SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்து: அனைவரும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் 3 பேர் மாயம் என புகார்!

2019-09-12@ 10:24:09

அரியலூர்: கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், அனைவரும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் 3 பேர் மாயமாகியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மேலராமநல்லூர் கிராமம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் மறுகரையில் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் மற்றும் கிராமங்கள் உள்ளது. தற்போது முக்கொம்பில் இருந்து 37,000 கனஅடி திறந்து விட்டுள்ளதால் கொள்ளிடத்தில் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் மேலராமநல்லூரில் உள்ள மாரியம்மன், விநாயகர், அனுமார் உள்ளிட்ட 5 கோயில்களின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கபி்ஸ்தலம், குடிக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 35 பேர், மேலராமநல்லூருக்கு நேற்று காலை படகில் சென்றனர். பின்னர் விழா முடிந்து மாலையில் ஒரே படகில் 35 பேரும் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் நடுவே வந்தபோது படகு திடீரென கவிழ்ந்தது. இதில் ஆற்றின் நடுவே இருந்த நடுத்திட்டில் ஏறி 24 பேர் பத்திரமாக நின்று கொண்டனர். பார்வதி (55), செல்வநாயகி (50) உள்ளிட்ட 11 பேர் படகை பிடித்தபடி தண்ணீரில் தத்தளித்தனர். இதை மேலராமநல்லூரை சேர்ந்த ஆற்றின் கரையோரம் நின்று பார்த்து அதிர்ச்சியடைந்த 15 பேர் விரைந்து தண்ணீரில் குதித்து நீந்தி சென்று கவிழ்ந்த படகை அரையத்தமேட்டு கரைக்கு தள்ளி சென்றனர்.

இதுபற்றி, தகவல் கிடைத்ததும் பாபநாசம் தீயணைப்பு துறையினர் மற்றும் தஞ்சை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட 11 பேரையும் ஒரு காரில் ஏற்றி கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து, படகில் சென்ற 35 பேரும் மீட்கப்பட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார். இந்நிலையில், அப்படகில் 38 பேர் சென்றதாகவும், தற்போது வரை 3 பேர் கிடைக்கவில்லை எனவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பட்டுக்குடியை சேர்ந்த சுயம்பிரகாசம், கருப்பூரை சேர்ந்த ராணி, அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டையை சேர்ந்த பழனிசாமி ஆகிய 3 பேர் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மூவரையும் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்