SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓசியில சாப்பாடு சாப்பிட்டு ஆயிரம் ரூபாய் வாங்கி கெத்து காட்டிய அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-09-06@ 00:09:24

‘‘கிப்ட் கட்சியை கூண்டோடு கலைக்க முடிவு செய்து இருக்காங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஒட்டுமொத்தமாக இல்லை. ஒரே ஒரு மாவட்டத்துல மட்டும் கட்சியை கூண்டோடு கலைத்துவிட்டு புதுசாக நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்து இருக்காங்க. அதாவது, புதுக்கோட்டை கிப்ட் கட்சி மாவட்ட செயலாளர் சமீபத்தில் வேறு கட்சியில் இணைந்தார். இதனால புதுக்கோட்டை மாவட்டத்தில் கிப்ட் கட்சி இருக்கிறதா என்று அந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேச்சு கிளம்பியுள்ளதாம். இதுதவிர முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிக்கு கூட செல்ல திட்டமிட்டுள்ளார்களாம். சிலர் தாய் கழகத்துக்கே சென்று விடலாம் என பேசிக்கிறாங்க. இதனை கேட்ட மற்ற கிப்ட் கட்சி  நிர்வாகிகள், இலை கட்சி ஏற்கனவே சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அங்கு எதற்கு போகவேண்டும். அதனால மாற்று கட்சிக்கு செல்வதுதான் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்கும் என்று முடிவு செய்து இருக்கிறார்களாம். இதனை கேட்ட முக்கிய நிர்வாகிகள் நாம் திமுகவில் சேர்ந்தால்தான் நமது எதிர்காலம் நன்றாக இருக்கும் என ஓகே சொல்லிட்டாங்களாம். மேலும் நிர்வாகிகள் பலர் கிப்ட் கட்சி  நிர்வாகிகளை தொடர்புகொண்டு நீங்களும் எங்க கூட வாங்க என்று அழைப்பு விடுத்து இருக்கிறார்களாம். இந்த தகவல்களை மோப்பம் பிடிச்ச கிப்ட் கட்சி புதுக்கோட்டையில் கட்சியை கலைத்துவிட்டு புது நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஓசி சாப்பாடு சாப்பிட கெத்து காட்டிய மாநகராட்சி அதிகாரி கதையை சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இது கதை இல்ல பீட்டர். நிஜத்தில் நடந்ததை சொல்கிறேன் கேளு... கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ரெய்டு மந்த நிலையில் உள்ளது. அதனால், பெட்டிக்கடை, பேக்கரி, ஓட்டல், மார்க்கெட் என பல இடங்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் தாராளமாக நடமாடுகிறது. இந்நிலையில், கணபதி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஒருவர், காலை டிபன் சாப்பிட்டுவிட்டு, ஹாயாக. வெளியே வந்தார். ஓட்டல் முதலாளி, ‘சார்.. டிபனுக்கான 60 ரூபாய் பில் கொடுங்கள்...'' என சவுண்ட் விட்டார். அவ்வளவுதான் தாமதம், அந்த அதிகாரி மீண்டும் ஓட்டலுக்குள் சென்றார். பார்சல் செக்‌ஷனில் இருந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகளை கொத்தாக பறிமுதல் செய்தார். 1000 ரூபாய் அபராதம் வெட்டு என குண்டை தூக்கி போட்டார். ஓட்டல் முதலாளியோ, அதிர்ந்து போய்விட்டார். ‘அய்யா, தெரியாமல் பில் கேட்டுட்டேன். இனி பில் கேட்கவே மாட்டேன். நீங்க எப்ப வேண்டுமானாலும் வரலாம், சாப்பிடலாம், பில் கொடுக்காம போகலாம்'’ என டோட்டலாக சரணடைந்தாராம். ஆனால், அந்த சுகாதார ஆய்வாளர், ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபீசராக நடந்துகொண்டாராம். அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர்... சாப்பிட்டது ஓசியில... காசு கொடுக்க மனம் வரவில்லை என்றால் நான் சுகாதார அதிகாரி என்று அதிகாரத்தை காட்டி இருக்கலாம். ஓசியில் சாப்பிட்டது இல்லாமல் ஆயிரம் ரூபாயை வேறு லஞ்சமாக வாங்கிக் கொண்டு போய்விட்டார். இவர் போன்ற நபர்களால் நல்ல அதிகாரிகளுக்கும் கெட்ட பெயர் என்று விமர்சித்தார். இதேபோல், கோவை மாநகரின் பல பகுதிகளில் ஓட்டல் மற்றும் மளிகை கடைகளில் மாநகராட்சி அதிகாரிகளின் அத்துமீறல் தொடர்கிறது. அபராத தொகை செலுத்தினாலும் ரசீது வழங்கப்படாமல் மாபெரும் மோசடி நடக்கிறது என்று பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் புலம்புகிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நோயாளிகள் குறித்து யாருக்கும் கவலையில்லை போலிருக்கிறதே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2 மாதங்களாக நோயாளிகளுக்கு தேவையான நீரிழிவு, ரத்த அழுத்தம் நோய்களுக்கு மருந்து, மாத்திரை தட்டுப்பாடு அதிகரித்து இருக்கிறதாம். இதனால நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் நீரிழிவு நோய்க்கு மாத்திரை இல்லாததால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று அவர்கள் மாத்திரைகளை வாங்கி செல்கிறார்களாம்.
அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மாத்திரைகளை அடுக்கம்பாறை அரசு மருந்து கிடங்கில் இருந்து பெற்று நோயாளிகளுக்கு வழங்கி வந்த நிலையில், அங்கும் மாத்திரைகள் தட்டுப்பாடு என்று கூறி நோயாளிகளுக்கு குறைந்த அளவிலேயே வழங்கி வருகின்றனர். நீரிழிவு, ரத்த அழுத்த மாத்திரைகள் தட்டுப்பாடு மட்டுமின்றி சத்துமாத்திரைகளும் தட்டுப்பாடு என்று கூறி 30 நாட்களுக்கு பதில், 10 நாட்களுக்கு மட்டுமே மாத்திரைகளை டாக்டர்கள் வழங்கி வருகின்றனர். மாத்திரைகள் தீர்ந்த பின்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கேட்டால் வந்தால் தருகிறோம் என கூறி அனுப்பி விடுகிறார்களாம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்பட்டுள்ள மருந்து, மாத்திரை தட்டுப்பாடு தொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குனரும், வட்டார மருத்துவ அலுவலர்களும் கண்டு கொள்வதில்லையாம். அதேநேரத்தில் வட்டார மருத்துவ அலுவலர்கள் தனியாக வைத்திருக்கும் கிளினிக்குகளில் அரசு மருந்து, மாத்திரை, பேண்டேஜ்கள் தாராளமாக கிடைக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.    


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்