SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

TREE Ambulance!

2019-08-20@ 14:04:26

நன்றி குங்குமம்

உலகின் பசுமை மயமாக்கலில் பெரும்பங்கு இந்தியா மற்றும் சீனாவால் நடந்து கொண்டிருக்கிறது என சமீபத்தில் நாசா தனது செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் அதிகார பூர்வமாக அறிவித்திருக்கிறது.

யெஸ். இவ்விரு நாடுகளுமே புவி வெப்பமயமாதலைக் கண்டு பயப்படத் தொடங்கியுள்ளன. எனவேதான் பாலிதீன் ஒழிப்பு, ஆர்கானிக் உணவு, மரம் நடுதல் என பலவிதமாக பூமியையும், மரங்களையும், மண்ணையும் பாதுகாக்க முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் எங்கேனும் மாற்றலாகி வேறு ஊர் செல்கிறோம் என்றால் எப்படி நாம் வளர்க்கும் நாய், பூனை, ஆடு, மாடு என செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்துச் செல்கிறோமோ அப்படி இனி நாம் பார்த்துப் பார்த்து வளர்த்த மரங்களையும் உடன் அழைத்துச் செல்லலாம்!

இதற்கு உதவவே ‘மரங்களின் ஆம்புலன்ஸ்’ (Tree Ambulance: https://treeambulance.org/) காத்திருக்கிறது என்கிறார்கள் ‘TREE AMBULANCE’ குழுவினர்.ஆச்சர்யத்துடன் எப்படி இது சாத்தியம் என்றால் சிரித்தபடி விளக்குகிறார் சாசா குருப் ஆஃப் கம்பெனிகளின் நிறுவனரான சுரேஷ் ஜாதவ்.  

‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மகாராஷ்டிரால. விவசாயக் குடும்பம். கரும்பு பயிரிடு தல்தான் எங்க வேலை. இன்ஜினியரிங் படிச்சுட்டு கட்டட சம்பந்தமான வேலைகளையும் உள்கட்டட வேலைகளையும் செய்துட்டு இருந்தேன்.

ஆனா, உள்ளூர நம்மை தாங்கும் பூமிக்கு ஏதாவது செய்யணும்னு மனசுக்குள்ள ஓடிட்டே இருந்தது. அப்ப என் நண்பர் அப்துல் கனி, இந்த மர ஆம்புலன்ஸ் ஐடியாவைக் கொடுத்தார்.அப்துல் கனி யாருனு தெரியுமில்லையா..? இந்தியாவின் பசுமை மனிதர்!’’ என்ற சுரேஷ் ஜாதவ், மர ஆம்புலன்ஸ் குறித்து விளக்கினார்.

‘‘முதலுதவி, இறந்த மரங்களை அகற்றி மீண்டும் நடுதல், விதை வங்கி, விதை மற்றும் மரக்கன்றுகள் வழங்கல், மரங்களுக்கான இடமாற்றம், மரம் வெட்டுதலை தடுத்தல், மரங்களின் கணக்கெடுப்புனு மரம் சார்ந்த எதற்கும் எங்களை அணுகலாம்.

‘என் மரம் ரெண்டு நாட்களா வாடுது...’, ‘இலைகள் அசாதாரணமா கொட்டுது...’னு எல்லாம் யாராவது தகவல் கொடுத்தா அங்க எங்க குழு விரைவா போயிடும். அவங்க கொடுத்த புகாருக்கு காரணம் பூச்சியா அல்லது வேறு ஏதாவது காரணமானு கண்டுபிடிச்சு தேவையான சிகிச்சைகளைக் கொடுத்து அதைப் பராமரிப்போம்!

இதுதவிர விதை வங்கி வழியா விதைகளையும் மரக் கன்றுகளையும் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கறோம். தேசிய சாலைகள்ல குறிப்பிட்ட இடை
வெளில மரக்கன்றுகளை நடவும் உதவி செய்யறோம். குறிப்பா நாட்டு மரங்களை அதிகரிக்கும் வேலைலதான் இறங்கியிருக்கோம். இதுதவிர இன்னொரு வேலையும் செய்யறோம்.

அதாவது நீங்க புதுசா கட்டடம் கட்டப் போறீங்க... இல்லைனா வேற இடத்துக்கு மாறப் போறீங்கனா... நீங்க இருந்த இடத்துல நட்டு வளர்த்த மரங்களையும் உடன் அழைத்துச் செல்லலாம்! இந்த வேலையை பக்காவா நாங்க செஞ்சு தர்றோம்.வேர்கள் எதுவரை ஊடுருவி இருக்கோ அதுவரை மண்ணைத் தோண்டி வேரோடு அந்த மரத்தை எடுத்து நீங்க புதுசா போகும் இடத்துல நட்டு தருவோம். அது புது நிலத்துல வேர் பிடிச்சு வளரும் வரை பராமரிப்போம்.

சவாலான வேலைதான். ஆனா, விரும்பி செய்யறோம். மரம் வளர காரணமா இருந்த மண்ணோடு அதை பெயர்த்து எடுத்து பாக்ஸ் மாதிரி தூக்குவோம். இதை அப்ரூட்டட் முறைனு சொல்வாங்க. இதுக்கு பொக்லைன், ஜெசிபி எந்திரங்களை பயன்படுத்தறோம்.

சின்ன செடிகளை இப்படி இடம் மாத்தணும்னாகூட மண்ணோடு சேர்ந்துதான் எடுப்போம்...’’ என்னும் சுரேஷ் ஜாதவ், அரசு மூலமாகவும் பல உதவிகள் தங்கள் குழுவினருக்கு வருகின்றன என்கிறார்.‘‘பசுமை, ஆர்கானிக், மரம் சார்ந்த விஷயங்கள்ல ஈடுபடுற இயக்கங்கள், அரசு சாரா அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள், அரசாங்கமே நடத்துகிற சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள்னு எல்லாத்துக்கும் எங்களையும் அரசாங்கம் அழைக்குது. தவிர ஹைவேஸ்ல மரங்கள் நடவும் உதவி கேட்டு வர்றாங்க...’’ நிறைவுடன் சொல்கிறார் சுரேஷ் ஜாதவ்.

பசுமை மனிதர்!

வீட்டில் முதல் பட்டதாரியாக எம்பிஏ படித்திருக்கும் அப்துல் கனி, பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர். சிறுவயது முதலே மரங்கள், சுற்றுச்சூழல் மீது காதல் கொண்டவர் என்பதால் கைநிறைய சம்பளம் வாங்கிய வேலையை விட்டுவிட்டு மரங்களைக் காக்க களத்தில் இறங்கியிருக்கிறார்! இதுவரை சுமார் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களைக் காப்பாற்றியிருக்கிறார். ‘ஈகோ - லேப்ஸ்’ சார்பாக கார்பன் கால்தடம் என்னும் பெயரில் இவர் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

‘பசுமையான அவள்’ (Green Her) என்னும் பிரசாரம் மூலம் எல்லா நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளும் அவர்கள் கையால் அவர்களது பகுதி மண்ணைச் சேகரிக்கும் வழக்கத்தை கொண்டு வந்திருக்கிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் குழந்தைகளை பூமி மீது முத்தமிட வைத்த இவரது செயலைப் பாராட்டி ‘கிரீன் பேங்க்’ விருதை இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளார்கள்.

இதுதவிர, தேசிய யூத் ஐகான் (UNESCO), டாக்டர் அப்துல் கலாம் விருது, இந்தியாவின் பசுமை மனிதர், புவியின் தேவதை, ரியல் ஹீரோ, இளம் விவேகானந்தா விருது, ஜல்லிக்கட்டு ஹீரோ, பூமியின் ஹீரோ, பசுமை நாயகன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார் அப்துல் கனி!


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChennaiBhogi2020

  பனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்