SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தரகாண்டில் கனமழைக்கு 10 பேர் பலி: இமாச்சல், பஞ்சாப்பிலும் மழை நீடிப்பு

2019-08-20@ 00:31:32

டேராடூன்: உத்தரகாண்டில் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல்போன பலரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. உத்தரகாண்டில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து  வருகின்றது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்த பொதுமக்களை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான  இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். பல்வேறு இடங்களிலும் ஏராளமான வீடுகள் மழைக்கு இடிந்து சேதமடைந்தது. பல ஹெக்டேர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  விடுத்ததால் 13 மாவட்டங்களில் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் உள்ளிட்டவை நேற்று மூடப்பட்டன.

உத்தரகாசி மாவட்டத்தில் மழையினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 8 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மகுடி கிராமத்தில் இருந்து 5 சடலங்கள் மற்றும் அரகாட் கிராமத்தில் இருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டன. மழையினால் கடுமையாக  பாதிக்கப்பட்ட 6 கிராமங்களில் பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகின்றது. தெக்ரி மாவட்டத்தில் மரம் இடிந்து விழுந்ததில் ெபண் ஒருவர் உயிரிழந்தார். மீட்பு குழுவினர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில்  தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் இமாச்சல பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழைக்கு ஏற்கனவே 22 பேர் பலியாகி உள்ளனர். மேலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மாநிலத்தில் பல பகுதிகளிலும் மழை நீடிக்கும்  என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 500க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்து வருகின்றனர்.

சாலைகளில் குவிந்துள்ள மண் குவியல்களை அகற்றவும், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  திரின்டி, டான்னி, மைரிகா, லடூர், தானா, ஹிந்தர்காட், லெட்ரி மற்றும்  ஜஸ்சூர் கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சம்பா மாவட்டத்தில் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. காங்ரா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கின் போக்கை வேறு பாதைக்கு  தேசிய பேரிடர் மீட்பு படையினர் திருப்பி விட்டுள்ளனர். இதேபோல் கதேதார் கிராமத்தில் நிலச்சரிவு காரணமாக ஆங்காங்கே மழை வெள்ளம் தேங்கி ஏரி போன்று காட்சியளிக்கின்றது. மழை காரணமாக ரூ.490 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக  அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானப்படை மூலம் 9 பேர் மீட்பு: பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்தது. நேற்று மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப் படை மூலமாக நேற்று  காலை முதல் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. யமுனை ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால், கர்னால் பகுதியில் சிக்கி தவித்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 9 பேர் விமானப் படை மூலமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.  ரோபார் மாவட்டம் நீர்தேக்கத்தில் இருந்து 2.4 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஷாகோட், நகோடார் மற்றும் பில்லவுர் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீச்சல் வீரர்கள், டைவர்ஸ் உள்ளிட்டோர்  நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சப்-டிவிஷனிலும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மருத்துவ குழுவினரும் முகாமிட்டுள்ளனர். ஜலந்தர் மாவட்டத்தில் பக்ரா அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் சட்லஜ்  ஆற்றின் அருகே தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

யமுனையில் வெள்ளப்பெருக்கு
யமுனை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதால் கரையோர பகுதியில் வசித்த டெல்லிவாசிகள் 24 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் 2120 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள்  குறித்து முதல்வர் கெஜ்ரிவால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • protest_dailymail111

  சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

 • china_pramdanm1

  சீனாவில் அடுத்த பிரமாண்டம் : 39,000 சதுர மீட்டர் பரப்பிலான உலகின் மிகப்பெரிய கோளரங்கம் உருவாக்கம்

 • 16-09-2019

  இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-09-2019

  15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-09-2019

  14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்