SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாடு டூருக்கு தயாராகும் சேலம்காரரின் முன்னேற்பாடு குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2019-08-25@ 00:45:40

‘‘இடைத்தேர்தல் பற்றி சிறைப்பறவை தரப்பு என்ன நினைக்குதாம்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஜெயிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை... ஆனால் இரண்டாம் இடத்தை கண்டிப்பாக பிடித்தே தீர வேண்டும் என்று சிறைபறவை தனக்கு வேண்டியவர்கள் மூலம் கிப்ட்டுக்கு தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறார் என்ற ஒரு தகவல் இறக்கை கட்டி பறக்கிறது. அதே சமயம் இடைத்தேர்தலில் இலை ஜெயிக்கட்டும் நான் வெளியே வந்ததும் ஆட்சியை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வர அந்த இரண்டு இடங்களும் உதவும். எனவே, கிப்ட்டை சும்மா இருக்கச் சொல்லுங்கள். நாம் போட்டியிட்டால் இப்போது நம் மீது நட்பில் உள்ள எம்எல்ஏக்கள் கூட மனது மாறும் வாய்ப்பு இருக்கிறது. சீனியர் தலைவர்கள் பலரும் இன்னும் நம்மை நம்பித் தான் அமைதி காத்து வருகிறார்கள். அதை கிப்ட் கெடுத்துவிட வேண்டாம். எல்லாவற்றையும் நான் வெளியே வந்த பிறகு பார்த்து கொள்கிறேன். இடைத்தேர்தலில் போட்டி என்று ஆளுங்கட்சிக்கு இடைஞ்சல் கொடுக்க வேண்டாம். இதுவரை ஆளுங்கட்சி கிப்ட்டுக்கு தான் இடைஞ்சலாக இருக்கிறதே தவிர... நம் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏதோ நிர்பந்தத்தின் பெயரில் தற்போது ஆட்சி செயல்படுகிறது. அதை அப்படியே விடுங்கள். நான் வெளியே வந்ததும் என் மீதுள்ள விசுவாசம், பாசம் காரணமாக என்னிடமே வந்துவிடுவார்கள்... அதுவரை மத்திய அரசு மீதும் மற்றவர்களை பற்றியும் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டுபோ... ஆளுங்கட்சி மீது பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை வை... ஆனால் யாரையும் நேரடியாக சுட்டிகாட்டி விரோதத்தை சம்பாதித்து நீயும் சிறைக்கு சென்றுவிடாதே என்று கிப்ட்டுக்கு தனக்கு வேண்டியவர்கள் மூலம் தகவல் அனுப்பி இருக்கிறாராம்... அதனால இடைத்தேர்தலில் நிற்பது சந்தேகம் என்கிறார்கள் அவரது அடிப்பொடிகள்...’’என்றார் விக்கியானந்தா.

‘‘சேலம் ஜாலியாக டூர் கிளம்ப ரெடியாகிட்டாரு போல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தாமரை தலைவர் மாதிரி இவரும் வெளிநாடு கிளம்பிட்டாரு... என்ன ஒரு வித்தியாசம் தாமரை தலைவரு ஷாவை நம்பி தைரியமாக போய் இருக்கிறார். நம்ம சேலம்காரர் ஐஏஎஸ் அதிகாரிகளை நம்பி போக தயாராக இருக்கிறார். இவங்க தலைவி ஐபிஎஸ்சை அதிகம் நம்பினார். ஐஏஎஸ்களிடம் ஆலோசனை கேட்பார். இவர் முழுக்க முழுக்க ஐஏஎஸ் சாம்ராஜ்ஜியத்தையே நம்பி உள்ளார். இவர் அறிவிக்கும் திட்டங்களைக் கூட அமைச்சர்களுக்கு சொல்வதில்லையாம். ஏன் என்று விசாரித்தபோது சில  திட்டங்கள் குறித்து அமைச்சரிடம் கடந்த காலங்களில் விவாதித்தாராம். அதை அப்படியே சிலர் நா கூசாமல் தன்னுடைய திட்டம் என்பதுபோல சொல்லி... இதை சேலம்காரர் ஆரம்பித்து வைப்பார் என்று  ஆப்பு ைவச்சுட்டாங்களாம். அதனால திட்டங்களை அடக்கி வாசிக்க ஆரம்பிச்சு இருக்கிறார். சாதாரண திட்டங்களிலேயே அமைச்சர்களை நம்ப முடியவில்லை. வெளியூர் பயணத்தின்போது தமிழக அரசியல் மற்றும் நிர்வாகத்தை இவர்களை நம்பி எப்படி ஒப்படைப்பது என்று யோசித்துதான்... ஐஏஎஸ் மற்றும் தன் உறவினர்களான காவல் துறையில் இருக்கும் சிலரிடம் ரகசிய வேலைகள் சிலவற்றை ஒப்படைத்துள்ளாராம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘சொந்தக்கட்சிக்காரர்கள் மீது அவ்வளவு நம்பிக்கைதான்.. விவசாயிகள் படும்பாட்டை சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால, 1.73 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனராம். இதில் 1.50 லட்சம் ஹெக்டேர் பரப்பில் உணவு தானியங்கள், 23 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்ய இருக்காங்களாம். இதை பயன்படுத்தி போலி உரங்களை, ஆளுங்கட்சியின் ஆசி பெற்ற கடை வியாபாரிகள்  விற்பனை செய்கின்றனராம். இது ஒட்டன்சத்திரம், பழநி, வேடசந்தூர் பகுதியில் அதிகளவு விற்பனை செய்யப்படுதாம். இந்த கடைகள் குறித்து விவசாயிகள் புகார் செய்தால், வேளாண்துறை அதிகாரிகள், ‘அப்படியா, நாங்கள் விட மாட்டோம்’ என கடும் கோபத்தோடு ஆதரவாக பேசுகின்றனராம். அதேநேரம், ஆளுங்கட்சி ஆசி பெற்ற கடைக்காரர்களிடம், ‘வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு’ நடவடிக்கை ஏதுமின்றி கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனராம். விவசாயிகள் கேட்டால் உயர்மட்ட நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இனிமேல் விற்க மாட்டார்கள். விற்றால் எங்களிடம் புகார் தெரிவிக்கலாம்’ என கூலாக கூறுகின்றனராம்.  இப்படியே புகார்கள், வியாபாரிகளிடம் வசூல் என்ற இந்நிலை தொடர்வதால், போலி உரங்களின் புழக்கம் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவு உள்ளதாம். இதனால மழை பெய்தும் நாங்க பாடாய்பட வேண்டியிருக்கு’’ என விவசாயிகள் புலம்பித் தவிக்கின்றனர். கடன் வாங்கி விவசாயம் செய்தாலும் உரத்திலும் கலப்படம் செய்து விவசாயத்தையே சாகடிக்கிறாங்களே...’’ என்று விவசாயிகள் வேதனையோடு சொல்கிறார்களாம்...‘’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேறென்ன விவகாரம் இருக்கு..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. இதற்காக ஆள் பிடிக்கும் வேலையை இலை தரப்பு இப்போதே தொடங்கிவிட்டது. மூட்டையில் பணத்தை கட்டி வைத்துக் கொண்டு ஆள் பிடித்து வருகின்றனர் என்பதுதான் ஹைலைட். விஷயம் என்னவென்றால் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவை விட திமுகவிற்கு நாங்குநேரி தொகுதியில் மட்டும் 34 ஆயிரத்து 710 ஓட்டுகள் அதிகம் கிடைத்தது. நெல்லை மக்களவை தொகுதியில் அடங்கிய 6 சட்டசபை தொகுதிகளில் பாளையங்கோட்டைக்கு அடுத்து 2வதாக இந்த தொகுதியில் ஓட்டு வித்தியாசம் அதிகம். இதுதான் அதிமுகவிற்கு கிலியாக உள்ளது. இதனால் நாங்குநேரி இடைத்தேர்தலை வாழ்வா...சாவா பிரச்னையாக அதிமுக பார்க்கிறது. ஒவ்வொரு ஊராக சென்று பூத் ஏஜென்டிற்கு இப்போதே ஆள் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். பெண்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் கச்சிதமாக போய் விடும் என்பதற்காக பெண்களை மட்டும்தான் குறி வைத்து தேடுகின்றனர். ஆனால் பெண்கள் யாரும் தயாராக இல்லை என்பதால் பூத் ஏஜென்டிற்கு ஆள் பிடித்துத் தந்தால் ₹5 ஆயிரம் தருகிறோம் என அதிமுகவினர் கூவி வருகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tvmalai

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

 • tvmalai

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

 • pslv_rocket111

  ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

 • sweeden_novbal1

  சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!

 • brazil_venom11

  நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்