SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விலையேற்றம் நியாயமா?

2019-08-19@ 00:44:44

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சுமார் 37 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. அவை பதப்படுத்தப்பட்டு 250 மிலி, 500 மிலி, ஒரு லிட்டர் என பால் பாக்கெட்டுகளாக அடைக்கப்பட்டு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகின்றன.  இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களை கணக்கில் காட்டி, தமிழக அரசு ஆவின் பால் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி இருநிலை சமன்படுத்திய பால் (மெஜந்தா) ஒரு லிட்டர் 34லிருந்து 40 ஆகவும், சமன்படுத்திய பால் (நீலம்) ஒரு லிட்டர் 37லிருந்து 43ஆகவும் இன்று முதல் உயர்கிறது. நிலைப்படுத்திய பால் (பச்சை) ஒரு லிட்டர் 41 லிருந்து  47ஆகவும், நிறை கொழுப்பு பால் ஒரு லிட்டர் 45லிருந்து 51 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக எல்லா பாலின் விலையும் 6 உயர்த்தப்பட்டு விட்டது.இவ்விலை உயர்வின் பின்னணியில் எழும் மாற்றங்கள் சாமானிய மக்களை சங்கடப்படுத்தும். ஒவ்வொரு மாதமும் ஏழை, நடுத்தர குடும்பங்கள் பால் விலைக்கு 200 கூடுதலாக செலவிட நேரிடும். கடைகளில் டீ, காபி விலை உயர்வதற்கு  வாய்ப்புள்ளது. பால் விலையை காரணம் காட்டியே ஆவின் தயிர், மோர், ஐஸ்கிரீம், பால்கோவா உள்ளிட்ட ஆவின் தயாரிப்புகள் விலையும் தானாக உயர்ந்துவிடும். பால் தொடர்புடைய மறைமுக பொருட்களின் விலை உயர்வையும்  பொதுமக்கள் எதிர்கொண்டாக வேண்டும்.

அதிமுக ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் 3வது முறையாக இந்த விலை உயர்வு நடந்துள்ளது. கடந்த 2011ல் ஒரு லிட்டர் சமன்படுத்திய பால் 20.50க்கு விற்றது. இப்போது அதே பால் 40 ஆக உயர்ந்துள்ளது. இரு மடங்கு விலை உயர்வு  அதிமுக ஆட்சிக்காலத்திலேயே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.பால் உற்பத்தியாளர்களை வாழ வைக்கிறோம் என அரசின் சப்பைக்கட்டும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. ஏனெனில் அவர்களிடம் பசும்பால் கொள்முதல் விலையை ₹4 மட்டுமே உயர்த்தி விட்டு, நுகர்வோரிடம் 6 விலை உயர்த்தியிருப்பதில்  அரசின் வணிக நோக்கம் அப்பட்டமாக தெரிகிறது.விவசாயிகளுக்கும், பால் உற்பத்தியாளர்களுக்கும் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி கொடுப்பதில் ஆட்சேபணையில்லை. அதே சமயம் ஆவின் பால் நுகர்வோருக்கும் தரமான பாலை, குறைந்த விலையில் அளிப்பது அரசின் கடமையாகும்.  தமிழகம் முழுவதும் ஆவினில் காணப்படும் நிர்வாக சீர்கேடுகளை களைந்து, முடங்கி கிடக்கும் கூட்டுறவு சங்கங்களை உயிர்ப்பித்தாலே ஆவினில் லாபம் கொழிக்கும். அதை விடுத்து அரசு சாமானிய மக்களின் தலையில் விலையேற்றத்தை  திணிப்பது சரியல்ல. ஆவினில் இப்போதைய விலை உயர்வு, தனியார் பால் பாக்கெட்டுகளின் விலைக்கு இணையாக உள்ளது. இதனால் தமிழக அரசு மறைமுகமாக தனியார் பால் விற்பனையை ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2019

  24-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • greexe_111

  கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • octo_111

  ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

 • batman_tshirt11

  காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

 • circle_of_lightss1

  மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்