SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழுத்தம் வேண்டாமே!

2019-09-17@ 00:34:24

உலக அளவில் 40 வினாடிக்கு ஒருவரும், ஆண்டுக்கு 8 லட்சம் பேரும் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, உகாண்டா, தென் கொரியா உள்பட பல நாடுகளில் தற்கொலை  சம்பவங்கள் அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் சமீபத்தில் வெளியாகி உள்ளன.வேலையின்மை, தீராத நோய், வறுமை, தனிமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, காதல் தோல்வி, தொழில் நஷ்டம் என பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால், தற்கொலை முயற்சிக்கு மிக முக்கிய  காரணமாக அமைவது மன அழுத்தம்.மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையை விரும்புகின்றனர். அந்த தனிமையே நாளடைவில் தற்கொலை எண்ணத்தை தூண்டுவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேரும்,  தமிழகத்தில் 10 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மனம் விட்டு பேசினாலே பாதி பிரச்னை தீர்ந்து விடும். அதற்கான சூழ்நிலையை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தெளிவான  சிந்தனையும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டுமே தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

 தமிழகத்தில் கல்வி என்றைக்கு வியாபாரமாக மாறியதோ, அன்றைக்கே மாணவர்களின் தற்கொலைகளும் அதிகரித்து விட்டது. பொதுத்தேர்வு என்றாலே ஒருவிதமான பயம் சிறுவயதில் இருந்தே மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் தேர்வு  தோல்விகளை தாங்கிக் கொள்ள முடியாத மனநிலையில் மாணவர்கள் உள்ளனர். சிறிய பிரச்னைகளை கூட அவமானமாக கருதி கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். எந்தப் பிரச்னையையும் சமாளிக்கும் மன தைரியத்தை மாணவர்களுக்கு சிறுவயதில் இருந்தே உருவாக்க வேண்டும்.  இதில் பெற்றோருக்கு அதிக பங்குண்டு.ஏற்கனவே 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உள்ளது. தற்போது 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவயதிலேயே மாணவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை உள்ளதாக சமூக  ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மன அழுத்தத்தால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் பல்வேறு சிக்கல்களை குறுகிய காலத்திலேயே அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
கல்வி என்பது கூர்மையான அறிவாற்றலையும், சோர்வு அடையாத மனநிலையையும் வழங்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது. 5ம் வகுப்பில் பொதுத்தேர்வுக்கு பதிலாக மாணவர்களின் மன  தைரியம், சிந்தனைத்திறனை அதிகப்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வரலாம்.நோய்களை தீர்க்க மருந்து உண்டு. ஆனால் தற்கொலைக்கு…? மனிதர்கள் மட்டும் தான் தற்கொலை செய்கின்றனர். பிற உயிரினங்கள் தடைகளை தவிடுபொடியாக்கி வெற்றிக்கு முயற்சிக்கின்றன. இனி வாழவே முடியாது என்ற குறுகிய  வட்டத்திற்குள் செல்ல வேண்டாம். சவால்களை போராடி வெல்லலாம். எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாக இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்