SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-09-14@ 00:17:05

‘‘அண்ணன் பேரைச் சொல்லி தம்பி கல்லா கட்றாராமே..’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா... ஊசூர் அடுத்த தெளிவான ஊராட்சியின் செயலாளராக இருப்பவர் ஆளுங்கட்சி ஒன்றிய செயலாளரின் தம்பியாம். கேசவமான அவர் தனது அண்ணனின் பெயரை சொல்லியே அதிகாரிகளை மிரட்டி நிதியை சுருட்டும் வேலைகளில் ஈடுபட்டு வந்தாராம். இவர் மீது எத்தகைய புகார்கள் வந்தாலும் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லையாம். ஊராட்சி வேலைகள் அத்தனையையும் இவரே வேறு பெயர்களில் எடுத்து செய்வாராம். பசுமை வீடு, இந்திரா நினைவு குடியிருப்பு உட்பட எந்த நலத்திட்டங்களிலும் காசுதான் பிரதானம் என்று செயல்படுவாராம். இவரது அடாவடிகள் குறித்து இப்போதைய கலெக்டருக்கு தெரிய வந்ததும், அவர் மீது சஸ்பெண்ட் உட்பட துறைரீதியான நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாராம். ஆனால், அதிகாரிகளோ, ஆளுங்கட்சி ஒன்றிய செயலாளரான நாகத்தை பார்த்து நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாவட்டத்துக்கு மாஜி மந்திரியே பெஸ்ட் என்று சொல்கிறார்களாமே ஆளுங்கட்சிகாரர்கள்.. அது என்ன விஷயம்..’’ என்று ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.

 ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ‘மணி’யானவர். இவருக்கு ஒப்பந்தப்பணிகளுக்காக 7 முதல் 10 சதவீதம் வரையிலும் மாவட்டத்தில் கமிஷன் போய்ச் சேர்ந்ததாக புகார் இருந்தது. இப்போது இவருக்கு பதவி இல்லாது போனதால், ‘காவல் தெய்வம்’ பெயர் கொண்டவரான மாவட்டத் தலைமையின் கை ஓங்கி இருக்கிறதாம். குடிமராமத்து பணிகளின் கீழ் ஊராட்சிகளில் கண்மாய், ஊருணி மராமத்து பணிகளுக்கு உத்தரவு வந்திருக்கிறது. அத்தனை பணிகளுக்கும் 20 சதவீதம் வரையிலும் ‘கமிஷனை’ கறாராக கேட்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அதிமுகவினர், இந்த மாவட்டத் தலைமைக்கு, முன்னாள் மந்திரியே பரவாயில்லை என்று புலம்பி வருகின்றனராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கல்வித்துறை விஷயம் ஏதாவது இருக்கா...’’‘‘ஊதியக்குழு முரண்பாடுகள், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக அரசு திட்டமிட்டு பழி வாங்கி வருவதாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குமுறுகின்றனர். கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் அவர்கள் மீதான நடவடிக்கை பிற்காலங்களில் ரத்து செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது 8 மாதங்களாகியும் அவர்கள் மீதான ‘17 பி'' குற்றச்சாட்டு குறிப்பாணை, பணியிட மாறுதல் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் திரும்ப பெறப்படவில்லை. இதனால் பதவி உயர்வு நிலையில் இருந்த ஆசிரியர்களை பட்டியலில் கூட சேர்க்க மறுக்கப்படுகிறதாம்.

நல்லாசிரியர் விருதுக்கு கூட யாரையும் பரிந்துரை செய்யவில்லை. இந்த பிரச்னை ஆசிரியர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக உள்ளது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அனைத்து கல்வி மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி நடத்தி முடித்துள்ள ஜாக்டோ ஜியோ அடுத்த கட்டமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மீண்டும் அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஐந்து பவுன் செயினை அமுக்குன விவகாரம் இருக்கிறதா சொன்னியே..அதை எடுத்து விடு..’’ ‘‘கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர் விடுதி அருகே 5 பவுன் தங்க செயின் தரையில் கிடந்துள்ளது. இதை, அங்கு பணிபுரியும் செக்யூரிட்டி ஒருவர் கண்டெடுத்து, பிஆர்ஓ அலுவலக அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட அவர், இதுதொடர்பான தகவல் நாளை நோட்டீஸ் போர்டில் போடுவோம். சரியாக அடையாளம் சொல்லி, உரியவர்கள் பெற்றுக்கொள்ளட்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால், நோட்டீஸ் போர்டில் தகவல் வெளியிடப்படவில்லை. இதனால், கடுப்பாகிப்போன அந்த செக்யூரிட்டி, இந்த வி வகாரத்தை, மற்ற செக்யூரிட்டிகளிடம் சொல்லி, தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார். இறுதியில், இந்த விவகாரம், மொட்டை கடிதமாக மாறி, பல்கலைக்கழக பதிவாளர் கைக்கு சென்றது. அவர், விசாரணை களத்தில் குதிப்பதற்குள், பிஆர்ஓ ஆபீஸ் அதிகாரி, இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கி விட்டார்.
சம்பந்தப்பட்ட செக்யூரிட்டியை நேரில் அழைத்து, லெப்ட்-ரைட் வாங்கிவிட்டார். ஏதாவது உளறினால், வேலையை விட்டு தூக்கிடுவேன்... என ஆப்பு வைத்துவிட்டார். கடைசி வரைக்கும் ஐந்து பவுன் செயின் வெளியே வரவே இல்லை. பல்கலைக்கழக பதிவாளரும் இந்த விவகாரம் தொடர்பாக அழுத்தம் கொடுக்கவில்லை. நிலைமையை உன்னிப்பாக கண்காணித்த செக்யூரிட்டி, பைத்தியம் பிடித்தவர் போல் அலைகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Netaji_Subhash _Chandra_Bose_Airport In Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

  கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்