SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூரை தொடர்ந்து ஆலங்காயத்தில் 15 செ.மீ. கொட்டியது கனமழையில் 8 வீடுகள், தடுப்பணை இடிந்தது: 200 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது

2019-08-19@ 00:45:29

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால், 8 வீடுகள் இடிந்து சேதமானது. தடுப்பணையும் உடைந்தது. 200 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமானது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி இரவு முதல் மழை பெய்து வருகிறது. வேலூரில் நேற்றுமுன்தினம் காலை நிலவரப்படி 16 செ.மீ மழை பதிவாகியிருந்தது. இது கடந்த 110 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான அதிகபட்ச மழையாகும். தொடர்ந்து 2வது நாளாக நேற்று முன்தினம் ஆம்பூர், ஆலங்காயம், திருப்பத்தூர், வாணியம்பாடி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக ஆலங்காயம் பகுதியில் 15 செ.மீ. மழை பதிவானது.ஆம்பூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் மழைவெள்ளம் சூழ்ந்தது. ஆம்பூர் அடுத்த மிட்டாளம் கொச்சேரி கானாறு, வெள்ளைக்கல் பகுதியில் உள்ள வெள்ளக்கல் கானாறு ஆகிய இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டுக்கொல்லை, நாச்சியார்குப்பம், விண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆம்பூர் அடுத்த மின்னூரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளாததால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் கழிவுநீருடன் கலந்த மழைநீர் புகுந்தது. பொதுமக்களே மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். பெரியவரிக்கம் ஊராட்சியில் 100 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. வீடுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறி அப்பகுதி மக்கள் பெரியவரிக்கம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு சென்றனர். ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. நேற்று விடுமுறை என்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. ஆம்பூர் அடுத்த ஊட்டல் காப்புக்காட்டில் கவுன்டன் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பி உடையும் நிலையில் காட்சியளிக்கிறது. பைரப்பள்ளியில் சாணி கனவாய் பகுதியில் தடுப்பணை மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் உடைந்தது. திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையினால் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நீர்வீழ்ச்சிக்கு  அருகே உள்ள விநாயகர் கோயில், பெருமாள் கோயில் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளது.  ஜவ்வாதுமலை சின்னவட்டனூர் காட்டு பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் அடுத்த அங்குத்திசுனையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. புதுபூங்குளம் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் ஆந்திர எல்லையில் இருந்து நீர்வரத்து அதிகரித்து புதுநத்தம் காட்டாற்றில் வெள்ளம் வந்து திம்மாப்பேட்டை பாலாற்றிலும், ஆவாரம்குப்பம் பாலாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண் குழந்தைகள் பலி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கே.ஜி.ஏரியூர் கிராமம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(37). இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ஹரிணி(6), பிரித்திகா(3) என்று இரண்டு மகள்கள் இருந்தனர். வேல்முருகனுக்கு சொந்தமான விவசாய நிலம் அவரது வீட்டின் அருகே உள்ளது. அந்த நிலத்தின் அருகே மாட்டு சாணம் கொட்டி வைத்திருந்தனர். இந்த சாணத்தை 3 நாளுக்கு முன் அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு 4 அடி ஆழம் பள்ளம் ஏற்பட்டது. தற்போது, பெய்து வரும் கனமழையால் 4 அடி பள்ளத்தில் நீர் தேங்கியது. நேற்று காலை ஹரிணியும், பிரித்திகாவும் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து பலியானார்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-09-2019

  18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • guiness_sathana

  எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

 • mexico_isai111

  இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்