SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் செயலாளருக்கு சொகுசு கார் வாங்கி கொடுத்த இளம் அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-08-30@ 00:15:30

‘‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு வார பயணமாக அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் போன சம்பவம் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. ஆனா கடந்த இரண்டு நாட்களாக அதையும் தாண்டி ஒரு சம்பவம் தலைமை செயலக வட்டாரத்தில் பேசப்படுது..’’ என்று சிரித்தார் விக்கியானந்தா. ‘‘அப்படி என்ன பரபரப்பு விஷயம்...’’ என்று ஆச்சர்யம் தாங்காமல் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழக இளம் அமைச்சர் ஒருவர், தன்னுடைய துறை பெண் செயலாளருக்கு பிஎம்டபிள்யு கார் பரிசாக வழங்கி இருக்கிறாராம். அந்த அமைச்சர் எதற்காக இவ்வளவு விலை மதிப்புள்ள காரை செயலாளருக்கு அன்பளிப்பாக கொடுக்க வேண்டும்  என்ற ரகசியத்தை அறிந்துகொள்ள தலைமை செயலக ஊழியர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஓ.. அப்படி போகுதா விஷயம்... அதிருக்கட்டும் மைக் மந்திரி அடிச்சி விடுறாராமே..’’ என்று அடுத்த கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா.‘‘அவரு அப்டிதான். வஞ்சிரம் மீனை திமிங்கலம்னு சொல்லாமல் இருந்தால் சரி. 7 பேர் வழக்குல இவங்களை விடுதலை செய்ய முடியாதுன்னு அரசு தரப்புல வாதாடறாங்க... அவங்களுக்கு உரிமை இல்லைனு சொல்றாங்க. ஆனால் மைக்  மந்திரி கிண்டிக்கார் ‘ஏதாவது’ பார்த்து செய்வார் என்று சொல்றார். மருந்து மந்திரி மாதிரி நீட் வராது என்று சொல்லி சொல்லியே இரண்டு மாணவர்களை ஏமாற்றிய கதையாக போகிறது...’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கும் நீட் வந்துருச்சே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ரயில்வேயில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்த சிலர் டிக்கெட் கவுன்டரில் அரக்கோணம் என்பதையே அர்க்கணம் என்றும்.. திருவள்ளூரில் பலருக்கு ‘திரு’ என்ற எழுத்து தகராறு. இதில் தென்னிந்தியர்களுக்கே உரித்தான சித்தா, ஆயுர்வேதா  படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கி இருக்கிறார்கள். இவர்கள் கண்டங்கத்திரி, ஸ்புடம், படிகம், சூடம், தன்வந்தரா, மாண்டூகபரணி, பசலை, அஸ்வகந்தா, லேகியம், சூரணம், வல்லாரை போன்ற பெயர்களை எப்படி உச்சரிப்பார்கள். அதை எப்படி  நோயாளிகளுக்கு பரிந்துரை செய்வார்கள். பீகார், ஓடிசா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு இந்தி, மராட்டியம் உள்பட அந்தந்த மாநில மொழிகளை பேசும் மக்கள் மருத்துவர்கள் ஆனால் நோயாளிகளின் நிலைமையை எண்ணி பார்க்க வேண்டும்.  இதுபோன்ற பாரம்பரிய மருத்துவத்தில் அந்தெந்த மாநில மாணவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர... இதில் எல்லாம் மத்திய அரசு மூக்கு நுழைப்பது தவறு என்று இந்த படிப்புக்கு நீட் வராது என்று எண்ணி எழுதாத  மாணவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆனால் சேலம்காரர் வெளிநாடு போய்விட்டார். உடனே மருத்துவ மந்திரியும் எந்த கவலையும் இல்லாமல் சென்றுவிட்டார்... இந்த நிலையில்தான் லண்டனில் சேலம்காரருக்கு நீட் தேர்வை  தமிழகத்தில் அனுமதித்தது குறித்து எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அவர் சற்றும் அதை எதிர்பார்க்கவில்லையாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்ற அதிகாரியின் டயலாக்கை கேட்டு குடி பழக்கம் இல்லாத டாஸ்மாக் ஊழியர்கள் தள்ளாடுகிறார்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை மாநகரில் உள்ள ஒரு குறிப்பிட்ட பார் ஏலம் எடுப்பதில் இரு இலை கட்சி எம்எல்ஏ.க்களுக்கு இடையே கடும் போட்டி. இதன் உச்சக்கட்டமாக, டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் பலிகடா ஆக்கப்பட்டார். அவர், கடலூர் மாவட்டத்துக்கு  இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்து வேறு ஒரு அதிகாரி வரவழைக்கப்பட்டு, நியமிக்கப்பட்டார். இதனால், பலிகடா ஆக்கப்பட்ட, டாஸ்மாக் அதிகாரி கொதித்துப்போய்விட்டார். நான், 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து இந்த போஸ்டிங்  வாங்கி வந்துள்ளேன், ஒரு வருடத்துக்கு இடமாற்றம் செய்யமாட்டோம் என வாக்குறுதி வேறு கொடுத்து இருக்காங்க. லஞ்சம் வாங்கிக் கொண்டு விதிகளை மீறி என்னை எப்படி இடமாற்றம் செய்யலாம் என போர்க்கொடி தூக்கினார். விளைவு,  டிரான்ஸ்பர் போட்ட மூன்றே நாளில் கோவைக்கு திரும்பிவிட்டார். இங்கு, வழக்கம்போல் சார்ஜ் எடுத்துக்கொண்டார். இது, டாஸ்மாக் துறையில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இவர், அதிரடியாக பழைய இடத்தை தக்கவைத்துக்கொண்டதால்,  கடலூர் அதிகாரி, மீண்டும் அந்த ஊருக்கே திருப்பி அனுப்பப்பட்டார்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘அப்போ 30 லட்சத்துக்கு 1 கோடி அசல், வட்டியோடு தான் வேறு இடத்துக்கு போவார் போல... பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கொடுக்க வந்த சிறுமியிடமே இட்லி வாங்கி தின்றார்களாமே மகளிர் போலீசார்’’ என்று கேட்டார் பீட்டர்  மாமா.  ‘‘திருச்சியை சேர்ந்த 15வயது சிறுமி, தன் தாயின் இரண்டாவது கணவர் பாலியல் தொந்தரவு செய்வதாக திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க போனாராம். அப்போது அங்கு இருந்த சப்இன்ஸ்பெக்டர்,  சிறுமியிடம் பெயரளவுக்கு விசாரணை நடத்தினாராம். விசாரணையில் ரொம்பவே டல்லான சப்இன்ஸ்பெக்டருக்கு ரொம்ப பசி போல... அந் சிறுமியை அழைத்து வந்தவரிடம் ரொம்ப பசிக்கிறது இட்லி வாங்கி வாங்க வந்த பிறகு வெயிட்டா  விசாரிக்கிறேன்னு சொன்னாங்களாம்... அங்கிருந்த நாலைந்து போலீசாருக்கு இட்லி வாங்கி கொடுத்தாராம். பின்னர் போக்சோ சட்டத்தில் கேஸ் போட்டால் அடிக்கடி கோர்ட்டுக்கு வர வேண்டும். நிறைய செலவாகும். இப்ப கூட பாருங்க  எங்களுக்கு இட்லி வாங்கி கொடுத்த செலவு... நீங்கள் வந்த வாகன செலவு.. இதெல்லாம் தேவையா. உங்களை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது... அதனால பெண்ணின் அம்மாவை வரச் சொல்லுங்க.. புகாரை வாபஸ் வாங்கிட்டு போகச்  சொல்லுங்க... அவங்க இரண்டாவது கணவரை அதுக்கு அப்புறம் நாங்க கூப்பிட்டு விசாரிக்கிறோம் என்று சொல்லி அனுப்பிட்டாங்களாம். அந்த சிறுமியும், அவரது மாமாவும் தலையில் அடித்து கொண்டே ஸ்டேஷனை விட்டு வெளியே  வந்தாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.    


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்