SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-08-20@ 00:42:17

‘‘ஆரணி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு என குற்றச்சாட்டு எழுந்துள்ளதே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு விவசாயம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அதனை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தாமல், அப்போது பாம்பு பெயரை முன்பெயராக கொண்ட செயலாளரும், காசாளரும் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார்களாம்.அதேபோல் விவசாய கடன் கேட்டு சென்ற விவசாயிகளுடைய ஆவணங்களை வைத்து, பல லட்சம் வரை கடன் கொடுத்ததுபோல் போலி ஆவணங்கள் தயார் செய்து தில்லாலங்கடி வேலையும் பார்த்துள்ளார்களாம். இந்த முறைகேடு குறித்த புகார்கள், கூட்டுறவு சங்க துணை பதிவாளருக்கு தெரியவர, தற்போது விசாரணை நடந்து வருகிறதாம்.இந்த விசாரணையில், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தாமல் அவர்களிடம் பல லட்சம் வரை வசூலித்து முறைகேடு, கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்றதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து பல லட்சம் மோசடி என்று கூட்டுறவு சங்கத்தின் தகிடுதத்தங்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளதாம்.

அதோடு இல்லாம, தற்போதுள்ள கூட்டுறவு சங்க தலையும், பொறுப்பு பதவி வகிக்கும் தவத்தை பெயராக கொண்டவரும் போலி ஆவணங்கள் தயாரித்து புதிதாக 10 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கி அவர்களுக்கு கடன் வழங்கியது போல் ₹40 லட்சத்திற்கும் மேல் ஆட்டைய போட்டுட்டாங்களாம். இதுகுறித்து கடன் பெற்றதாக கூறப்படும் விவசாயிகளும், மகளிர் சுய உதவி குழு பெண்களும் விசாரணைக்காக வர நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் கடன் பெறாதபோது ஏன் விசாரணைக்கு வரவேண்டும் என்று விவசாயிகள் சங்கத்திற்கே சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்காங்க. இதனால் பாம்பு பெயரை முன்பாதி பெயராக கொண்ட முன்னாள் செயலாளருக்கும் தற்போது அதே பதவியில் பொறுப்பு வகிப்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் விஷயம் பெரிதாகி விடக்கூடாது என்று தற்போதுள்ள பொறுப்பு செயலாளர் ₹20 லட்சத்தை திருப்பி கொடுத்துட்டு, மீதி பணத்தை பாம்பு பெயரை கொண்டவர் தான் திருப்பிக்கொடுக்கணும்னு, சொல்றாராம். ஆனால் அவரோ திருப்பி செலுத்த முடியாதுன்னு அடம்பிடிக்கிறாராம்.

தற்போது அந்த மீதி பணம் ₹20 லட்சத்தை யார் செலுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது’’ என்றார் விக்கியானந்தா.‘‘குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் - புரோக்கர்கள் கூட்டணியில் பணத்தை அள்ளுகிறார்களாமே..’’ ‘‘கோவை மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் ஏழைகளுக்கு கடந்த 7 ஆண்டில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. நீர்நிலை புறம்போக்கு, பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசிப்பவர்கள், ஆட்சேபகரமான இடத்தில் வசிக்கும் வீடில்லாத ஏழைகள் உள்ளிட்டோருக்கு இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகிறது. 300 சதுரடி பரப்பளவில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த வீடுகள் கட்டி, ஒப்படைக்கப்படுகிறது. பயனாளிகள் தங்கள் பங்களிப்பாக 12 சதவீத தொகை மட்டும் செலுத்தினால் போதும்.மாநகரில் பயோமெட்ரிக் சர்வே மூலமாகவும், புறநகரில் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு மூலமாகவும் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். புறம்போக்கில் 5 ஆண்டிற்கு மேலாக வசிக்கும் நபர்களுக்கும் வீடு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, ஆளும்கட்சியினர் ஆதரவுடன் சில புரோக்கர்கள் உள்ளே நுழைந்து, ஆட்கள் பிடித்துக்கொடுக்கின்றனர். அவர்களிடமிருந்து கணிசமான தொகையை கறந்து விடுகின்றனர். இதற்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது வேதனை.

புரோக்கர்கள் மூலமாக, ஒரு நபரிடம் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை அமுக்கி விடுகின்றனர். ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் நமக்கும் வீடு கிடைத்துவிடும் என ஏமாந்து, பல ஏழை தொழிலாளர்கள் பணத்தை இழக்கின்றனர். இந்த விவகாரத்தில் புரோக்கர்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மீது அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாவட்ட செயலாளரை மாற்றக் கோரி முதல்வரிடம் மனு அளித்தார்களாமே திருச்சி அதிமுக நிர்வாகிகள்..’’‘‘திருச்சி மலைக்கோட்டையில் மாவட்ட ெஜ.தீபா பேரவையை கலைத்த பின், மாவட்ட செயலாளர் தலைமையில் ஆயிரம் பேர் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். இதற்கான விழா ரங்கத்தில் நடைபெறுவதாக இருந்தது. அதிமுக ரங்கம் வட்ட செயலாளருக்கு இதுபற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் மாவட்ட செயலாளரை முற்றுகையிட்டு மறியல் நடத்துவோம் என அதிமுகவினர் போர்க்கொடி தூக்கினர். இதனால் விழா ரத்தானது. இதற்கிடையில் அதிமுக மாவட்ட செயலாளர் தன்னிச்சையாக செயல்படுகிறார், கட்சியில் உழைப்பவர்களுக்கு தகுந்த மரியாதை இல்லை... ஆலோசனை நடத்துவதில்லை... மாறாக அதிமுகவில் இருந்து வெளியேறி, நம்மை ஏகத்திற்கும் திட்டி வசைபாடியவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பொறுப்புகளை வழங்க உள்ளார்.

கட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளும் மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக்கிய அதிமுக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சமீபத்தில் முதல்வரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தது பெரும் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி அமைச்சருக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அழுத்தமாக முதல்வரிடம் பதிவு செய்துள்ளதாக கட்சியினருக்குள் பேசிக்கிறாங்களாம். ஆனால் மாவட்ட செயலாளரின் விசுவாசிகள், உங்கள் அமைச்சரின் பதவியை பறிப்பதற்கான வேலைகளை எங்கள் தலை துவக்கிருச்சு. சமீபத்தில் அமைச்சர் மணிகண்டன் பதவியை பறித்தது போல் தற்போது திருச்சியில் உள்ள அமைச்சரின் பதவியை பறிக்கும் நாள் விரைவில் வரும் என கூறி கொக்கரிக்கின்றார்களாம். மலைக்கோட்டை மாநகரில் அதிமுகவில் உட்கட்சி பூசல் வெளிப்படையாக துவங்கி நடப்பதை கட்சியினரும், பொதுமக்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றார்கள்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2019

  22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்