SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலை செய்யாம பூசி மெழுகும் அதிகாரிதான் தேவை என்ற அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-09-11@ 00:11:36

‘‘மாங்கனி மாவட்டத்துல ரெய்டு போக அதிகாரிகள் பயப்படறாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘எல்லாம் ஒரு தற்பாதுகாப்பு தான். விவிஐபி மாவட்டத்துல நடவடிக்கை எடுத்து பனிஷ்மென்ட் வாங்க அவர் தயாரில்லையாம். அதாவது, மாங்கனி மாவட்டத்து புட் சேப்டி ஆபீசுக்கு, தேர்தல் சமயத்துல புது ஆபீசர நியமிச்சாங்க. சாரு சார்ஜ் எடுத்துகிட்டதுல இருந்து, பெரிசா எந்த ஒரு சோதனைக்கும் போகலனு அந்த ஆபீசுல இருக்குறவங்களே முணுமுணுக்குறாங்க. இதுக்கு முன்னாடி அந்த போஸ்டிங்குல இருந்தவங்க, வாரத்துக்கு 5 ரெய்டாவது நடத்தி, எதையாவது பறிமுதல் செய்வாங்களாம். ஆனால், ஆபீசரு இதுவரைக்கும் பெருசா ஒன்றும் பண்ணலனு பரபரப்பா பேசிக்கிறாங்க...’’  என்றார் விக்கியானந்தா.
‘‘இதனால பாதிக்கப்படுவது பொதுமக்கள் தானே...’’ என்று கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா.
‘‘ம். உண்மைதான். மாவட்டத்துல சேகோ, வெல்லம், எண்ணெய்னு பெரிய சமாச்சாரங்கள் பல இருந்தும் ஆபீசரு கண்டுக்கிறது இல்லயாம். குறிப்பா, அரசால் தடை செய்யப்பட்ட புகையில பொருட்களும் தடங்கல் இல்லாம தாராளமா கிடைக்குது. ஆனா இத எதையும் கண்டுக்காத ஆபீசரு, யாரு கேட்டாலும், சாரு பிசியா இருக்குறாருன்னு சொல்ல சொல்லிட்டாராம். சேகோ, வெல்லம் ஆய்வு பண்ணலாம்னு யாராவது பேச ஆரம்பிச்சாலும், எங்கிட்ட அத பத்தி பேசாதீங்கனு கட்டளையும் போட்டுருக்காராம். இதுக்கெல்லாம் என்ன காரணம்னு தெரியாம, அந்த துறை பணியாளர்கள் புலம்பிக்கிட்டு இருக்காங்களாம். அதாவது சேகோ கலப்படம் மற்றும் போதைப் பொருளால் மக்கள் உயிருக்குத்தான் பாதிப்பு அதைப்பற்றி கவலைப்படாமல் தன் பதவியை காப்பாற்றிக் கொள்ளும் அதிகாரியை பற்றி அந்த ஆபீஸ் வளாகத்துலேயே பெரிய டிஸ்கஷன் ஓடுது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ வேலை செய்யாத அதிகாரிக்கு அமைச்சர் ஒருத்தர் பாராட்டு பத்திரம் வாசித்தாராமே. அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதிக்கு வரும் கோரையாறு விவசாயிகளின் நீர் ஆதாரமாகவும், பாசனத்தை பெற்றுதரும் முக்கிய ஆறாகவும் உள்ளது. இந்த நிலையில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் உள்ள கோரையாற்றில் அமைந்துள்ள தடுப்பணை தண்ணீர் 20 கிராம விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மிகவும் பழமையான இந்த தடுப்பணை முறையாக பராமரிக்கபடாததால் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் தடுப்பணை பலத்த சேதமடைந்தது. இதற்கிடையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு வந்ததை பார்ப்பதற்காக மாவட்ட அமைச்சர், கலெக்டர்  மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்தாங்க. அமைச்சர் பார்வையிட வருகிறார் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் இரவோடு, இரவாக தடுப்பணைக்கு வர்ணம் பூசி பார்ப்பதற்கு புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை போல் ஜொலிக்க வைத்தனர்.
அணையை பார்க்க வந்த அமைச்சர் பெயின்ட் அடித்து விரிசல்களை மூடி மறைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து அமைச்சர் பேசினார். என்னையா செய்தீர்கள். அணையை சீரமைக்காமலே, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இப்படிபட்ட அதிகாரிகள்தான் அரசுக்கு தேவை என்று சிரித்துக்கொண்டே அமைச்சர் சொன்னாராம். அதை அருகில் கேட்டவர்கள் தடுப்பணைக்கு பொறுப்பான அதிகாரி சேலம் விவிஐபிக்கு உறவினராம். அவரை திட்டினால் தன் அமைச்சர் பதவி போய்விடுேமா என்று நினைத்தாரோ என்னவோ சிரித்தபடியே அங்கிருந்து கிளம்பினார்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கல்லா கட்டாம போக மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பெண் அதிகாரி பற்றி சொல்லுங்கள்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மதுரை ஆவின்னாலே எப்போதுமே ஏழரைதான்... ஏற்கனவே தலைவர் பதவிக்கு பெரிய பஞ்சாயத்து நடந்துச்சு... இங்க பொதுமேலாளராக ஒரு பெண் அதிகாரி கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வர்ராரு... இவரது நிர்வாகத்துல முறைகேடு நடந்ததாக கூறி, இவரை இடமாற்றம் செய்ய வேண்டுமென ஊழியர்கள் போர்க்கொடி தூக்கிட்டாங்க... பல தரப்பு பிரஷரால கடந்த மாதம் 27ம் தேதி பெண் அதிகாரி அதிரடியாக, கூடலூர் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுக்கும் பணிக்கு மாற்றப்பட்டாராம்... அங்குள்ள பெண் அதிகாரியை, மதுரை ஆவின் பொதுமேலாளராக நியமித்து வருவாய்த்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டாராம்... உத்தரவு வந்து 2 வாரமாகியும் இன்னும் ஆவின் பெண் அதிகாரி அசையாம தூங்காநகரத்துலயே இருக்காராம்... ஏன்னு கேட்டா, ‘அமைச்சர்கிட்டே சொல்லிட்டேன்... இன்னும் 2 மாதம் இங்கேதான் இருப்பேன்... அதுவரை வெயிட் பண்ணுங்க’ என்று கெத்தா சொல்லிட்டாராம். தற்போது மதுரை ஆவினில் 61 பணியிடம் காலியாக உள்ளதாம்... அந்த பணியிடத்தை நிரப்புவதன் மூலம் தனக்கு ஆதாயம் பார்த்துவிட்டு செல்ல முடிவு பண்ணியிருக்கிறதா மதுரை ஆவின் ஊழியர்கள் பரபரப்பாக பேசிக்கிறாங்கப்பா...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனி-சேலம் விவிஐபிக்கள் மோதலா என்ன...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நான் முதல்வராக இருந்து இருக்கேன். நான் போய் பத்தோடு பதினொன்றாக வரிசையில் நின்று வரவேற்பதா. அதெல்லாம் நேரில் போய் வரவேற்க முடியாது என்று தேனிக்காரர் சொல்லி இருக்கிறார். அவரது அடிபொடிகள் எவ்வளவு வற்புறுத்தியும் போக மறுத்துட்டாராம். அதற்கு பதிலாக தான் வீட்டில் போய் பார்த்து நலம் விசாரித்தாராம். காரணம் பெரிய அளவுக்கு முதலீடு ஈர்க்காதவருக்கு நாம போய் எதற்கு வரவேற்பு கொடுத்து அதற்கு பிறகு மீம்ஸ் போட்டு நம்மள கலாய்ப்பாங்க... என்று தனக்கு நெருக்கமானவர்களுடன் சொல்லியதாக அடிபொடிகள் பேசிக் கொண்டனர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்