SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் நகரமாக சென்னை திகழ்வதற்கு திமுக எந்நாளும் பாடுபடும் : மு.க.ஸ்டாலின் சூளுரை

2019-08-23@ 01:19:07

சென்னை: சென்னை மாநகரம் இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும்  நகரமாக திகழ்வதற்கும் முன்னிலை வகிப்பதற்கும் திமுக எந்நாளும்  பாடுபடும் என்று மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை மாநகரின் 380வது பிறந்த நாளை முன்னிட்டு, வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகருக்கு இன்று (நேற்று) 380வது பிறந்தநாள். பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் நாள் சென்னை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் வாய்ப்பு தேடியும் வாழ்வாதாரம் தேடியும் வருவோருக்கு சென்னை அன்புமிகு அன்னையாகவே அரவணைக்கிறது என்றால் மிகையில்லை. இனம்-மொழி, மதம் - சாதி பேதமற்ற சமத்துவபுரமாகத் திகழும் சென்னையின் வளர்ச்சியில் திமுக ஆட்சிக் காலத்தின் பங்கு மகத்தானது. அண்ணா காலத்தில் 1959ல் சென்னை மாநகராட்சியை திராவிட முன்னேற்றக் கழகம், தலைவர் கலைஞரின் தேர்தல் வியூகத்தினால் வென்றது. அப்போது முதலே, சென்னையின் வளர்ச்சிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

1967ல் திமுக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றபோது, அண்ணா தலைமையில் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்று, அன்னைத் தமிழின் புகழ் அகிலமெங்கும் நிலை நாட்டப்பட்டதுடன், தமிழ்ச் சான்றோர்களுக்கு மெரினா கடற்கரையில் சிலைகள் நிறுவப்பட்டு, தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றை இன்றைய தலைமுறையும் எண்ணிப் பார்க்கும் வகை செய்யப்பட்டது. அண்ணா மறைவுக்குப் பிறகு, 1969ல் கலைஞர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சென்னை மாநகரத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அடுக்கடுக்காக செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட அண்ணா மேம்பாலம் என்கிற மகத்தான கட்டமைப்பு,  இன்றளவும் அண்ணா சாலையின் போக்குவரத்து நெருக்கடியை திறம்பட எதிர்கொண்டு வெகுவாக குறைப்பதிலிருந்தே இதனை அறிந்து கொள்ள முடியும். மாநகரத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட அண்ணா நகர் என்பது கலைஞர் தொலைநோக்குப் பார்வைக்கான எடுத்துக்காட்டு.

கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்தி, அதில் பொதுமக்கள் படகு சவாரி செய்வதற்கு வசதி செய்தவர் கலைஞர். வான்புகழ் வள்ளுவருக்கும் அவர் கட்டமைத்த தமிழ்ப் பண்பாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கி, சென்னைக்கு இலக்கிய அடையாளம் தந்தவரும் கலைஞர்தான். சென்னையின் பூர்வகுடி மக்கள் குடிசைகளில் வாழ்ந்த நிலையை மாற்றி, அவர்களை அடுக்குமாடிகளில் குடியேறச் செய்யும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியவரும் கலைஞரே. 1989ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, விரிவாக்கப்பட்ட சென்னை விமான நிலையத்தின் திறப்பு விழாவில் அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிடம் விழா மேடையில் முதல்வர் கலைஞர் வைத்த கோரிக்கையின் காரணமாக, பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரும் சூட்டப்பட்டன. 1996-2001ல் கலைஞர் தலைமையில் திமுக அரசு நடைபெற்றபோது, சென்னை மாநகராட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமை மிக்க பொறுப்பினை நான் பெற்றேன். கலைஞர் அரசின் ஒத்துழைப்புடன் சிங்காரச் சென்னையை உருவாக்கும் பணியினை மேற்கொண்டு 10 சிறுமேம்பாலங்கள் கட்டப்பட்டன. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காக்கள் சீரமைக்கப்பட்டும் உருவாக்கப்பட்டும் இயற்கைச் சூழல் பாதுகாக்கப்பட்டது.

சாலைகளில் தேங்கும் மழைநீரை இயல்பாக அப்புறப்படுத்தும் வகையில் மழைநீர் வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் கணினி வசதிகளுடன் தரம் மேம்படுத்தப்பட்டன. மாநகராட்சி சுகாதார நிலையங்கள் கூடுதல் மருத்துவ வசதிகள் கொண்டவையாக மாற்றப்பட்டு, மக்களுக்கு சிறப்பான சேவை செய்தன. ஆங்கிலம் உள்பட அனைத்து மொழிகளிலும் ‘மெட்ராஸ்’ என்ற பெயர் நீக்கப்பட்டு, சென்னை என்றே அனைத்து மொழிகளிலும் அழைக்கப்படச் செய்ததும் கலைஞரின் ஆட்சிக்கால சாதனை தான். 2006-2011 திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராகவும், அவரது வழிகாட்டுதலின்கீழ் உள்ளாட்சித் துறை அமைச்சராக நானும் பொறுப்பு வகித்த போது சென்னையின் குடிநீர்த் தேவையை எதிர்கொள்ளக் கூடிய வகையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
இன்று நீரியல் வல்லுநர்கள் பலரும் மழைநீர் சேமிப்புடன்-கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை விரைந்தும் விரிவாகவும் செயல்படுத்த வேண்டும் என இன்றைய ஆட்சியாளர்களை வலியுறுத்துவதிலிருந்தே திமுகவின் தொலைநோக்குப் பார்வையுடனான சென்னையின் வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களை அறியமுடியும்.

கிண்டி கத்திப்பாரா, கோயம்பேடு, பாடி உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடிகளை குறைக்கும் உலகத் தரத்திலான மேம்பாலங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மத்திய அரசில் பங்கேற்றிருந்த திமுக அமைச்சர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டன. மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோதெல்லாம் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சியை மனதில் கொண்டு சென்னைக்கான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன. அதன் அடையாளமாகத்தான் டைடல் பார்க் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம், கோயம்பேடு பேருந்து நிலையம், புதிய தலைமைச் செயலகம், புதுப்பிக்கப்பட்ட சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்டவை திகழ்கின்றன. தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரம் இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் நகரமாக திகழ்வதற்கும் முன்னிலை வகிப்பதற்கும் திமுக எந்நாளும் பாடுபடும். சென்னைவாழ் மக்கள் அனைவருக்கும், சென்னையின் பிறந்தநாளான இந்த நன்னாளில் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nisarkaa4

  மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

 • gujarat4

  குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்