SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீர் விவகாரத்தில் 3ம் நாடு தலையிடக் கூடாது : பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்

2019-08-24@ 00:24:09

சாண்டிலி: காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இதில் 3ம் நாடு தலையிடவோ அல்லது வன்முறையை தூண்டவோ கூடாது’ என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பிரான்சு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதலாவதாக நேற்று முன்தினம் பிரான்சு வந்தடைந்தார். முதல் கட்டமாக இருநாடுகளின் தூதரக அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. அதன் பின், பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இருநாடுகளின்  நட்புறவு, அதனை மேலும் வலுப்படுத்துதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பேசிய மோடி, `‘காஷ்மீர் மற்றும் அதன் இறையாண்மை விவகாரத்தில் எடுத்த முடிவு  குறித்து மேக்ரானிடம் விவரித்தேன்,’’ என்றார். அதற்கு இந்த  பிரச்னையில் இருநாடுகளும் இணைந்து தீர்வு காண வேண்டும். 3ம் நாடு தலையிடவோ  அல்லது வன்முறையை தூண்டவோ இடமளிக்க கூடாது’ என்று பதில் அளித்ததாக மேக்ரான்  தெரிவித்தார்.

மேலும், மேக்ரான் கூறுகையில், ‘`இன்னும் சில நாட்களில் பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான்கானை தொடர்பு கொண்டு இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த  வலியுறுத்துவேன்,’’ என குறிப்பிட்டார். `‘இருநாடுகளும் தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன. எல்லை கடந்த தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி. பாதுகாப்பு ஒத்துழைப்பு, எல்லை கடந்த தீவிரவாதத்தை ஒழிக்க இருநாடுகளும் இணைந்து செயல்படும்,’’ என்று மோடி தெரிவித்தார். பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட உள்ளோம். பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியாவின் மிக முக்கிய தூணாக விளங்குவதற்கு அடையாளமாக அடுத்த மாதம் ரபேல் போர் விமானம் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளது,’’ என்றும் மோடி கூறினார். இதையடுத்து, இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய ஆர்டர் ஆப் சையத்’ விருது வழங்கப்பட உள்ளது. அதன் பின்னர் அங்கிருந்து அவர் நாளை பஹ்ரைன் செல்ல இருக்கிறார்.

இணையவழி பாதுகாப்பு

பிரதமர் மோடி - அதிபர் மேக்ரான் சந்திப்பின் போது, இருநாடுகள் இடையிலான டிஜிட்டல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பில் வெளிப்படையான, நிலையான, நம்பகத்தன்மையுடன் கூடிய ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேரடி சந்திப்புகள், பேச்சுவார்த்தை, வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் இதற்கான ஒத்துழைப்பு அளிக்கப்படும். பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சகமும், இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இதில் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஊழலுக்கு இடம் கிடையாது’

பாரீசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றிய மோடி, ``2019 மக்களவை தேர்தல் வெற்றி, பாஜ அரசு அமைப்பதற்கான வெற்றி மட்டுமல்ல. புதிய இந்தியாவை கட்டி எழுப்ப மக்கள் கொடுத்த வெற்றி. புதிய இந்தியாவில் ஊழல், வாரிசு அரசியல், மக்கள் பணத்தை கொள்ளையடித்தல், தீவிரவாதத்துக்கு இடம் கிடையாது. இவை இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மோடியினால் இந்தியா முன்னேறப் பாதையில் செல்லவில்லை. இந்திய மக்கள் தங்களுடைய வாக்குகள் மூலம் அளித்த ஒப்புதலினால் இந்தியா முன்னேறுகிறது. புதிய இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக அநீதி இழைக்க முடியாது,’’ என்று தெரிவித்தார்.

நினைவுச்சின்னம் திறப்பு

பிரான்ஸ் நாட்டின் மோன்ட் பிளாங்க் மலை சிகரத்தை கடந்த போது 2 ஏர் இந்தியா விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இந்திய அணுசக்தியின் தந்தை என்றழைக்கப்பட்ட ஹோமி பாபா உள்பட பலியான 265 பேர்களின் நினைவு சின்னத்தை வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ``துயர சம்பவங்களின் போதும் கூட இந்தியாவும் பிரான்சும் ஒன்றுக்கொன்று துணை நின்றன. ஹோமி பாபா உள்பட பல இந்தியர்கள் இரண்டு விபத்துகளிலும் பலியாயினர். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஒரு நாட்டு மக்கள் மீது மற்றொரு நாட்டினர் வைத்திருக்கும் இரக்கத்திற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-02-2020

  29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • DelhiBackToNormal282

  வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

 • president20

  எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

 • saudipudhuvellai11

  ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

 • vaanvali20

  சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்