SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடு முழுவதும் ஒரே மொழி என்று கூறிய அமித்ஷாவுக்கு தலைவர்கள் கடும் கண்டனம்: மத்திய அரசின் மொழிவெறி கொள்கை முறியடிக்கப்படும் என எச்சரிக்கை

2019-09-15@ 02:58:44

சென்னை: நாடு முழுவதும் ஒரே மொழி என்று கூறிய அமித்ஷாவுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் மொழிவெறி கொள்கை முறியடிக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:  இந்தியா என்பது சுமார் 70 ஆண்டாக ஒரே நாடாக ஒன்றுமையாக உள்ளது. பாஜ தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளது  நடைமுறையில்  கண்டிப்பாக சாத்தியம் கிடையாது. இந்தியாவை ஒன்றாக வைத்து இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் மிகப்பெரிய தவறை செய்யாதீர்கள். ஏனெனில் தற்போது ஒன்றாக தான் நாம் இருந்து வருகிறோம். இதுபோன்ற அறிவிப்பால் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி விடாதீர்கள். தேசத்தின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் பேச்சாக அமித்ஷா கூறியது உள்ளது. இதனை அமல்படுத்த கண்டிப்பாக சாத்தியம் கிடையாது.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): இந்தியாவின் ஒற்றை மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறானது. இந்தி மொழி நாளில் இந்தியை உயர்த்திப் பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது. உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது. இந்தியாவுக்கு இந்தியை அடையாமாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட பிற மொழி பேசும் மாநிலங்களின் அடையாளங்களை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்க செயல்தானே? இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி என்பதாலேயே இந்தி அனைத்து மக்களையும் ஒருமைப்படுத்தி விடாது. பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும். உலகின் பல நாடுகளில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): பாஜ தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, ஒரே நாடு, ஒரே மொழி என்ற முறையில் இந்தி மொழியை எல்லா மாநிலங்களும் கற்க வேண்டும், பேச வேண்டும் என அவரது சுட்டுரையில் வலியுறுத்தியுள்ளார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தி மொழியை பிற மாநிலங்களில் திணித்து விடும்  முயற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்மொழிக்கு கேடு செய்யும் நோக்கத்தோடு, இந்தி மொழி திணிக்கப்பட்ட போது, தமிழகம் போர்க்களமானதை மறந்து விடக்கூடாது.

டிடிவி.தினகரன் (அமமுக பொது செயலாளர்): இந்தியாவின் ஒரே மொழியாக இந்தியை அடையாளப்படுத்த வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து ஏற்புடையதல்ல. வேற்றுமையில் ஒற்றுமையே உலக அரங்கில் இந்தியாவில் பெருமைமிக்க அடையாளம். இந்தியை விட தொன்மையும், வளமும், ஆளுமையும் மிக்க தமிழ் உள்ளிட்ட மொழிகள் நிறைந்த தேசத்தில் தொடர்ந்து இந்தியை திணிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மக்களிடம் வெறுப்பையே விதைவிக்கும். கடந்த கால வரலாறு சொல்லும் இந்த பாடத்தை புரிந்து கொண்டு இக்கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி தலைவர்): இந்திதான் இந்தியாவின் தாய்மொழி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. உண்மையில் இந்தி மொழி இந்தியா முழுமைக்கும் ஏற்ற மொழி இல்லை. இந்தி பேசுபவர்கள் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே. இந்தி என்பது வெறும் சொற்ப எண்ணிக்கையில் உள்ள மக்களே பேசிவருகின்றனர். குறைந்த மக்களால் பேசப்படும் ஒரு மொழி எப்படி இந்தியாவிற்கு பொது மொழியாகவும், 130 கோடி மக்களின் ஆட்சி மொழியாகவும் இருக்க முடியும்?. இந்தியாவின் பன்முக தன்மையை சிதைக்கும் தீய நோக்கத்துடன் இந்தி மட்டுமே இந்தியாவை அடையாளப்படுத்தும் மொழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாநில மொழிகளை ஆதிக்கம் செய்யும் வகையில் இந்தியை எந்த உருவத்தில் திணிக்க முயற்சித்தாலும், தமிழகத்தில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மனிதநேய மக்கள் கட்சி சளைக்காமலும், சலிக்காமலும் போராடும்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): மத்திய உள்துறை அமைச்சர் நாடு முழுவதும் ஒரே மொழி என்று கூறியிருப்பது ஏற்புடையதல்ல. மக்கள் அவரவர் தாய்மொழி, இணைப்பு மொழி மற்றும் விருப்ப மொழியாக எம்மொழியையும் கற்கலாமே தவிர ஒரே மொழி இந்தி மொழி என்பதை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் ஒரே தேசம், ஒரே மொழி என்று ‘‘இந்தி நாளான’’ இன்று (நேற்று) கூறியிருப்பது ஏற்புடையதல்ல. ஒரே தேசத்தில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தனிச்சிறப்பு உண்டு.

குறிப்பாக, 8வது அட்டவணையில் உள்ளபடி இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒரே நிலையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தி மொழியைக் கட்டாயப்படுத்துவது மக்களின் விருப்பமாக இருக்க முடியாது. முதலில் தாய்மொழி பிறகு பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கிலம் மற்றும் 3வது மொழியாக இந்தி உள்ளிட்ட விருப்பமான எந்தமொழியையும் யார் வேண்டுமானாலும் விரும்பி படிக்கலாம் என்பது தான் ஜனநாயகத்தில் மக்களின் விருப்பமாக இருக்க முடியும் என்பது தமாகாவின் கருத்து.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்