SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் தொடரும் நகை பறிப்பு பெண்கள் ரோட்டில் செல்ல அச்சம்: கோவை போலீசாரின் தூக்கம் கலையுமா

2019-08-25@ 14:38:37

கோவை: கோவை நகரில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்றவை தொடர்கதையாகி விட்டது. குறிப்பாக தொடரும் நகை பறிப்பு சம்பவங்களால் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே அச்சப்படும் நிலை உள்ளது. கோவை மாநகரை பொறுத்தவரை சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 நகை பறிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகள் போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ஏனென்றால் நகை பறிப்பு சம்பவங்களில் குற்றவாளிகளை போலீசாரால் உடனே கைது செய்ய முடிவதில்லை. காரணம் பெரும்பாலான நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கைவரிசை காட்டுவதோடு ஓரிடத்தில் நகைபறிப்பில் ஈடுபட்டால் போலீசார் தேடுவதை அறிந்து மற்றொரு ஊருக்கு சென்றுவிடுகின்றனர். அங்கேயும் கைவரிசை காட்டிவிட்டு தங்களுடைய இடத்தை மாற்றி விடுகின்றனர். இதனால் நகை பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்வது போலீசாருக்கு பெரிய சவாலாக உள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்தும் அவர்களால் திருடப்பட்ட அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்ய முடிவதில்லை. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 20 வயது முதல் 35 வயதுடையவர்களாகவே இருக்கின்றனர். இதிலும் சில படித்த இளைஞர்கள் ஈடுபடுவது வேதனைக்குரியது. கோவையில் நடப்பாண்டில் 59 நகை பறிப்பு வழக்குகள் மட்டுமே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்களில் நூற்றுக்கணக்கான பவுன் நகைகளை பெண்கள் பறிகொடுத்துள்ளனர். இதில் ஈடுபட்ட ஒரு சிலர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான நகைபறிப்பு சம்பவங்களை போலீசார் வழக்குப்பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன் வைக்கின்றனர். இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் கூறியதாவது:- பெண்கள் நடந்து செல்லும்போது மிகவும் விழிப்புணர்வுடன் செல்ல வேண்டும்.

ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். பைக்கில் வரும் மர்ம நபர்கள் திடீரென நகை பறிப்பில் ஈடுபடுவதில்லை. முதலில் நமக்கு எதிர்புறமாக நோட்டமிட்டவாறு  செல்வார்கள். அதை நாம் கவனிப்பதில்லை. பின்னர் பின்புறமாக வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தங்களுடைய திட்டத்தை நிறைவேற்றுவார்கள். என்ன நடந்தது என்று உணர்வதற்கே நமக்கு ஐந்து நிமிடங்கள் ஆகும். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து சென்று விடுவார்கள். எனவே நடந்து செல்லும் பெண்கள் நகை வெளியே தெரியாதபடி அணிந்து மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும். நகையை பறிகொடுத்த ஒரு சிலர் உடனே புகார் அளிக்காமல் 4 அல்லது 5 நாட்கள் கழித்து புகார் அளிக்கின்றனர். மேலும் வீடுகள், கடைகள், தெருவின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா கூறியதாவது:- கோவையில் குறிப்பாக பெண்களை குறிவைத்து குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. வீட்டு முன்பு கோலம் போடும் பெண்களிடமும், கடைக்கு நடந்து செல்லும் பெண்களிடமும், நகை பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. இதனைக் குறைப்பதற்காக அரசும் போலீசாரும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. நகை பறிப்பு மற்றும் திருட்டு சம்பந்தமாக புகார் கொடுக்கச் சென்றால் உடனே வழக்கு பதிவு செய்வதில்லை. ‘எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து விட்டுப் போங்கள் நாங்கள் கண்டுபிடித்தால் தருகிறோம்’ என்று போலீசார் தரப்பில் அலட்சியமாக தெரிவிக்கிறார்கள்.   மேலும் வழக்குப் பதிவு செய்தால் கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டும் என்று பொதுமக்களை பயமுறுத்துகிறார்கள். இதனால் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கவே அச்சப்படும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க அரசாங்கம் மற்றும் காவல்துறை சார்பில் போதிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.   போதை கலாசாரம் அதிகமாக பரவி வருகிறது. இதுவும் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்துவிடுகிறது. இதில் அரசு முக்கிய பங்கு வகிப்பது வருத்தத்திற்குரிய செயலாகும். இவ்வாறு அவர் கூறினார்.

சமூக ஆர்வலர் டேனியல் கூறியதாவது: நகை பறிப்பு தொடர்பாக பெண்களுக்கு போலீசாரோ அல்லது மற்ற அமைப்புகளோ போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை. குறிப்பாக பெண்களுக்காக போராடும் மாதர் சங்கத்தினர் நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் பெண்கள் தங்களை காத்துக்கொள்ள தற்காப்பு கலையை கற்று கொள்ள வேண்டும். அதன் மூலம் நகை பறிப்பு மட்டுமின்றி பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு உதவியாக இருக்கும். பெண்கள் அதிக அளவில் நகையை அணிந்து கொண்டு வெளியே செல்லும் போது தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செல்லும் பட்சத்தில் தற்காப்புக்காக கைகளில் மிளகாய் பொடியை வைத்துக் கொள்ள வேண்டும். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்க உதவியாக இருக்கும் என்று குடியிருப்பு நல சங்கங்கள் கடைவீதிகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வலியுறுத்துகின்றனர்.  இதன் மூலம் குற்றங்கள் நடந்த பின்னரே குற்றவாளிகளை அடையாளம் காண முடியும். இதனை விடுத்து குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்னரே அதனை தடுப்பதற்கான நடைமுறைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2019

  22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்