SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-08-27@ 00:42:13

‘‘ரிமோட்டில் இயக்குவது என்றால் என்ன...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சேலம்காரர் லண்டன், அமெரிக்கா செல்கிறார். நம்பிக்கைக்கு உரிய முக்கிய அமைச்சர் ஒருவரிடம் பொறுப்பை கொடுத்துள்ளாராம். சில அதிகாரிகளை கண்காணிக்க சொல்லியும் உள்ளாராம். இவர் மூலம் லண்டனில் இருந்தே தகவல்களை தெரிந்து ரிமோட்டில் உத்தரவு வெளியாகும் ஏற்பாடு நடந்திருக்கிறதாம். கட்சி ஏற்கனவே பலவீனமடைந்துள்ளது. இந்த நிலையில் சொந்தக்கட்சிக்காரரை நம்பி முதல்வர் பொறுப்பை ஒப்படைக்காமால் இருப்பது பொதுமக்களின் மத்தியில் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று தொண்டர்கள் பேசிக் கொண்டது சேலம்காரரின் காதுக்கு எப்படியோ போச்சாம். என்னை தவிர வேறு யாரும் இந்த சீட்டை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. பொறுப்பு எல்லாம் தர முடியாது. இனியும் ஓட்டல், லாட்ஜில் ரகசியமாக சந்தித்து இதுபோன்று பேசுவதை நிறுத்தி கொள்ள சொல்லுங்கள் என்று முக்கிய நிர்வாகியிடம் கடிந்துகொண்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘லண்டன் போவதற்குள் சமரசம் முடிந்து முக்கியமான நபருக்கு முதல்வர் பொறுப்பு வழங்கினாலும் வழங்கப்படலாம் என்று ஒரு பேச்சு ஓடுகிறதே.. உண்மையா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘அவர் கொடுக்க தயாராக இருந்தாலும் இப்போ துணை ஏற்க தயாரா இல்லையாம். நான் முதல்வராக இருந்தவன் எனக்கு பொறுப்பு பதவி எல்லாம் கொடுத்து அசிங்கப்படுத்த வேண்டாம். இப்போ எப்டி இருக்கிறேனோ, அப்படியே இருந்துட்டு போறேன். என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஒதுங்கி கொண்டதாகவும் சொல்கிறார்கள். இது குறித்த இறுதி தகவல் இன்று வெளியானாலும் சொல்வதற்கு இல்லை...’’ என்று சிரித்தார் விக்கியானந்தா. ‘‘வேலூர்ல சர்க்கரை கசக்குதாமே அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் காட்பாடி- திருவலம் சாலையில் புதிய பெட்ரோல் பங்க்கை 15 நாட்களுக்கு முன்பே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. ஆனால் சர்க்கரை ஆலைத் தலைவரான ஆனந்தமானவர் வீரமான அமைச்சரை குஷிப்படுத்த ஆலை பணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பங்க் திறப்பு விழாவினை தடபுடலாக நடத்தினார். பங்கில் பெட்ரோல், டீசல் நிரப்பும் பணிக்கு 8 நபர்களை தினக்கூலிக்கு என நிர்ணயம் செய்துள்ளார். பின்னர் அவர்களிடமிருந்து தலா 50ஆயிரம் என 4 லட்சத்தினை ஆனந்தமானவர் பெற்றுக் கொண்டாராம். இதேபோல் ஏற்கனவே ஆலைப்பணிக்கு இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பணியில் அமர்த்திருப்பதும் அதிமுகவினரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வரும் மாதங்களில் சம்பளம் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆலையை சீரமைக்கும் பணிக்கு தேவையான உதிரிபாகங்கள் கூட வாங்க நிதியில்லாமல் ஆலை நிர்வாகம் விழிபிதுங்கி இருப்பதை பொருட்படுத்தாமல் திறப்புவிழாவிற்கு வீணாக ஆடம்பர செலவு செய்திருப்பது கரும்பு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அவ்வளவுதானா...’’ ‘‘அது மட்டுமே, ஆலையே நஷ்டத்தில் இருக்கும்போது தலைவருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள கார் மற்றும் அதற்கான மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 200லிட்டர் டீசலையும் நிரப்பிக் கொண்டு ஆலையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் தனது சொந்த பணிகளுக்காக பயன்படுத்தி வருவதும் தொழிலாளிகள், விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்காம். இதுதொடர்பாக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் புகார்களை அனுப்பி வருகின்றனர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள்.,,’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புகார்கள் குப்பைக்கு போகும். வேறு மேட்டரை சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வேலூர் மாநகராட்சியில் கடந்த முறை சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த தேமுதிகவை சேர்ந்த பெண் ஒருவர் கவுன்சிலராக வெற்றி பெற்றார். அவருக்கு பதவி போய் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஊரில் தான் கவுன்சிலர் தான் என்று கூறி பில்டப் கொடுத்து வருகிறார்.  இந்த பெண் நிர்வாகியின் செயல்களை சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இதுபோன்ற நிர்வாகிகளால் தான் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்று இருந்தால் கட்சி எப்படி வளரமுடியும் என்று புலம்பி வரும் தேமுதிகவினர் இதுகுறித்து கட்சி தலைமைக்கு புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பொதுத்துறையில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் ஆட்டம் ஜாஸ்தியா இருக்காமே..’’
 ‘‘பொதுத்துறையில் விஐபிக்கள் வரவேற்பு வேலைகளை கவனிக்கும் 3 எழுத்து ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இருக்கிறார். துணை அதிகாரி அந்தஸ்தில் உள்ளவர். ஜூனியர் அதிகாரி. இவர்தான், வெளிமாநிலம், வெளிநாடு, மத்திய அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி போன்ற விஐபிக்களின் பயண விவரங்களை கவனிப்பாராம்.

கடந்த வாரம் அவரது சகோதரர் வெளிமாநிலம் செல்வதற்காக விமானநிலையம் சென்றாராம். இதனால் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரி ஒருவரை அனுப்பி தம்பியை விமானத்தில் சீட் வரை சென்று அமர வைத்து விட்டு வரும்படி கூறினாராம். இதனால் அவரும் சென்றாராம். அங்கு சென்றபோது, தற்போது போக்குவரத்துத்துறை செயலாளராக இருக்கும் ராதாகிருஷ்ணன் விமானநிலையம் வந்து விஐபி அறையில் தங்கினாராம். அவருக்கு காபி வேண்டும் என்று கேட்டாராம். இவர் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளவர். இதனால் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து, காபி ஏற்பாடு செய்வதற்குள், 3 எழுத்து ஐஏஎஸ் அதிகாரியின் தம்பி விமானநிலையம் வந்து, விமானத்துக்கும் சென்று விட்டாராம். விமானத்தில் ஏறியதும் தனது சகோதரருக்கு போன் செய்து, நீ என்னை அனுப்ப எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்று புகார் செய்தாராம். இதனால் கோபமான மூன்று எழுத்து அதிகாரி, தனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரியை உடனடியாக மாற்றி டம்மி பதவிக்கு தூக்கியடித்து விட்டாராம். தற்போது அந்த 3 எழுத்து அதிகாரி காஞ்சிபுரம் கலெக்டர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்