SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபத்தின் விளிம்பில் ஓசோன்

2019-08-21@ 17:28:21

நன்றி குங்குமம் முத்தாரம்

சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சு  ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்கும் பணியைச் செய்து வருகிறது ஓசோன் படலம். இது எதனால் பாதிக்கப்படுகிறது? அதனால் ஏற்படும் உடல் நல பிரச்னைகள் என்னென்ன என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கான தீர்வு காண, தற்போது அனைவரும்  இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஓசோன் படலம் சிதைந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்று 1970-களில் விஞ்ஞானிகள் குரல் கொடுத்தனர். ஹாலந்தைச் சேர்ந்த பால் குருட்சன், ஓசோன் படலத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதைக் கண்டறிந்தார். அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் குளோரோ புளூரோ கார்பன், மீதைல் குளோரோபார்ம் போன்ற  வேதிப்பொருட்கள் ஓசோன் படலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது தெரிய வந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவான சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிடுகின்றன.

பூமியிலிருந்து 15 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் உயரம் வரை உள்ள வளிமண்டலப் பகுதி ‘ஸ்டிராட்டோஸ் பியர்’  என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் அமைந்துள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் மீது சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சு வேதிவினை புரிவதால் ஆக்சிஜன் அணுக்கள் பிரிக்கப்பட்டு, அந்த அணுக்கள் புதிய  ஆக்சிஜனுடன் சேர்ந்து ஓசோன் வாயுவாக மாறுகின்றன. இது ஒரு படலம் போல பூமியைச் சூழ்ந்திருக்கிறது. இந்தப் படலம்  இருப்பதால்தான் சூரியஒளி பூமிக்கு நேரடியாக வருவதில்லை.

அண்டார்டிகா பனிக் கண்டத்தின் மேற்பகுதியில் ஓசோன் படலம் மெலிந்து காணப்படுகிறது. இந்தப் பரப்பளவு ஆஸ்திரேலியாவின் பரப்பைப் போல்மூன்று மடங்கு. இதை ஓசோன் ஓட்டை என்று சொல்வதைவிட ஓசோன் படல மெலிவு  என்று சொல்லலாம். இதனால் புற ஊதாக் கதிர்கள் எளிதில் உள்ளே நுழைகின்றன.

குளிர்பதனப் பெட்டியில் (Air Conditioner) இருந்து வெளியாகும் குளோரோ புளூரோ கார்பன் ஓசோனுடன் வினைபுரிந்து  குளோரினாகவும், ஆக்சிஜனாகவும் மாறுகிறது. இதனால் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து போகிறது. உரங்களில்  பயன்படுத்தப்படும் மெத்தில் புரோமைடு, ஜெட் விமானங்கள் வெளியிடும் நைட்ரிக் ஆக்சைடு போன்றவையும் இப்படிப்பட்ட   பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

மரக்கட்டை, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது, தீயணைப்பு கருவிகள், ஸ்பிரேக்களில்  இருந்து வெளியேறும் குளோரோ புளூரோ கார்பன், டூவீலர்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்டை  ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடுவதாலும் ஓசோன் படலம்  பாதிக்கப் படுகிறது.

இதன் காரணமாக புற்றுநோய், தோல் நோய்கள், பார்வை இழப்பு, பயிர்களுக்குப் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.  உலகில் தோல் புற்றுநோய்க்கு ஆண்டுதோறும் 80 ஆயிரம் பேர் பலியாவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓசோன் படல  மெலிவு விரி வடைவது தடுக்கப்பட்டு விட்டாலும்கூட, ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாக சீரமைக்கப்படவில்லை.

வளிமண்டலத்தில் இருந்து பூமியில் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு நன்மை செய்யும் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறையாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ஓசோனைச் சிதைக்கும்  செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும். அதற்கு காற்று மண்டல மாசு பாடுகளைக் கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை பொதுமக்களும், அரசும் ஒன்றாக இணைந்து மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதன்மூலம்  வருங்காலத்தில் இப்பூமியில் வாழும் உயிரினங்களின் பாதுகாப்பினை நாம் உறுதி செய்யலாம்.

க.கதிரவன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2019

  22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்