SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வட மாவட்டங்களை புறக்கணிக்கும் அதிகார வர்க்கத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-09-09@ 00:08:01

‘‘வடமாவட்டங்களை தமிழக அரசு புறக்கணிக்கிறதா...’’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ம். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. வட தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாக ஒரு காலத்தில் பாலாறு இருந்தது. வேலூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தின் முதுகெலும்பாக இருந்தது. இப்போது ஆந்திரா தடுப்பணை மேல் தடுப்பணை கட்டி ஏறக்குறைய தண்ணீர் வருவதை அப்படியே தடுத்துவிட்டது. அதையும் மீறி வந்ததை தான் வட மாவட்ட மக்கள் எல்லாவற்றிற்கும் பயன்படுத்தி வந்தனர். ஆரம்பத்திலேயே அதை அதிகாரிகள் தடுக்காததால் பாலாறு மணல் கொள்ளையர்களின் சொர்க்க பூமியாகவே மாறிவிட்டது. இந்த நிலையில் பாலாற்றையும் அதை பயன்படுத்தும் மக்களையும் புறக்கணிக்கும் வகையில் வேலூர் திட்டப்பிரிவு வட்டம், மேல் பாலாறு கோட்டம் ஆகியவற்றை மூடிவிட்டது. தனியாக கோட்டம் இருக்கும்போதே ஆற்று தண்ணீரை கோட்டை விட்ட அதிகாரிகள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள் என்று வேதனையுடன் ேகள்வி கேட்கிறார்கள் விவசாயிகள். அரசுக்கு தவறான தகவல்களை தந்து பாலாற்றை காலி செய்தது அதிகாரிகள் வர்க்கம்தான். இனி சென்னையில் தண்ணீர் பஞ்சம் போல வட மாவட்டங்களை அது எட்டி பார்க்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்றே பேசுகின்றனர் சமூக நல ஆர்வலர்கள்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பேச வந்த பெண் தலைவருக்கு பட்டாசு வெடிச்சு வரவேற்பு கொடுத்த மாங்கனி மாவட்ட தாமரை கட்சியினர் அசத்திட்டாங்களாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மாங்கனி மாவட்ட முக்கிய கேந்திரமான இரும்பாலையை, தனியாருக்கு கொடுக்கக்கூடாதுனு தொழிலாளருங்க நடத்துற காத்திருப்பு போராட்டம் ஒரு மாசமா நடந்துட்டு வருது. அந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சு பேச,  தாமரை கட்சியின் தலைவர்களில் ஒருவர் போனாங்க. அவங்க அங்க காலெடுத்து வச்சதுல இருந்து, கட்சிக்காரங்க செஞ்ச அலப்பறைக்கு அளவில்லாம போச்சாம். குறிப்பாக, பட்டாசு சத்தம் காதை பிளக்க, காரு கதவ திறந்துவிட ஒருவர் ஓடி வர, மேகமூட்டமா இருந்தாலும் மேடம் மேல வெயில் பட கூடாதுனு ஒருத்தரு குடை பிடிக்க, தொண்டர்கள் யாரும் சூழ்ந்துடக் கூடாதுனு மத்தவங்கள ஓரம் கட்டன்னு, ஒரே அலம்பலா இருந்ததாம்... எல்லா தொழிற்சங்க ஊழியர்களும் அங்க இருந்தாலும், கட்சி கூட்டம்போல கோஷமும் போட்டுருக்காங்க. இதனால பூரிச்சுப்போன மேடம், தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் வராம நாங்க பாத்துக்கிறோம்னு நம்பிக்கையா நாலு வார்த்தை பேசிட்டு போயிட்டாராம். யாருக்குத் தெரியும் நாளைக்கு இவங்களே மாநில தலைவியா வந்துரலாம்னு நினைச்சுதான் இத்தனை அலம்பலும் அலப்பறையும் பண்ணாங்கனு பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஆசிரியர்களை அலைய விட்ட கலெக்டரை பற்றிச் சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘சிறுபான்மை நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளிகளில் இருந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட பள்ளிகள், சிறுபான்மை நலத்துறையிடம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து அந்தந்த பள்ளிகளுக்கு என்று ஒரு பாஸ்வேர்டு பெற வேண்டும். அவ்வாறு பெறும் பாஸ்வேர்டை வைத்து மாணவர்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டுமாம்.. இவ்வாறு பாஸ்வேர்ட் பெறுவதில் தமிழகத்தில் நாகை மாவட்டம் பின்தங்கியுள்ளதாக சென்னையில் இருந்து சமீபத்தில் கலெக்டருக்கு டோஸ் விழுந்ததாம். இதில் கடுப்பாகிய கலெக்டர், தன் கோபத்தை தலைமை ஆசிரியர்கள் பக்கம் திருப்பினார். அதாவது ஆசிரியர் தினத்தன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களும் கம்ப்யூட்டர் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்து பாஸ்வேர்ட் பெற உத்தரவு பிறப்பிக்கும்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தாராம். கலெக்டர் உத்தரவை மீற முடியாத முதன்மை கல்வி அலுவலரும், ஆசிரியர் தினத்தன்று தலைமை ஆசிரியர்களை வேலை வாங்குவதா என புலம்பியபடியே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதல் நாள் தகவல் கொடுத்தாராம். ஆசிரியர் தினத்தன்று மாவட்டத்தில் உள்ள 1200 தலைமை ஆசிரியர்களும் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு படையெடுத்தனராம். நீண்ட தூரங்களில் இருந்து வரும் தலைமை ஆசிரியர்கள் அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து வேன், கார் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அடித்து பிடித்து  ஓடிவந்தனர். ஆனால் அந்த கல்லூரியில் போதுமான அளவிற்கு கம்ப்யூட்டர் இல்லாததால் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரிக்கு செல்லும்படி அடுத்தடுத்து உத்தர பிறப்பிக்கப்பட்டதாம்.

இதில் அவசர கதியில் சிலர், தங்களது நண்பர்கள் வாடகைக்கு எடுத்து வந்த கார், வேன் ஆகியவற்றில் லிப்ட் கேட்டு ஏறி சென்றனராம். சில தலைமை ஆசிரியர்கள் ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்த தனியார் கல்லூரிக்கு சென்றனராம். நவீன அறிவியல் யுகத்தில் நவீன தொழில் நுட்ப வசதி கொண்ட செல்போன் மூலமாக கூட விண்ணப்பித்து பாஸ்வேர்ட் பெற முடியும். இவ்வளவு வசதிகள் இருந்தும் ஆசிரியர் தினத்தன்று அமைதியாக இருக்க வேண்டிய தலைமை ஆசிரியர்களை ஏன் அறக்க பறக்க அலையவிட வேண்டும். பழிவாங்கும் செயலாக உள்ளது. இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆசிரியர் சங்கங்கள், கலெக்டருக்கு எதிராக போராட்டம் நடத்த மாநில நிர்வாகிகளிடம் தீவிரமா ஆலோசித்து வர்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்