SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-09-04@ 00:17:46

‘‘திராவிட கட்சி பாணியில் தேசிய கட்சியை யார் வளர்க்கப்போகிறார்களாம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அதிமுகவில் இருந்து கழன்று தேசிய கட்சியில் ஐக்கியமான இலை முன்னாள் அமைச்சர் தற்போது காலியாகவுள்ள பாஜ மாநில தலைவர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வருகிறார். தற்போது மாநில துணைத் தலைவர் பதவியில் உள்ள இவர் எப்படியாவது எம்பியாகி விட வேண்டும் என்ற ஆசையில்தான் மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியை போராடி கேட்டுப் பெற்றார். டெல்லி செல்லும் ஆசையில் தேர்தலில் பணத்தையும் தண்ணீராக செலவழித்தார். ஆனால் தமிழகத்தில் வீசிய மோடி எதிர்ப்பு சூறாவளி அவரது ஆசையை நிராசையாக்கி விட்டது. தற்போது தமிழிசை, தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்ட நிலையில் துணைத் தலைவர் அந்தஸ்தில் உள்ள தனக்குத்தான் மாநில தலைவர் பதவியைத் தர வேண்டும் எனக் கேட்டு டெல்லி மேலிட தலைவர்களை அணுகியுள்ளாராம். தமிழகம் ஒன்றரை ஆண்டுகளில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இலை கட்சியில் இருந்து வந்த தன்னால் திராவிட கட்சி பாணியில் தேசிய கட்சியை வளர்க்க முடியும் என்று மேலிடத்தில் சொல்லி உறுதி அளித்தாராம். மத்தியில் பாஜ ஆட்சி நடந்து வரும் நிலையில், இதுதான் வாய்ப்பு, எப்படியாவது தலைவர் பதவியை பெற்று விட வேண்டும் என முனைப்பாக உள்ளாராம். ஆனால் கட்சி மாறி வந்த அவரை பதவிக்கு வரவிடக்கூடாது என மற்றொரு தரப்பு வேகமாக காய் நகர்த்தி வருகிறதாம். இதனால் டெல்லி பாஜ அலுவலகத்தை சுற்றி தமிழக தலைகளாக காட்சியளிக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பணம் கொடுத்தால் பசுமைவீடு கிடைக்குமா...’’ என்று அப்பாவியாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘விருதுநகர் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக (பிடிஓ) ‘இளைய அரசர்’ இருக்கிறார். கடந்த ஜூனிலிருந்து பணியாற்றி வருகிற இவர் மீது, பலதரப்பட்ட தொடர் புகார்கள் குவிந்து வருகின்றன. வீட்டுமனை பிரிவுகள், கட்டிட வரைபட அனுமதி, பசுமை வீடு பயனாளிகள் தேர்வு. இப்படி பல பணிகளில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களையும், ஊராட்சி செயலர்களையும் லஞ்சம் பெற்றுத் தருமாறு இவர் நிர்பந்தம் செய்து வருகிறார் என்கின்றனர்.
பயனாளிகளை நேரில் வரச் செய்து பணம் கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது. தனக்கு ‘தொகை’ பெற்று தராத ஊராட்சி செயலர்களை, வேறு ஊராட்சிக்கு மாற்றுவதும், தனக்கேற்றவர்களை பணம் வாங்கி மாறுதல் செய்து கொள்வதும் என தொடர்ச்சியாக ‘மாறுதல் உத்தரவுகளை’ வழங்கி கொண்டே இருப்பதாகவும், அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை விதிகளை மீறி நிரப்பி வருவதாகவும் புகார்கள் குவிகின்றன. ஏழைகள் பசுமை வீடு கேட்டு வந்தால், 10 ஆயிரம் கொடுத்தால்தான் காரியம் நகர்கிறதாம். இப்படி இந்த ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட 37 வீடுகளில், பணம் கொடுத்தவர்களுக்கு 15 வீடுகள் வழங்கப்பட்டு விட்டதாம். பணம் தராததால், மீதமுள்ள 22 வீடுகளின் உத்தரவு பிடிஓவின் பீரோவில் காத்து கிடக்கிறதாம். ஏழைகளின் பணத்தில் மாடி வீடும், தங்க நகையும் வாங்க நினைக்கும் அதிகாரிக்கு செக் வைக்க அங்குள்ள சமூக ஆர்வலர்கள் திட்டமிட்டு இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாவட்ட எஸ்பியை விட இன்ஸ்பெக்டர் ரொம்ப வளமாக இருக்கிறாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மலைக்கோட்டை மாநகர் மாவட்டத்தில் உயரதிகாரிகள் தொடர்பு இருப்பதாக கூறி தனி ராஜாங்கம் நடத்தி வசூல் வேட்டையில் மாவட்ட காவல்துறை உயரதிகாரியை மிஞ்சும் வகையில் செல்வ செழிப்புடன் இருக்கும் காவல் ஆய்வாளர் திருச்சி புறநகர் பகுதியில் பணியாற்றி வருகிறார். இவர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குறிப்பாக மணல் கடத்தல், கஞ்சா, போலி மதுபானம், தடை செய்யப்பட்ட புகையிலை தொழில் செய்பவர்களிடம் சப்தமில்லாமல் அதிகமாக லஞ்சம் வாங்கி குவித்து வருகிறார். வசூலுக்காக தனியாக ஒருவரை நியமித்து சம்பளமும் கொடுத்து வருகிறாராம். அப்புறம் தன் இடது கையான ரைட்டரை வேறு ஸ்டேஷனில் இருந்து தன் ஸ்டேஷனுக்கு தூக்கி வந்துட்டாராம். அவர் மூலம் தனி வசூல் வேட்டை நடக்குதாம். இவர் மீது ராக்கெட் வேகத்தில் புகார்கள் சென்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அந்த அதிகாரி என் ெசாந்தக்காரர்தான்... இந்த பணம் எனக்கு மட்டுமா என கிண்டலாக கேட்கிறாராம்... மலைக்கோட்டை லஞ்ச ஒழிப்புதுறை கை கட்டி வேடிக்கை பார்ப்பதுதான் வேதனையான விஷயம் என்கிறார்கள் உண்மையான காவலர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி மாவட்டத்துல போராட்ட அறிவிப்பால் பதறிய மாவட்ட நிர்வாகம் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அரசாங்க திட்டத்தை கிராமப்புற மக்களுக்கு செயல்படுத்துறதுல ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களின் பங்கு முக்கியமா இருக்குது. அதுவும் இப்போ உள்ளாட்சி பிரதிநிதிங்க யாரும் இல்லாததால, எல்லா வேலையையும் பஞ்சாயத்து கிளர்க்குங்க தான் பார்த்துட்டு வாராங்க. மாங்கனி மாவட்டத்த பொறுத்தவரை மாசத்துக்கு ஒருமுறையாவது, முதல்வரு வந்துட்டு போயிடறாரு. இதனால, அவரு கலந்துக்குற பங்சன் வேலையும் இவங்க மேல வந்து விழுந்துருது. இதை எதையும் பொருட்படுத்தாத மாவட்ட நிர்வாகம், அரசியல் காரணத்துக்காக ஊரக வளர்ச்சி துறைய சேர்ந்த சிலரை சமீபத்துல இடமாற்றம் பண்ணிட்டாங்க. மேலும், ஹெல்த், பி.டபுள்யூ.டி மற்றும் ரெவின்யூ டிபார்ட்மென்ட் வேலையையும் இவங்க மேல திணிக்குறாங்கனு குற்றச்சாட்டு இருக்குது. இதனால கடுப்பான, ஊரக வளர்ச்சி துறையினர், போராட்ட அறிவிப்ப வெளியிட்டுட்டாங்க. முதல்வர் மாவட்டதுல முக்கிய துறையே இந்த முடிவை எடுத்தது, மத்த டிபார்ட்மென்ட்காரங்க மத்தியில பரபரப்பா பேசப்படுது. இதனால பதறிப்போன மாவட்ட நிர்வாகமும், போராட்ட அறிவிப்பை வாபஸ் வாங்க வைக்க, பேச்சுவார்த்தை நடத்தலாம்னு இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்