SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அட்டூழிய ஆக்கிரமிப்புகள்

2019-08-21@ 01:21:26

சென்னை நகரின்  தென்பகுதியில், வங்காள  விரிகுடா கடலில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில், 80 சதுர கி.மீ பரப்பளவில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் உள்ளது. இந்திய அரசால் 1985-86-ல் செயல்படுத்தப்பட்ட  தேசிய சதுப்புநில பாதுகாப்பு மற்றும் நிர்வாக திட்டத்தின்கீழ் கண்டறியப்பட்டுள்ள  94 சதுப்புநிலங்களில் இதுவும் ஒன்று. இது, தமிழ்நாட்டில் உள்ள மூன்றாவது சதுப்பு நிலம். முதலாவது சதுப்புநிலம் கோடியக்கரை  வனஉயிரின உய்விடத்திலும், இரண்டாவது சதுப்புநிலம் விழுப்புரம் மாவட்டம் கழுவேலி பகுதியிலும் உள்ளது. சதுப்பு நிலங்களை பாதுகாக்க, ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாயிலாக அறிக்கை பெற்றுள்ளது.

அதில், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமித்துள்ளனர். கடந்த 1965ம் ஆண்டு 5,500 ஹெக்டேராக இருந்த சதுப்பு நிலம், 2013ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக குறுகியுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டியுள்ள மாநகராட்சியின் இரண்டு குப்பைகிடங்குகளால் நீராதாரம் மற்றும் தாவரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுமார் 1,085 குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளன. பறக்கும் ரயில் நிலைய திட்டத்தால் 100 ஏக்கர் சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.தேசிய கடல்சார் கல்வி நிறுவனத்தால் 20.25 ஏக்கர் சதுப்பு நிலம், மத்திய காற்றாலைகள் நிறுவனம், மற்றும் பல தனியார் ஐ.டி நிறுவனங்களும் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்துள்ளன. இதேபோல, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கழுவேலி சதுப்பு நிலம், 600 சதுர கி.மீ பரப்பில் இருந்து 75 சதுர கி.மீ அளவிற்கு குறுகிவிட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 21) பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர் கதையாகிவிட்டது. தமிழகத்தில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 13,699 ஏரிகள் உள்ளன. இவற்றில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. மதுரை ஐகோர்ட் கிளை வரம்பிற்கு உட்பட்ட 13 மாவட்ட நீர்நிலைகளை பராமரிப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைத்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை கடந்த இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளது.  ஆக்கிரமிப்பு தொடராமல் இருக்க, உரிய கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், இயற்கை வளம் அடியோடு சுரண்டப்பட்டு, நீராதாரம் முடங்கி, சுற்றுச்சூழலுக்கு ஒட்டுமொத்தமாக வேட்டு வைக்கப்பட்டு விடும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nisarkaa4

  மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

 • gujarat4

  குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்