SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவகாசியை பாதுகாப்போம்

2019-09-13@ 00:19:32

தீபாவளி நெருங்குகிறது. பசுமை பட்டாசுகளை தயாரிக்க முன்வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான முழு முயற்சியையும் சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர். தீபாவளியன்று ஒரு நாள் மட்டும்தான் பட்டாசுகள் வெடிப்பு. அதன் பின்னர் பட்டாசுகளை சும்மா கொடுத்து வெடிக்கச் சொன்னாலும், இப்போதுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளாகிவிட்ட சிறுவர்கள் வெடிக்க மாட்டார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பசுமை பட்டாசுகள் என்பது, அதிக புகை, ஒலியை ஏற்படுத்தாதவை. பட்டாசுகள் என்றாலே இந்த இரண்டும் இருப்பதுதான் என்ற நிலையில், வெளிச்சம் இல்லாத விளக்கு என்ற பாணியில் பசுமை பட்டாசுகளை தயாரிக்க சிவகாசி தொழிலாளர்கள் பாடாய் பட்டுக் ெகாண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், பசுமை பட்டாசுகள் என்ற பெயரில் வண்ண, வண்ண மத்தாப்புகளும், வெடிக்காத பட்டாசு ரகங்களும் சீனாவில் இருந்து வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த பட்டாசுகள் பாதுகாப்பில்லாதவை என்பது ஒருபுறம் இருக்க, சிவகாசி தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் இவற்றை விலக்குவதுதான், மக்கள் அவர்களுக்கு செய்யும் ஒரு உதவியாக இருக்கும். சீன பட்டாசுகளை வாங்கினால், அதனால் குறிப்பிட்ட வியாபாரியை தவிர வேறு யாருக்கும் லாபம் கிடையாது. இதனால் அந்நாடு மேலும் வளம்பெறுமே தவிர, இந்தியா எந்த வகையிலும் வளராது. ஆனால், சிவகாசி தயாரிப்புகளை வாங்குவதால், உள்ளூர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வளம்பெறும். சீன பட்டாசுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. ஆனாலும், தீபாவளி சமயத்தில் சர்வசாதாரணமாக அவை விற்பனையில் இருந்தன.

இந்திய தொழில்களை பாதுகாக்க நினைத்தால், சீன பட்டாசுகள் எந்த வகையிலும் இந்தியாவில் நுழைய அனுமதி வழங்கக்கூடாது. பட்டாசு என்பது பல்வேறு தொழில் அமைப்புகளின் கூட்டு தயாரிப்பு என்பதை நினைவில் கொண்டு இதற்கான நடவடிக்கையை இப்போதே மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் மக்கள் பட்டாசுகளை வாங்கும்போது, அவை சிவகாசி தயாரிப்புதானா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து வாங்குவது அவசியம். இதற்கான பிரசாரத்தை பொதுநல அமைப்புகள் தொடங்குவதும், சிவகாசி தொழிலாளர்களுக்கு செய்யும் உதவியாகும்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்