SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீண்டும் சர்ச்சை

2019-09-12@ 01:22:19

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீட்டிற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் சென்று விட்டு முதல்வர் எடப்பாடி நாடு திரும்பியிருக்கும் வேளையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு  மூலம் இதுவரை தமிழகம் பெற்ற முதலீடு தொடர்பான ஆர்டிஐ தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. 2015 செப்டம்பர் 9,10ம் தேதிகளில் நடந்த இந்த மாநாட்டில் 9 நாடுகள், 23 பங்குதாரர் நிறுவனங்கள் பங்கெடுத்தன. இதில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மொத்தம் ₹2.42 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், அதன்  மூலம் 4.70 லட்சம் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்தது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது உலக முதலீட்டாளர்  மாநாட்டை நடத்தினார்.

இந்த மாநாட்டின் மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு ₹3.43லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் 10.50லட்சம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் தமிழக அரசு ெதரிவித்தது. இப்போது  எடப்பாடி பழனிசாமி 14 நாள் வெளிநாடு பயணம் சென்று திரும்பியிருக்கிறார். 3 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலம் 41 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு ₹8,830 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன்  மூலம் 37,300 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்று அறிவித்து இருக்கிறார். அடுத்ததாக இஸ்ரேல் பயணம் வேறு காத்திருக்கிறது. 2011 முதல் தொடர்ந்து நடக்கும் அதிமுக ஆட்சியில் இரண்டு உலக முதலீட்டாளர் மாநாடு, முதல்வர் எடப்பாடியின் 14 நாள் வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் தமிழக அரசு 5.95 லட்சம் கோடி முதலீடு  ஈர்த்துள்ளதாகவும், 15.50லட்சம் தமிழக  இளைஞர்கள் வேலை பெறுவார்கள்  என்றும் தெரிவித்தது.

ஆனால் நடந்தது என்ன?. அரசு அறிவித்தது போல் முதலீடுகள் தமிழகத்திற்கு  துறைவாரியாக வந்ததா? எந்தெந்த துறைகள் இந்த முதலீட்டாளர் மாநாட்டால்  பயன்பெற்றன? எத்தனை தமிழக இளைஞர்கள் வேலை பெற்றார்கள் என்ற எந்த   புள்ளிவிவரமும் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை. ஆனால் தகவல் உரிமை  சட்டத்தின் மூலம் கேட்டுப் பெற்றதில் 2015 ஜூலை முதல் 2018 மார்ச் மாதம் வரை  வெறும் 34 தொழில் திட்டங்கள் மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளதும்,  இதில்  ரூ.14 ஆயிரம் கோடி மட்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரியவந்துள்ளது. அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்ட 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிலை குறித்து எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், தனது ஜனநாயக கடமை அடிப்படையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடு குறித்து வெள்ளை  அறிக்கை கேட்டால் வெள்ளறிக்காய் கூட கொடுக்கப்படும் என்கிறார் ஒரு அமைச்சர். இது மிகவும் ஆபத்தானது. ஜனநாயக நாட்டில் வெளிப்படைத்தன்மை தேவை. இல்லையென்றால் அது தேவையில்லாத புதிய சர்ச்சைகளை தொடர்ந்து  உருவாக்கிக்கொண்டே இருக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்