SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தர்மசாலாவில் முதல் டி20 தென் ஆப்ரிக்காவுடன் இன்று இந்தியா பலப்பரீட்சை: இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது

2019-09-15@ 00:16:09

தர்மசாலா: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி தர்மசாலா, இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது. விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் அரை இறுதியுடன் வெளியேறி ஏமாற்றமளித்த நிலையில், அடுத்து வெஸ்ட் இண்டீசுடன் நடந்த தொடர்களில் அபாரமாக வென்று உற்சாகமாக நாடு திரும்பியுள்ளது.'

சொந்த மண்ணில் விளையாடும் சீசனின் முதல் கட்டமாக பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்வதால், ‘கோஹ்லி & கோ’வுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியால், டி20 போட்டிகளைப் பொறுத்தவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். ஐசிசி டி20 தரவரிசையில் பாகிஸ்தான் (283), இங்கிலாந்து (266), தென் ஆப்ரிக்கா (262) அணிகள் முதல் 3 இடங்களில் உள்ளன. இந்திய அணி 262 புள்ளியுடன் 4வது இடத்தில் பின்தங்கியுள்ளது. தென் ஆப்ரிக்க அணியுடன் நடைபெறும் தொடரில் சிறப்பான வெற்றியை பெற்றால் தரவரிசையில் முன்னேற முடியும்.

மேலும், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியை தயார் செய்ய இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பேட்டிங் வரிசையில் 4வது இடத்துக்கு மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர் இடையே போட்டி நிலவுகிறது. ராகுல், ரோகித், பன்ட், ஆல் ரவுண்டர்கள் ஹர்திக், குருணல், ஜடேஜா என்று இந்திய அணி பேட்டிங் வரிசை மிக பலமாக அமைந்துள்ளது. பூம்ரா, புவனேஷ்வருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் தீபக், கலீல், நவ்தீப் வேகக் கூட்டணி எந்த அளவுக்கு எடுபடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

டு பிளெஸ்ஸி, அம்லா இல்லாத நிலையில், இளம் வீரர்களுடன் வந்துள்ள டி காக் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியும் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இவர்களின் பெரும்பாலான வீரர்கள் முதல் முறையாக இந்தியாவில் விளையாட உள்ளனர். காகிசோ ரபாடா, கேப்டன் டி காக், டேவிட் மில்லர் ஆகியோரின் அனுபவம் கை கொடுத்தால் மட்டுமே தென் ஆப்ரிக்க அணியால் நெருக்கடி கொடுக்க முடியும். இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால் ஆட்டம் மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சாய்னி. தென் ஆப்ரிக்கா: குவின்டான் டி காக் (கேப்டன்), ராஸி வான் டெர் டஸன், தெம்பா பவுமா, ஜூனியர் டாலா, பியார்ன் பார்ச்சுவன், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, அன்டில் பெலுக்வயோ, டுவைன் பிரிடோரியஸ், காகிசோ ரபாடா, டாப்ரைஸ் ஷம்ஸி, ஜார்ஜ் லிண்டே.

நேருக்கு நேர்:
* சர்வதேச டி20ல் இரு அணிகளும் இதுவரை 14 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 8-5 என முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.
* 2015ல் தரம்சாலாவில் நடந்த போட்டியில் இந்தியா 199 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 7 விக்கெட்டை இழந்து 19வது ஓவரில் இலக்கை எட்டியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்