SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எழுச்சி வருமா?

2019-08-25@ 00:45:39

மோடி 2.0 அரசில், நாட்டின் பொருளா தாரத்தை 2025ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தப்போகிறோம் என்று கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தபோது, பொருளாதார நிபுணர்களே சற்று அதிர்ந்துதான் போனார்கள். ஏனென்றால் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி அமல் போன்றவற்றால் இந்திய பொருளாதாரமே படுபாதாளத்தை நோக்கி வேகமாக சரிந்து வருவதை அறிந்தவர்கள் அவர்கள். அடுத்தடுத்து வந்த செய்திகள் பொருளாதாரத்தின் உண்மை நிலையை படம் பிடித்து காட்டத் துவங்கின. வாகன உற்பத்தி துறையில் சுமார் ₹45 லட்சம் கோடிக்கு விற்பனையாகாமல் வாகனங்கள் தேங்கி உள்ள நிலையில், 10 லட்சம் பேரின் வேலை வாய்ப்பு பறிபோகும் என்ற அபாய சங்கொலியை கேட்டதும் பதற்றம் அடையாதவர்கள் கிடையாது. அடுத்து, ரியல் எஸ்டேட் துறையில் கட்டி முடிக்கப்பட்ட பல்லாயிரம் வீடுகள் விற்பனையாகாமல் தேங்கி கிடப்பதாக செய்தி. ஐந்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட் வாங்கவே வாடிக்கையாளர்கள் யோசிக்கிறார்கள் என்று பிரிட்டானியா பிஸ்கட் நிறுவன நிர்வாகி தெரிவித்த மறுநாளே விற்பனை குறைந்ததால் 10 ஆயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாக பார்லே பிஸ்கட் நிறுவனம் அறிவித்தது. தொடர்ந்து மூடிஸ் ஆய்வு நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்து சந்தேகம் எழுப்ப, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் 70 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார மந்தநிலை  இந்தியாவில் நிலவுகிறது என்று பட்டவர்த்தனமாக போட்டுடைத்தார்.

இதுவரை, நடப்பது எல்லாமே நன்மைக்கே என்று அமைதியாக இருந்த மத்திய அரசு, விழித்து கொண்டு பல்வேறு துறைகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் வீழ்ச்சியடைந்து வரும் தொழில் துறையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய அரசின் இந்த சலுகைகள் தொழில் துறையை சரிவில் இருந்து காப்பாற்றும் முயற்சிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது வரவேற்கத்தக்க முயற்சிதான். ஆனால், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்ந்து, அறிவிக்கப்பட்ட சலுகைகள் அதன் பயனாளிகளான தொழில் துறையினரை சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.கடன் வழங்குவதை அதிகரிக்க பொதுத் துறை வங்கிகளுக்கு ₹70 ஆயிரம் கோடி ஒதுக்கப்போவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதோடு கடன் வழங்கும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும். வாகன துறையில் விற்பனை தேக்கத்துக்கு காரணமே மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க போகிறோம் என்று மத்திய அரசு முஸ்தீபு காட்டியதுதான். இதற்காக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பல கட்டுப்பாடுகள் வரப்போவதாக செய்திகளை கசியவிட்டதே அரசுதான். இப்போது, கட்டுப்பாடுகள் வராது என்று அரசு கூறியுள்ளதை வாடிக்கையாளர்கள் நம்புவார்களா? என்பது சந்தேகமே. அரசின் முயற்சிகளால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் எழுச்சியடையுமா? என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2019

  22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்