SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லட்சக்கணக்கான ஆசிரியர்களின் கனவு தகர்ந்து போனது குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2019-08-28@ 00:59:41

‘‘மூடுவிழா நடந்ததை கண்டு கொதித்து போய் இருக்கும் மக்களை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாநகரோட போலீஸ் கமிஷனரா இருந்தவர, சமீபத்துல சிபிசிஐடிக்கு மாத்துனாங்க. அவரோட பணிக்காலத்துலதான் சிட்டி போலீசுல அதிரடியான பல திட்டங்கள அறிமுகப்படுத்தி செயல்படுத்தினாரு. குறிப்பா, தமிழ்நாட்டுலயே முதல்முறையா கொண்டுவந்த, பொதுமக்களுக்கான பெட்டிசன் மேளா திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. அதாவது, போலீசிடம் கொடுத்த பெட்டிசன் மீதான எங்களோட நடவடிக்ைக மற்றும் விசாரணை எல்லாம் உங்களுக்கு திருப்தியா இருந்துச்சானு, மாசம் ஒருமுறை கூட்டம் போட்டு, மக்கள்கிட்டயே நேரடியா கேட்டு தெரிஞ்சுக்கிட்டாரு. மக்கள் திருப்தி இல்லன்னு சொன்னா, மறுபடியும் விசாரணை நடத்த ஆர்டர் போட்டதும் இல்லாம, சம்பந்தப்பட்ட போலீசை கண்டிக்கவும் செஞ்சாரு. இதனால, ஒரு விஷயத்துக்கு அடுத்தடுத்து மீண்டும் வந்த பெட்டிசன் கொடுக்கற அவசியம் இல்லனு, பொதுமக்களும் சந்தோசப்பட்டாங்க. ஆனா, புதுசா வந்த கமிஷனரு அந்த திட்டத்த பத்தி எதுவும் கண்டுக்கலையாம். இதனால், ஒரே பிரச்னைக்கு மறுபடி, மறுபடியும் பெட்டிசன் வருதுனு, போலீஸ்காரங்களே சலிச்சுகிறாங்க. யாரு கொண்டு வந்தா என்ன, நல்ல திட்டமா இருந்தா தொடருங்கனு போலீஸ் தரப்புலயும், பொதுமக்கள் கிட்ட இருந்தும் கோரிக்கை வச்சிருக்காங்க...’’ என்று பொதுமக்களின் வேண்டுகோளை பற்றி சொன்னார் விக்கியானந்தா.
‘‘அப்புறம்...’’
‘‘மாசம் 5 லட்சம் கொடுக்கணும்னு எந்த கடைக்காவது விற்பனை டார்கெட் வைச்சு இருக்காங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை வடக்கு, கோவை தெற்கு, பேரூர், மதுக்கரை தாசில்தார் அலுவலகங்களில் சர்வே அளவீடு செய்யும் துறையில் தலைமை சர்வேயர்கள், மற்றும் துணை சர்வேயர்கள் இருக்காங்க. இதேபோல், மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டல அலுவலகங்களிலும் சர்வேயர்கள் பணிபுரிகிறார்கள். இதில், குறிப்பாக, கோவை வடக்கு தாசில்தார் அலுவலகம் மற்றும் மாநகராட்சி வடக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களிலும் பணிபுரிகின்ற சர்வேயர்கள் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன. பட்டா மாறுதல் மற்றும் சப்-டிவிஷன் பெறுதல் ஆகியவற்றுக்காக, இடங்களை அளந்து கொடுக்கக்கோரி பல ஆயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலான விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதிவாய்ந்த விண்ணப்பமாக இருந்தாலும், பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு, மனுதாரர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். காரணம், மாமூல் மறுப்பு. ஒவ்வொரு விண்ணப்பதாரர்களிடமும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டுதான் சர்வேயர்கள் களத்தில் இறங்குகிறார்கள். பணம் கொடுக்க மறுத்தால், விண்ணப்பம் கிடப்பில் போடப்படுவது நிச்சயம். மாதம் ரூ.5 லட்சத்திற்கு மேல் என வசூல் டார்கெட் பிக்ஸ் செய்து செயல்படுவதால்.. பைல்களை நகர்த்தாமல் வைத்துள்ளார்களாம். இந்த கையில் கரன்சி வந்தால் அந்த கையில் அளவெடுக்க டேப் நகருமாம்... இது குறித்து விஜிலென்சுக்கு தகவல் போயும் அவர்களும் கண்டுகொள்ளவில்லையாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆசிரியர்கள் அதிகளவில் பெயிலானதுல அரசியல் சதி இருப்பதாக பேசிக்கிறாங்களே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது பட்டம் பெற்று ஆசிரியர் வேலைக்காக காத்திருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு கடுமையான பாடத்திட்டம்தான் காரணம் என பள்ளிக்கல்வித் துறை சால்ஜாப்பு சொல்கிறது. ஆனால் பட்டப்படிப்பு முடித்து பிஎட் முடித்து ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள் ஏராளம். ஒருபுறம் அரசு பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு கூட ஆசிரியர்கள் இல்லாத நிலையில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் வேலை இல்லை. தகுதித் தேர்வில் தேர்ச்சி சதவீதமும் ஒரு சதவீதம் கூட இல்லை என்றால் பள்ளிக்கல்வித் துறை எங்கே போய் கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்புகின்றனர் கல்வியாளர்கள். நிர்வாக அனுமதி என்ற பெயரில் ஆசிரியர்களிடம் பல லட்சங்களை பெற்றுக் கொண்டு கேட்கும் இடத்திற்கு டிரான்ஸ்பர் போடுகின்றனர். நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி என்றால் அதற்கு ஒரு ரேட். இப்படி ரேட்டிங் போட்டு ஆசிரியர்களிடம் வசூலிப்பதால் தான் ஒரு பாடத்திற்கு பல ஆசிரியர்களும், ஒரு சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையும் அரசு பள்ளிகளில் உள்ளது. இதே நிலை நீடித்தால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் தலைகீழாகி விடும். இதற்கு கல்வித் துறையும், அரசியல்வாதிகளும்தான் தான் பொறுப்பு என மனம் புழுங்குகின்றனர் கல்வியாளர்கள். அதேபோல பள்ளிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், பள்ளியை நூலகம் ஆக்கினால் சம்பளம், வாடகை மிச்சப்படும் என்பதும் காரணமாம். ஒரு பக்கம் டிரான்ஸ்பர் வகையில் லாபம்... இன்னொரு வகையில் அரசுக்கு சம்பளம் மிச்சம் என்று யாரோ ஒரு புண்ணியவான் கொடுத்த ஐடியாவால 5 லட்சத்துக்கும் ேமற்பட்ட ஆசிரியர்களின் எதிர்காலம் இருண்டு போய் இருக்கிறது என்று சங்கத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கமிஷனில் கறாராக இருக்கும் அதிகாரி யாரு’’ என்று கேட்டார் பீட்டர் மாமா..
‘‘காரைக்குடி நகராட்சியில் நிர்வாக தலைமை பொறுப்பில் இருக்கும் ‘அழகு’ என்ற பொருள் தரும் உயரதிகாரி கமிஷன் வாங்குவதில் கறாரா இருக்காராம். கமிஷனில் ஒத்த ரூபா குறைஞ்சாலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்களிடம் திருப்பி கொடுத்து விடுவாராம்... அந்த அளவுக்கு ‘நேர்மையில்’ பெயர் பெற்றவராம்...’’ என்றார் விக்கியானந்தா. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்