SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரவுடிகளுக்கான கால் முறிவு ஆபரேஷன் சக்சஸ் ரேட்டிங் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-09-02@ 00:18:45

‘‘மெகா தேர்வு மேளா நடந்து முடிந்து இருக்கு போல.. கேள்விகள் எல்லாம் ஈசியாக இருந்ததாக சொல்றாங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அதைவிடு... இதுலேயும் குரூப் 4 எக்ஸாம் பணி ஒதுக்கீட்டிலும் முறைகேடு நடந்து இருப்பதாக பணியில் இருந்த ஒரு சில அதிகாரிகள் வேதனையுடன் பேசிக் கொண்டார்கள்...’’ என்று இழுத்தார் விக்கியானந்தா.‘‘ இழுக்காதீர் விஷயத்துக்கு வாங்க...’’‘‘மாநிலம் முழுசும் காலியா இருக்குற குரூப்-4 வேலைக்கான எக்ஸாம் நேத்து நடந்தது. மாங்கனி மாவட்டத்துல, 235 தேர்வு மையங்கள்ல நடந்த எக்ஸாம 78 ஆயிரம் பேரு  எழுதுனாங்க. தேர்வுப்பணிய சூபர்வைஸ் பண்ண, ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும், ஒரு முதன்மை கண்காணிப்பாளர நியமிச்சுருந்தாங்க. வழக்கமா, தலைமை ஆசிரியர் அல்லது உதவி தலைமை ஆசிரியர் நிலையில இருக்கறவங்கள தான், அந்தந்த பள்ளியில அமையும் மையத்துக்கு முதன்மை கண்காணிப்பாளரா நியமிக்கிறது வழக்கம். ஆனா, சேலம் 4 ரோடுகிட்ட இருக்குற ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்துக்கு, சம்பந்தமே இல்லாம சீப் கிளர்க் ஒருத்தர முதன்மை கண்காணிப்பாளரா போட்டுருக்காங்க. இது அங்க இருந்த ஆசிரியருங்களுக்கே வருத்தமா போச்சாம். எக்ஸாம் எல்லாம் சுமூகமா முடிஞ்சாலும், இந்த வேலைய பார்த்தது யாருனு கண்டுபிடிக்கிறதுல இப்போ ஆபிசருங்க பிசியா இருக்காங்க... தகுதி இல்லாதவர்களை நியமித்து தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதா என்று வேதனையுடன் அதிகாரிகள் பேசிக் கொண்டனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ கால் முறிவு ஆபரேஷன் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ மாங்கனி நகர போலீசில் கடந்த 3 ஆண்டுக்கு முன் கமிஷனராக ஒருவர் இருந்தபோது, ரவுடிகளின் கால் முறிவு ஆபரேஷன் மிக சக்சஸாக நடந்தது. இதை பின்பற்றி மாநிலம் முழுவதும் தற்போது ரவுடிகள் பாத்ரூமில் வழுக்கி விழும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஆனா... மாங்கனி நகரில் அந்த பாணி கைவிட்டு போச்சு. இருந்தாலும் மாங்கனி மாவட்ட போலீசார், கால் முறிவு ஆபரேஷனை  கையில் எடுத்துருக்காங்களாம். கடந்த 3 மாதத்தில் 8 ரவுடிகள், ஆங்காங்கே விபத்தில் சிக்கி கால்களை முறித்துக் கொண்டுள்ளனர் என கணக்கிட்டுள்ளனர். நேற்று முன்தினம் கூட, சென்னை ரவுடி உள்பட 2 பேர் விபத்தில் சிக்கி கால்களை முறித்துக் கொண்டுள்ளனராம். இதனால கிரைம் ரேட் குறைந்து இருக்காம். அதனால கால் முறிவு ஆபரேஷனுக்கு உயரதிகாரிகள் பர்மிஷன் தரணும்னு கேட்க... உயரதிகாரிகள் கோட்டையை நோக்கி கையை காட்டுறாங்களாம்... இதனால போலீசார் வேதனையுடன் எல்லாத்துக்குமா கோட்டையை கை காட்டுறது...’’ என்று புலம்புகிறார்களாம் என்றார் விக்கியானந்தா. ‘‘தூங்கா நகர்ல என்ன விசேஷம்...’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மதுரையில சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் ஆய்வுன்னு மதுரை அரசு அதிகாரிகள் பயங்கர பிஸி. அரசு திட்டப்பணிகள், ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஆய்வுன்னு பரபரப்பா ஓடுச்சு. திடீர்னு ஒரு நாள் இரவு 11 மணியளவில் அமைச்சர் தரப்பில் இருந்து மாநகராட்சி கமிஷனர், உதவி கமிஷனருக்கு போன் வந்ததாம். போன்ல பேசியவர், ‘‘மதுரையில நாளை காலை மழை நீர் சேகரிப்பு அமைப்பு வச்சிருக்கிற இடத்தை அமைச்சர் பார்க்க விரும்புகிறார். எந்த இடம்னு முடிவு பண்ணிக்குங்க’’ என்று கூறி போனை வச்சிட்டாராம். அதற்கு பிறகு கமிஷனர் விசாகன், உதவி கமிஷனர் பழனிசாமி ஆகியோருக்கும் தூக்கம் போச்சாம்... உடனே ஒரு குழுவை அனுப்பி, சில முக்கிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சேகரிப்பு முறையாக செஞ்சிருக்காங்களான்னு பார்த்துட்டு வாங்கன்னு அனுப்புனாங்களாம். பொதுமக்கள்ல ஒரு சிலரு இல்லைங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்களாம்... பல இடங்கள்ல யாருமே கதவை திறக்கலையாம். அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சரியாக ரெஸ்பான்ஸ் இல்லையாம். கடைசியில் மாநகராட்சி பள்ளியில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு செஞ்சோமேன்னு யோசிச்சு, அங்கே போய் பார்த்தாங்களாம். அரைகுறையாக இருந்ததை அர்த்த ராத்திரியிலே ஓரளவு சரி செஞ்சாங்களாம். விடிஞ்சதும் கமிஷனர் தலைமையிலான குழுவினர், அமைச்சரை அழைச்சுட்டு போய் காமிச்சாங்களாம். அமைச்சரும். ‘‘வெரிகுட்’’ என்று சொல்லிட்டு கிளம்பிட்டாராம். இந்த ஒத்த வார்த்தைக்காக ராத்திரி புல்லா தூங்கா வேலை பார்த்து டென்ஷனாகி விட்டதாக தூங்கா நகரத்து அதிகாரிகள் புலம்பி தள்ளிட்டாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதுதான் தூங்கா நகரமாச்சே... அதற்கு ஏற்றார்போல அதிகாரிகளும் தூங்காம வேலை பார்த்து இருக்காங்க.. தேர்தல் முடிந்தும் காவல் துறைக்கு பணப்பலன்களை கொடுக்கலையாமே... அப்டியா..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வேலூர் மக்களவை தேர்தல் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை கடந்த 9ம் தேதி ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் சுமார் 700 போலீசார் வரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் வருவாய்த்துறையினரும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இதில் வருவாய்த்துறையை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு மட்டும் ஒரு நாள் சம்பளம், பயணப்படி வழங்கப்பட்டு விட்டதாம். ஆனால் காவல்துறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு பயணப்படியோ, உணவுப்படியோ ஏதும் வழங்கவில்லையாம். இதனை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் போலீசார் புலம்பி வருகின்றனர். தேர்தல் ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்து, அதனை வழங்க மறுக்கும் அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே கலெக்டர் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று போலீசார் கேட்டு வருகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RoboChefOdisha

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

 • AIADMK48

  அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்