SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள், இந்நாள் அமைச்சர் கோஷ்டிக்கு இடையே நடக்கும் மோதலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-09-08@ 00:23:55

‘‘திண்டுக்கல்லில் மாஜி மற்றும் அமைச்சர்களின் கோஷ்டியினர் இடையே நடந்த மோதலை பற்றி தெரியுமா’’ என்றபடியே வந்தார் விக்கியானந்தா.‘‘அப்படியா... சொல்லு கேப்போம்’’ என்று ஆர்வமானார் பீட்டர் மாமா.‘‘திண்டுக்கல் அதிமுகவில் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் தரப்பினர், இங்கு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட்டு கடுமையாக மோதிக்கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு எல்லாம் போட்டிருந்தாங்களாம்... தேர்தலில் இந்நாள்  அமைச்சரின் அணியை சேர்ந்தவரே வெற்றி பெற்றாராம்.... தோல்வியடைந்த ஆத்திரத்தில் மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள், தேர்தலில் முறைகேடு எனக் குமுறிட்டாங்களாம்... இது ஒருபுறமிருக்க வெற்றி பெற்ற இந்நாள் அமைச்சரின்  ஆதரவாளர்கள், மாவட்ட நிர்வாகி உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் வாழ்த்தி போஸ்டர்களை ஒட்டியிருந்தாங்களாம்... மருந்துக்கும் ஓபிஎஸ்சை பாராட்டி போடலையாம்... தகவலறிந்த மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள்  போஸ்டர்களை ஓபிஎஸ், அவரது மகனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி குமுறிட்டாங்களாம்... மேலும், மாவட்டத்தில் மற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் பதவிகளை கைப்பற்றவும் உள்ளதாக தெரிவிச்சுருக்காங்களாம்... ‘‘வெளிநாட்டில் இருந்து  முதல்வர் எடப்பாடி சென்னை திரும்பியவுடன் இந்த பிரச்னை குறித்து பேசிக் கொள்ளலாம்... அதுவரை அமைதியா இருங்க...’’ என ஓபிஎஸ் தரப்புல கூறியிருக்காங்களாம்... ஆனாலும், முன்னாள் - இந்நாள் மோதல் எப்போது பூதாகரமாக  வெடிக்கப்போகுதுன்னு தெரியலைன்னு அதிமுக வட்டாரத்துல பரபரப்பாக பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘டெண்டர் பணியை எடுப்பதில் ஆளுங்கட்சிக்குள் போட்டா போட்டியாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் ஆளுங்கட்சி இரண்டு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருவது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழாவாக இருந்தாலும், நினைவு தினம், கட்சி தொடக்க விழா என எந்த  நிகழ்ச்சியாக இருந்தாலும் நகர செயலாளர் தலைமையில் ஒரு பிரிவினரும்,  முன்னாள் நிர்வாகிகள் தலைமையில் ஒரு பிரிவினரும் பிரிந்து தனித்தனியாகவே நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் ஆற்காடு நகராட்சியில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடுவதாக  ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஆளுங்கட்சியை சேர்ந்த மற்றொரு  தரப்பினர் தங்களுக்கு கண்டிப்பாக பணியை ஒதுக்க வேண்டும் என்று முரண்டு பிடித்தனர்.இல்லையென்றால் நாங்களும் டெண்டர் போடுவோம் என்று அவர்கள் கூறினார்கள். இதனால் பணியை எடுப்பதில் கடும் போட்டி ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் அந்த டெண்டரை ரத்து செய்து  வேறு ஒரு  தேதியில் டெண்டர் விடப்படும் என்று அறிவித்து விட்டனர். ஏற்கனவே சட்டமன்ற தேர்தலிலும், அதன்பிறகு நடந்த மக்களவை தேர்தலிலும் ஆளுங்கட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை உள்ளது.
தற்போது  இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் பிரதிநிதிகள் இல்லாது போகும்  நிலை ஏற்படும். ஒற்றுமையின்றி இப்படி இருந்தால் உள்ளாட்சித் தேர்தலை எப்படி சந்தித்து வெற்றி பெறுவது என்று   எம்ஜிஆர்,  ஜெயலலிதா காலத்து விசுவாசிகள் கவலையில் ஆழ்ந்து உள்ளனராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதிகார வர்க்கத்தில் வேற ஏதாவது விவகாரம் இருக்கா...’’ ‘‘மாங்கனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் டெண்டர் செக்ஷனில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இன்ஜினியர், கடந்த 15 ஆண்டுகளாக இடமாற்றத்தை தவிர்த்து, ஒரே இடத்தில் இருக்காராம். மாவட்டம் முழுவதும் அவரது கண் அசைவு,  கை அசைவு படி தான் அனைத்து திட்ட பணிகளும் நடக்குதாம். எந்த டெண்டரை யாருக்கு கொடுக்கனும், அந்த ஒப்பந்ததாரரிடம் இருந்து எவ்வளவு கறக்கணும், அதை யார் யாருக்கு பங்கு பிரித்து கொடுக்கனுமுன்னு எல்லாவற்றிலும் கரை  கண்டவர், அந்த இன்ஜினியர் தானாம். இதனால டிஆர்டிஏ.,வில் அசைக்க முடியாத சக்தியாக அந்த இன்ஜினியர் இருக்காராம். அவரை பகைத்துக்கொள்ளும் மற்ற அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் நிம்மதியாக இருக்க முடியாதாம். மேலிடம் வரைக்கும் சரியான தொடர்பை வைத்துக் கொண்டு அனைவரையும் ஆட்டிப்படைத்து, கோடிக்கணக்கில் கல்லா கட்டி  வருகிறாராம் அந்த இன்ஜினியர். இவரை எப்படியாவது வேறு இடத்துக்கு மாற்றுங்கன்னு உயரதிகாரிகளிடம் பலரும் வேண்டிக்கிட்ேட இருப்பது கூடுதல் டிப்ஸ்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்