SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 தொகுதி இடைத்தேர்தல் அச்சத்தில் இருக்கும் மூன்றெழுத்துகாரர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-09-15@ 04:36:44

‘‘நடராஜர் கோயில்ல திருமணம் நடத்த ரூ.2 கோடி கைமாறியதாமே. அப்டியா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலின் விதிப்படி, சன்னதியில்தான் திருமணம் நடத்த வேண்டும். இதற்கு மாறாக பல்வேறு அலங்காரங்கள், தோரணங்கள், இருக்கைகள், போன்ற ஆடம்பரத்துடன் தொழில் அதிபர் இல்ல திருமணத்தை நடத்தியுள்ளனர். ஆயிரங்கால் மண்டபத்தில் ஆன்மீக நிகழ்ச்சிகள் மட்டும்தான் நடத்தவேண்டும் என்ற விதி இருக்கும்போது, இந்த திருமணத்தை நடத்த கோயில் தீட்சிதர்கள் மற்றும் நிர்வாகிகள் எப்படி சம்பதித்தார்கள் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர். திருமணம் நடத்துவதற்கு ரூ.2 கோடிக்கு மேல் பணம் கைமாறியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதில் கோயில் உள்ளே அலங்காரம், கேமரா, சாப்பாடு என அனைத்தும் நடப்பதற்கு வாங்கப்பட்டுள்ளது.

பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து நடராஜர் கோயில் தீட்சிதர்களின் பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் பொது தீட்சிதர்கள் பலர் இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஆவேச குரல் கொடுத்தனர். இதனால் தீட்சிதர்கள் மூன்று அணிகளாக பிரிந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பட்டு தீட்சிதருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்துள்ளதாக மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பாஜக உள்பட அனைத்து கட்சியினரும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகர சிறையில கைதிகளுக்கு ராஜ மரியாதையாமே...’’
‘‘ திமுக பொருளாளர் துரைமுருகன் தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவராகவும் இருக்காரு.... அவரது தலைமையிலான குழு சமீபத்தில் மதுரை ஜெயில்ல ஆய்வு நடத்துச்சு... இதில் பல்வேறு முறைகேடுகள், அத்துமீறல்களை குழு கண்டறிந்ததாம்... அதிகரிக்கும் கைதிகள் மரணம், கைதிகள் விடுதலையில் பாரபட்சம் காட்டியது, 15 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்தவர்களை புறக்கணித்து, 10 ஆண்டு தண்டனை அனுபவித்தவர்களை, சலுகை காட்டி விடுதலை செய்த விதிமீறல் உள்பட பல்வேறு மூடி மறைக்கப்பட்ட அந்தரங்க விஷயங்களை அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு அலசினார்களாம்... இதனை பகிரங்கமாக வெளியிடாமல் அறிக்கையாக தயாரித்து அரசிடம் அளிப்போம். ஆய்வின் எதிரொலியாக மதுரை ஜெயிலில் நடந்துள்ள சம்பவங்கள் குறித்து சிறைத்துறை உயரதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினாங்களாம்...

அதைத்தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து சட்டவிரோத பொருட்களை பறிமுதல் செஞ்சாங்களாம்.... ஜாமீனில் வெளியே வந்த கைதியுடன் மது அருந்திய ஜெயில் அதிகாரி மற்றும் 2 ஜெயில் காவலர்கள் வேற சஸ்பெண்ட் செய்யப்பட்டாங்க... கைதிகள் மரணம் அதிகரிப்பு, கைதிகள் விடுதலைக்கு வேறு விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாம்... அதிரடி நடவடிக்கை பாய்வதால், அத்துமீறலுக்கு சட்டமன்ற குழு ஆப்பு வைத்து விட்டதாம்... அடுத்து என்ன நடக்குமோ என்று மதுரை ஜெயில் அதிகாரிகள் கதிகலங்கி போய் இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பா’ விட்டமினை எதிர்பார்க்கும் சேலம் நிர்வாகிகளை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இங்குள்ள 4 பகுதிக்கும் அதிமுக செயலாளருங்க இருக்காங்க. இதுல, தாய் பகுதியில இருக்குற ஒரு செயலாளரோட அலப்பறை தாங்க முடியலனு அந்த கட்சிக்காரங்களே புலம்பிட்டு இருக்காங்க. சொந்த ஊருக்கு வரும் தமிழக விவிஐபியை பார்த்து, எப்படியும் அந்த செயலாளரோட பதவிய பறிக்கணும்னு குறியா இருக்காங்களாம்... சம்பந்தப்பட்ட செயலாளரு, 3 வருசமா அந்த பொறுப்புல இருக்காரு. தேர்தல் நேரத்துல அவருக்கு கீழ இருக்குறவங்கள வைட்டமின் `ப’’ விஷயத்துல கண்டுக்கவே இல்லையாம். இப்போ, கூட்டுறவு சங்கத்துல வேல, ரேசன் கடையில வேலனு, மாவட்ட செயலாளருக்கே தெரியாம தனியா கல்லா கட்டிட்டு இருக்காறாம்...

தலைவரு ஒரு பகுதிக்கு செயலாளரா இருந்தாலும், 4 பகுதியில இருக்குற முக்கிய பெண் நிர்வாகிங்க கூட 24 மணிநேரமும் பேசி குதூகலமா இருக்காறாம். இத இப்படியே விட்டா சரியா படாதுனு யோசிச்ச அந்த பகுதிய சேர்ந்த வார்டு செயலாளருங்க, அவரோட பதவிய பறிக்கனும்னு ஆவலா இருக்காங்க. இதுக்காகவே, சமீபத்துல ஊருக்கு வந்த விவிஐபிய சந்திச்சு மனு கொடுக்க போனாங்களாம். ஆனா, விவிஐபி ஒரே நாள்ல தலைநகருக்கு போய்ட்டதால, அவரோட அடுத்த வருகைக்காக வழிமேல விழிவச்சு காத்துகிட்டு இருக்காங்களாம்... புகார் அளிக்கும் படலம் தொடங்கியாச்சு... ஆனால் அவரு மாசம் மாமூல் கட்டறதால... நடவடிக்கை வராது என்ற பேச்சும் அடிபடுது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இடைத்தேர்தலை நினைச்சு மூன்று எழுத்து விவிஐபிக்களும் மூன்றெழுத்து இனிஷியல்காரரும் கலக்கத்தில் இருக்காங்களாமே, அப்படியா... ’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வாக்காளர்களுக்கு ‘ப’ விட்டமின் கொடுத்து சமாளிக்க முடியாது. ஏன்னா இப்போ எதிர்பார்ப்பு பல மடங்கு வாக்காளர்களிடம் பல மடங்கு அதிகரித்து இருக்கிறதாம்... அதனால முக்கிய தலைவர்கள் சீட் கேட்க தயங்கறாங்களாம். அதாவது தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் கடந்த மே மாதமே தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

ஒரு தொகுதி எம்எல்ஏ பதவி காலியானால் அந்தத் தொகுதிக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். அதன்படி நாங்குநேரி தொகுதிக்கு வருகிற நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். இந்தத் தொகுதியில் ஏற்கனவே பனங்காட்டுப்படை கட்சி போட்டியிடுவதாகக் கூறி வேட்பாளரையும் அறிவித்து விட்டது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஆயத்தமாகி வருகிறது. அமமுக நெல்லை மாவட்டத்தில் சுருண்டு போன போதிலும் கட்சிக்கு சின்னம் கிடைத்தால் போட்டியிடுவதாக கிப்ட் காரர் கூறியுள்ளார். ஆனால் ஆளுங்கட்சியான அதிமுக மட்டும் இடைத்தேர்தலை கண்டு பதுங்குகிறதாம். இடைத்தேர்தல் முடிவு எப்படி வருமோ, என்பது தான் அந்தத் தயக்கத்திற்கு காரணமாம். இதனால் தேர்தல் அறிவிக்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என சைலண்ட் மூடில் மூன்றெழுத்துக் கார தலைவர்கள் உள்ளனராம். இடைத்தேர்தல் முடிவு பாதகமாக வந்தால் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்குமே என்ற அச்சம்தான் அதற்கு காரணமாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RoboChefOdisha

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

 • AIADMK48

  அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்