SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையில் இரவில் பயங்கரம் கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை: பதற்றம் - போலீஸ் குவிப்பு

2019-08-19@ 10:49:39

நெல்லை: நெல்லையில் கட்டிடத் தொழிலாளி நேற்று இரவு மர்மக்கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை அடுத்த கருப்பந்துறையைச் சேர்ந்த அந்தோணி மகன் மணிகண்டன் (28). கட்டிடத் தொழிலாளி. இவரது தம்பி காந்திராஜன் (25) வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது தங்கை கவிதா (19) கல்லூரியில் படித்து வருகிறார். மணிகண்டனுக்கும், முத்துமாரி (25) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் மணிகண்டனும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்களான பாலசுப்பிரமணியன் மகன் மாரியப்பன் என்ற மதன் (27), கணேசன் (26), சரவணன் (27) ஆகிய 4 பேரும் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு வீட்டருகே சாலையோர திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென அரிவாளால் மாரியப்பன் என்ற மதன் உள்ளிட்ட நான்கு பேரையும் சரமாரி வெட்டியது. இதில் வெட்டுக்காயத்துடன் மாரியப்பன் உள்ளிட்ட 3  பேர் தப்பியோடியநிலையில் கும்பலிடம் மாட்டிக்கொண்ட மணிகண்டன் தப்பியோட முயன்றார். ஆனால், மர்மக்கும்பல் ஈவு இரக்கமின்றி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிசாய்த்துவிட்டு பைக்குகளில் ஏறி தப்பிச்சென்றது. இதில் தலை துண்டிக்கப்பட்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மாரியப்பன் என்ற மதனையும், கணேசனையும் அப்பகுதி மக்கள் மீட்டு 108 மருத்துவ வாகனத்தில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே தகவலறிந்து விரைந்து வந்த மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர்கள் சதீஷ்குமார், பெரியசாமி, பரமசிவன், இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, சோமசுந்தரம், வனச்சுந்தர் விசாரணை நடத்தினர்.

இதனிடையே கொலையான மணிகண்டனின் உடலை எடுத்து செல்லவிடாமல் அவரது உறவினர்களும், பொதுமக்களும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், மணிகண்டனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தியும், தகுந்த பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் இரவு 10 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்டு நள்ளிரவு சாலை மறியலை கைவிட்டு கலைந்துச்சென்றனர். சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்பநாய் வழக்கம் போல் சிறிது தூரம் ஓடி சென்று படுத்துக்கொண்டது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

கருப்பந்துறை - மேலநத்தம் ஆற்று பாலத்தில் நின்று கொண்டிருந்த போலீசார், அவ்வழியாக பைக்குகளில் செல்ல முயற்சித்த வளாகத்தை சேர்ந்தவர்களை மாற்று பாதையில் டவுன் வழியாக சுற்றி செல்லுமாறு அறிவுறுத்தினர். கொலை கும்பலிடமிருந்து தப்பிய சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். டவுன் உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று தனிப்படை போலீசார், மர்மக்கும்பலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், கருப்பந்துறையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு சமுதாய தலைவரின் போட்டோவை ஒரு கும்பல் சேதப்படுத்தியதில், சில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமா கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்