SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போரூர் குன்றத்தூர் சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

2019-08-24@ 00:27:14

பூந்தமல்லி: போரூர் குன்றத்தூர் சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கோயம்பேட்டில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  எடுத்துச்செல்லும் பைப்லைன் பதிக்க, போருர் குன்றத்தூர் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் பல மாதங்களாக இந்த சாலை சீரமைக்கப்படவில்லை.
இந்நிலையில், அலட்சிய போக்குடன் செயல்படும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து போரூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் போரூர் ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு நெடுஞ்சாலை துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:

போரூர் - குன்றத்தூர் சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏராளமான பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி பாய்கடை, கெருகம்பாக்கம், கோவூர், மவுலிவாக்கம், குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.  கடந்த சில மாதங்களாக இந்த சாலையில் குழாய் அமைக்கும் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் சாலையை இன்னும் நெடுஞ்சாலைத்துறை சீரமைக்கவில்லை. இதனால் குண்டும், குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.  மேலும்  கோடை காலத்தில் புழுதி பறக்கும் சாலையாகவும், மழைக்காலங்களில் சகதி நிறைந்த சாலையாகவும் காட்சியளிக்கிறது. இதனால் சாலையோரம் உள்ள கடைகளில் வியாபாரம் செய்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துக்களும் ஏற்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் பிறகும் சாலை சீரமைக்கப்படவில்லை என்றால் வியாபாரிகள், குடியிருப்போர் நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போரூர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • malar_palam11

  கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

 • banglore_fire11

  பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

 • 19-09-2019

  19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china_shankaiii1

  பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

 • paris_taksi11

  போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்