SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-09-01@ 00:23:42

‘‘வெளிநாட்டு முதலீட்டு ஈர்ப்பு எப்டி இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘எல்லாம் மருத்துவ துறை தொடர்பான விஷயங்கள் முதல் கட்டத்துல முடிந்து இருக்கு... வெளிநாட்டுல இருந்து பலரும் மருத்துவத்துக்கு சென்னைக்கு வரும் நிலை உள்ளதாகவும் இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழகம் இருப்பதாகவும் தலைமை செயலக வட்டாரத்துல பேச்சு அடிபடுது. இந்நிலையில் புதுசா ஒரு மருத்துவமனை லண்டனில் இருந்து தமிழகத்துக்கு எதுக்குனு அவங்க கட்சிக்காரங்களே கேட்டுக்கிறாங்க... அப்புறம், இதுமாதிரியான பெரிய டீல்கள் எல்லாம் டெல்லி தலைமையின் அசைவுக்கு ஏற்ப நடந்து வருவதாக சொல்றாங்க... அவங்க கொடுத்த லிஸ்ட்டுல இருக்கிறவங்களையும் சேலம்காரர் பார்த்து வர்றாராம். அவங்க மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகம் வர்றதுக்கான வழியாகவே தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் பார்க்கிறதாம்... எல்லாம் தாமரை ஏற்பாடு என்று பேசிக் கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆள் இல்லாத கடையில டீ விக்கிற நிலைமை நடிகர் கட்சியில ஏற்பட்டு இருக்கு போல...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘சட்டசபை தேர்தல் 2021ம் ஆண்டுதான் நடக்கப் போகிறது. அதற்குள் இந்த கட்சியில் இருந்தால் தேற மாட்டோம் என்று நினைத்த நடிகர் கட்சியின் நெல்லை மாவட்ட பொறுப்பாளர், மக்களவை தேர்தலின்போது கட்சியை விட்டு விலகி விட்டார். கட்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் கூட இல்லாத நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நடிகர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு நெல்லை கேடிசி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டார். கூட்டத்தில் மைக் பிடித்த மாநில நிர்வாகி, ஒரு சில நிர்வாகிகள் விலகிக் கொண்டதால் கட்சிக்கு எந்த பாதகமும் இல்லை என்று ஆரம்பித்தார், 2021ல் ஆட்சியை பிடிப்பதுதான் நமது இலக்கு. அதற்காக இப்போதே பணியைத் தொடங்க வேண்டும் என உசுப்பேற்றினார். இது மட்டுமல்லாது நடிகர் கமலஹாசன் நவ.7ம் தேதி 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கப் போகிறார் என்றார். ஆனால் யாரும் கைதட்டி வரவேற்கவில்லை என்பது வேறு விஷயம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு முன்பே இலை தரப்பு அலறுதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நாங்குநேரி இடைத்தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே வேட்பாளர் பட்டியல் வெளியாகி விட்டது. படை கட்சியை சேர்ந்தவரை அதன் வேட்பாளராக அறிவித்து களம் இறக்கியுள்ளது. ஏற்கனவே கிப்ட் கட்சி இடைத்தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. கிப்ட் தலைவர் நெல்லை வந்தபோது கட்சி சின்னம் கிடைத்து விட்டால் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவோம் என்றார். இந்நிலையில் படை கட்சியும் வேட்பாளரை களம் இறக்கினால் அந்த சமுதாயத்தின் ஓட்டுக்களும் நமது காலை வாரி விடுமோ என ஆளுங்கட்சியினர் யோசிக்கிறார்களாம். இதனால் நாங்குநேரி தேர்தல் அப்படியே தள்ளிப் போனால் நல்லது என்ற எண்ணத்திற்கு இலை தரப்பு அரண்டு போய் இருப்பதாக அவங்க கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரிடையர்டு ஆகியும் கல்லா கட்டும் காக்கி குறித்து சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வேலூர் பாலாற்றில் மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் அளவுக்கு மீறி அதிகரித்துள்ளது. நாள்தோறும் பாலாற்றில் தடையின்றி மணல் கடத்தல் சம்பவம் தொடர்ந்து கொண்டே உள்ளது. தடுக்க வேண்டிய அதிகாரிகளும், மணல் கடத்தலுக்கு உடந்தையாக உள்ளனராம். இந்நிலையில், சத்துவான போலீஸ் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி ஓய்வு பெற்ற கணேசா என்பவர் இப்போதும் சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழே நின்றுக்கொண்டு அவ்வழியாக மணல் கடத்தி வருபவர்களிடம் வசூல் வேட்டையாடி வருகிறாராம். இவரை யாராவது கவனிக்காவிட்டால், போலீசாரிடம் சொல்லி, கைது செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுகிறாராம். மேலும், மணல் கடத்தலை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் ஆய்வுக்கு வருவது தொடர்பாக மணல் கொள்ளையர்களுக்கு தகவல் தெரிவித்து, அதற்கும் தனியாக பணம் பார்த்து விடுகிறாராம். பாலாற்றில் குப்பையை கொட்டுபவர்களை பிடித்து மிரட்டியும் கல்லா கட்டி வருகிறாராம். பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், நான்தான் இந்த பகுதிக்கு தனிகாட்டு ராஜாவாக இருப்பேன் என கூறி வலம் வருகிறாராம். இவரின் ஆட்டத்திற்கு யார்தான் முற்றுப்புள்ளி வைப்பது...’’ என்ற கேள்வி உண்மையான காக்கிகளின் மத்தியில் பேச்சாக எழுந்துள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.  

‘‘அரிவாள் காணிக்கை வழங்கினாராமே அமைச்சர்... எதுக்காம்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வைணவ திருத்தலங்கள் 108ல் மதுரை அருகே அழகர்மலையில் அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோயிலுக்கு முக்கிய இடம் இருக்கு. இங்கு காவல் தெய்வமாக அமைந்துள்ள 18ம் படி கருப்பணசாமிக்கு வேண்டுதல் செய்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது தென்மாவட்ட பக்தர்களின் வலுவான நம்பிக்கை. கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு அமைச்சர், கடந்த 3 நாட்களுக்கு முன், கள்ளழகர் கோயிலுக்கு 2 அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் புடைசூழ சென்றாராம். அங்கு கருப்பணசாமிக்கு இரட்டை அரிவாள் காணிக்கை செலுத்தி வழிபட்டாராம். இதன் பிறகுதான் மதுரையில் 5 மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாராம். இதுவரை இல்லாத வகையில், திடீரென்று கருப்பணசாமிக்கு அமைச்சர் மணியுடன் கூடிய இரட்டை அரிவாள் காணிக்கை அளித்தது ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் மத்தியில் பரபரப்பான பேச்சாக உள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்