SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்ம காசு நம்ம ஆட்களுக்கே! ஆன்லைன் விற்பனையில் இது புது டிரெண்டு!!

2019-08-21@ 14:49:52

“இன்றைய தலைமுறையினர் மத்தியில் கடைக்கு சென்று பொருட்களை வாங்கும் பழக்கம் மறைந்து வருகிறது. இருக்கும் இடத்திலேயே அமர்ந்துக் கொண்டு பொருட்கள் ஆர்டர் செய்கிறார்கள். மேலும் அந்த பொருட்களும் அவர்கள் இருக்கும் இடத்தை தேடி வந்தடைந்துவிடுகிறது. இதனால் நாம் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு கூட செல்வதில்லை. அதற்கு அவர்கள் அளிக்கும் காரணம் வீட்டுக்கே பொருட்கள் வரும் போது நாம் ஏன் கடைகளை தேடிச்செல்ல வேண்டும். ஆனால் இதற்கு பின் இருக்கும் வணிக ஆதிக்கத்தினை பற்றி நாம் யாரும் யோசிப்பதில்லை” என்கிறார் சென்னையை சேர்ந்த பிரதாப் ராஜ்.இவர் CTONSHOP என்ற appஐ உருவாக்கியுள்ளார். இதன் மூலம் சென்னையில் உள்ள அனைத்து ஏரியாவில் உள்ள கடைகள் பற்றிய விவரங்கள் தெரிந்துக் கொள்வது மட்டும் இல்லாமல், வெளிநாட்டு வணிக ஆதிக்கத்தையும் குறைக்கமுடியும் என்கிறார்.
பிரதாப் ராஜ் கலைக்கல்லூரியில் விஸ்காம் துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றவர். அதன் பிறகு அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் டிசைன் துறையில் முதுகலைப்பட்டம் பயின்றார்.

‘‘பட்டப் படிப்பை முடித்த கையோடு ஐ.டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பத்து வருடமாக வேலைப் பார்த்து வந்தேன். இதன் மூலம் பல சாஃட்வேர்கள் மற்றும் அதனால் மக்கள் எவ்வாறு பயனடைகிறார்கள் குறித்து ஆய்வு செய்து வந்தேன். அந்த சமயத்தில் தான் எனக்கு ரீடெயில் துறை மேல் ஆர்வம் ஏற்பட்டது. அந்த துறை எவ்வாறு செயல்படுகிறது என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அது குறித்த ஆய்வில் இறங்கினேன்.அந்த சமயம் தான் சென்னைக்கு ஆன்லைன் ஷாப்பிங் அறிமுகமாச்சு. சென்னை மக்களுக்கு இது புதுசு. மேலும் அவர்களுக்கு வசதியாகவும் இருந்தது. ஆன்லைன் மார்க்கெட்டில் முதன் முதலில் பிலிப்கார்ட் என்ற நிறுவனம் தான் அடி எடுத்து வைத்தது. நாம் இருக்கும் இடத்தில் இருந்தே பொருட்களை வாங்கலாம் அதே சமயம் அந்த பொருளும் நம்மை தேடி வந்தடையும் என்று சொன்ன போது மக்கள் அதை உற்சாகமாக வரவேற்றனர். உடை முதல் வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களையும் ஆன்லைனில் வாங்க துவங்கினாங்க. நல்ல விஷயம் தான். இதனால் நம் நாட்டின் வணிகமும் கணிசமாக உயர்ந்துவந்தது.

ஆனால் -இப்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனம் தன் வசமாக்கியுள்ளது. இப்போது நாம் வாங்கும் ஒவ்வொரு பொருட்களும் அமெரிக்க நிறுவனங்களின் வணிகத்தை உயர்த்தி வருகிறது. நம்முடைய பணம் சர்வதேச மார்க்கெட்டுக்கு போக ஆரம்பித்துள்ளது. இதனால் இந்தியாவின் வணிகம் நாளடைவில் பாதிப்படையும். நம் பணம் நம்நாட்டுக்குள் இருந்தால் தானே நம் நாடு வளமடையும் அதற்கான தீர்வு என்ன என்று யோசித்த போது அதே ஆல்லைன் ஷாப்பிங் முறையை நம் ஏரியா கடைகளுக்கு பயன்படுத்தினால் என்ன என்று தோணுச்சு’’ என்று சொன்ன பிரதாப், அதற்காகவே CTONSHOP என்கிற appஐ உருவாக்கி இருக்கிறார்.‘‘நம்மூரில் உள்ள சாதாரண கடைகளில் இல்லாத பொருட்களா இந்த ஆன்லைனில் கிடைக்கிறது. மேலும் அதே பிரபல பிராண்ட் உடைகளும் நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கும் கடைகளில் கிடைக்கிறது. இது பற்றி யாரும் யோசிப்பது இல்லை. இவர்களுக்காக ஒரு ஆப்பினை உருவாக்க நினைச்சேன். முதலில் நான் வசிக்கும் இடத்தில் உள்ள சின்ன சின்ன கடைகளை நிர்வகித்து வருபவர்களை சந்தித்து பேசினேன்.

ஆன்லைன் விற்பனையால் இவர்களின் விற்பனை பாதிப்படைந்துள்ளது என்பதை அறிந்தேன். மேலும் இன்றைய தலைமுறையினர் யாரும் நேரடியாக கடைக்கு சென்று பொருட்களை வாங்க முன் வருவதில்லை. இந்த நிலை மாற நம்மூர் கடைகளையும் டிஜிட்டல் மயமாக்க நினைச்சேன். ஷாப்பிங் அவர்களின் பர்சனல் பொருளாக மாறிவிட்டது. முன்பு குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று வந்தோம். இப்போது கிடைக்கும் நேரத்தில் அவரவர் ஷாப்பிங் செய்ய ஆரம்பிச்சுட்டோம். ஆன்லைன் ஷாப்பிங் செய்வது தவறில்லை. அதே சமயம் நம்மூரில் இருக்கும் கடைகளில் ஷாப்பிங் செய்யலாமே?
 கடன் வாங்கியோ அல்லது அம்மாவின் நகைகளை அடமானம் வைத்து சின்னதாக ஒரு கடை திறந்து இருப்பாங்க. இவங்களுக்கு கடையை
திறப்பதே பெரிய விஷயமாக இருக்கும். அதற்கு மேல் அவர்களால் பத்திரிகையிலோ அல்லது தொலைக்காட்சியிலோ விளம்பரம் செய்ய வசதி இருக்காது. இவர்களின் ஒரே ஆப்ஷன் சோஷியல் மீடியா தான்.

அப்படியே அதில் விளம்பரம் செய்தாலும் எத்தனை பேர் பார்ப்பார்கள் என்பது தெரியாது. இவர்களை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த நினைச்சேன். அதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த ஆப். இந்த ஆப்பில் நீங்கள் வசிக்கும் ஏரியாவில் உள்ள கடைகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் இருக்கும். சாதாரண மண்பானை கடை முதல் பெரிய ரீடெயில் கடை பற்றிய அனைத்து விவரங்களும் இதில் பதிவு செய்யலாம்’’ என்றவர் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.‘‘விற்பனையாளர்கள் CTONSHOP ஆப்பை தங்களின் செல்போனில் தரவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு உங்கள் கடை பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் சலுகைகள் இருந்தாலும் இதில் குறிப்பிட்டு பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்களுக்கும் அதே முறை தான். ஆனால் அவர்கள் ஆப்பினை டவுண்லோட் செய்தால் மட்டுமே போதும். பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு முறை டவுண்லோட் செய்த பிறகு வாடிக்கையாளர்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப கடையினை தேர்வு செய்து பொருட்களை வாங்கலாம். இதன் மூலம் சிறு கடைகள் வைத்து இருப்பவர்களும் பயன் அடைய முடியும். முக்கியமாக நம்முடைய பணம் நம் நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு செல்லாது.

இந்த ஆப்பை பொருத்தவரை யார் வேண்டும் என்றாலும் பதிவு செய்யலாம். சாலையில் மண்பானை விற்கும் பாட்டிக் கூட தன் கடையை பற்றி இதில் பதிவு செய்யலாம். விற்பனையாளகள் இதற்காக எந்த செலவும் செய்ய வேண்டும் என்றிலில்லை, அவர்களிடம் ஆண்ட்ராய்ட் செல்போன் மட்டும் இருந்தால் போதும். தற்போது கடந்த மாதம் தான் இந்த ஆப்பினை லாஞ்ச் செய்து இருக்கேன். இதற்காக ஒரு வருடம் ஆய்வு செய்தேன். மேலும் சின்ன சின்ன திருத்தங்கள் செய்ய வேண்டும். கடைகளை பற்றிய விளம்பரம் மட்டும் இல்லாமல் வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்தி தரும் எண்ணம் உள்ளது. பொதுவாக இந்த கடைகளில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவார்கள். அவர்களின் தேவையை இதன் மூலம் பதிவு செய்யலாம். அதன் படி மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்றவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் எண்ணம் உள்ளது. இதன் மூலம் அவர்களும் சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.

இந்த ஆப்பினை இந்தியா முழுக்க பயன்படுத்தலாம். தற்போது சென்னையில் மட்டுமே 100 கடைகள் இந்த ஆப்பில் இணைந்துள்ளன. அடுத்த கட்டமாக பெங்களூர், மும்பை, தில்லி போன்ற நகரங்களில் உள்ள கடைகளையும் இதில் இணைக்கும் எண்ணம் உள்ளது. மேலும் சொடக்சோ கார்டு போல் இந்த ஆப் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கார்டு கொடுக்கும் எண்ணம் உள்ளது. அந்த கார்ட்டில் அவர்கள் ஒரு தொகையை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அந்த கார்டை கொண்டு பொருட்கள் வாங்கினால் அவர்களுக்கு சலகைகள் மற்றும் தள்ளுபடி அளிக்கும் எண்ணம் உள்ளது. இவை எல்லாம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தான். தற்போது இம்மாத இறுதிக்குள் சென்னையில் மட்டுமே 5000 கடைகளை இணைக்கும் எண்ணம் உள்ளது’’ என்கிறார் பிரதாப் ராஜ்

- ஷம்ரிதி


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-02-2020

  26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • speach20

  இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மெலனியா டிரம்ப் பேச்சு

 • carnival20

  ஜெர்மனி கார்னிவல் 2020: வண்ணமயமான மிதவைகள் உலகத் தலைவர்களை கேலி செய்கின்றன...நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்பு

 • mariyaathai20

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு: காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

 • viloence20

  டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மீண்டும் மோதல்: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்