஆலும் உங்களைத் தடுக்க முடியாது’ என, பிறந்த நாளன்று சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதி உள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், கடந்த அக்.21ம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை, வரும் 19ம் தேதி வரை டெல்லி திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றக் காவலில் இருக்கும் ப.சிதம்பரத்துக்கு நேற்று 74வது பிறந்தநாள். தனது வாழ்க்கையில் முதல் முறையாக பிறந்த நாளை சிறையில் அவர் கழித்தார். வழக்கமாக தனது பிறந்தநாளை குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடும் ப.சிதம்பரம், கட்சித் தொண்டர்களை சந்தித்து வாழ்த்தை பெற்றுக்கொள்வார்.

அவரது பிறந்த நாளை யொட்டி, ப.சிதம்பரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரம், தனது தந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதி அதன் நகலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இரண்டு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில், ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு நடந்த பல்வேறு நிகழ்வுகளை விளக்கியதுடன், மத்திய பாஜ அரசின் 100 நாள் செயல்பாடுகள், பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்பளவை சுட்டிக் காட்டியும் விமர்சித்துள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று உங்களுக்கு 74 வயதாகிறது. எந்த 56 ஆலும் உங்களைத் தடுக்க முடியாது (தான் 56 அங்குல மார்பு உடையவர் என்பதை பிரதமர் மோடி தீவிரவாதத்துக்கு எதிரான பேச்சில் காட்டியுள்ளார்). தற்போது நாட்டில் மிகச் சிறிய விஷயங்களுக்குக்கூட பெரிதாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் பெரிய விஷயங்களின் கொண்டாட்டத்தைக்கூட நீங்கள் விரும்பியதில்லை.

நீங்கள் எங்களுடன் சேர்ந்து இல்லாத இந்த பிறந்தநாள் எப்போதும்போல இருக்காது. நாங்கள் உங்களை அதிகமாக மிஸ் செய்கிறோம். நீங்கள் இல்லாதது எங்கள் இதயங்களைக் கனமாக்குகிறது. எங்கள் அனைவருடனும் இணைந்து கேக் வெட்ட, நீங்கள் விரைவில் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம். டெல்லி ‘கேங்’கிற்கு முன்னால், நீங்கள் ஒருபோதும் ‘கப்சிப்’ என்று இருக்க மாட்டீர்கள். சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தீர்கள். ஆனால், அது முடியவில்லை. நாங்கள் மிகவும் பெருமையுடன் அன்றைய நிகழ்வுகளைப் பார்த்தோம். அதில் நிறைய நாடகங்கள் இருந்தன. விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதில் எந்த நாடகமும் இல்லை. ஆனால், அதன் பிறகுதான் பெரிய நாடகம் நடந்தது. இவ்வாறு, அந்த கடிதத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை எழுதி உள்ளார்.

‘இளைஞனாக உணரச்செய்துள்ளது’
தனது குடும்பத்தினர் மூலம் ப.சிதம்பரம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நண்பர்கள், கட்சி நிர்வாகிகள், நலம் விரும்பிகளது வாழ்த்துக்களை எனது குடும்பத்தினர் மூலமாக தெரிந்து கொண்டேன். இந்த வாழ்த்துக்கள் எனக்கு 74 வயதாகிவிட்டது என்பதை நினைவூட்டின. ஆனால் எனது மனதளவில் 74வயது இளைஞனாக உணர செய்துள்ளன” என்று கூறப்பட்டுள்ளது. சிதம்பரம் குறித்து கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “சிதம்பரம் அக்னி பரீட்சைக்காக சென்றுள்ளார். தன்னை குற்றவாளியில்லை என்று நிரூபித்து வெளியே வருவார்” என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

 • SouthPhilippinesEQ

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

 • 17-10-2019

  17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்