SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடன் உயிரை குடிக்கும்

2019-08-17@ 06:18:13

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன், என்று கம்பராமாயணத்தில் கடன் தரும் தொல்லை குறித்து கம்பர் மிக தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளார். ஆனால் இப்போது வங்கி கடன் முதல் தனியார் வழங்கும் விரைவு வட்டிக்கடன் வரை வாங்காதவர்கள் இல்லை என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். காலை முதல் இரவு வரை செல்போனில் வங்கி சேவை ஊழியர்கள் தொடர்பு கொண்டு ஆன்லைனிலேயே ₹10 லட்சம் வரை 5 நிமிடங்களில் கடன் தருகிறோம் என்று தூண்டில் போடுகிறார்கள். மேலும் வீட்டுக்கடன், பராமரிப்பு கடன், மருத்துவ கடன் என்று பல வகையில் மாத சம்பளக்காரர்களை கடன் என்னும் புயல்காற்றில் சிக்கவைத்துவிடுகிறார்கள். கடன் வாங்காமல் காலத்தை தள்ள வேண்டும் என்று கொள்கையோடு வாழ்பவர்களை கூட இவர்கள் அசைத்துபார்த்துவிடுகிறார்கள்.

ஏற்கனவே கடன் வாங்கியவர்கள், ஆசையை தூண்டும் வகையில் பேசும்போது, நாமும் தான் கடன் வாங்கி மகளின் திருமணத்தை நடத்துவோமே, நகரத்தின் மையத்தில் ஒரு பிளாட் வாங்கி விடுவோமே என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால் மாதந்தோறும் தவணை கட்டும் போதும், அசல் இல்லாமல் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு வரும் போது தான் காலத்துக்கும் இந்த சுமை தொடரும் போல இருக்கிறதே, அதற்கு தகுந்தாற்போன்று வருமானம் உயரவில்லையே என்று  கையைபிசைந்து கவலைப்படுவோர் ஏராளம். பொதுவாக விவசாயிகள் தான் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு செல்கிறார்கள் என்றால் தற்போது தொழிலபதிபர்கள் முதல் பிரபலங்கள் வரை கடன் சுமை தாங்காமல் தற்கொலை என்னும் விபரீத முடிவை தேடிக்கொள்கிறார்கள். இது போன்ற சம்பவங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. இது தனி மனிதனின் பிரச்னை என்று விட்டுவிடவும் முடியாது.

இதை சமூக பிரச்னையாகத்தான் அணுக வேண்டும். ஒருவரின் மாத வருமானத்தை கணக்கிட்டு வங்கிகள் அவசரத்துக்கு கடன் கொடுக்கலாம். ஆனால் அவனது சக்திக்கு மீறிய கடன் தொகையை அவன் மீது திணிப்பதை ஏற்க முடியாது. வங்கிகள் தங்கள் தொழிலை மேம்படுத்த, கடனை அள்ளி வழங்கிவிடுகிறது. ஆனால் அதை வட்டியும், அசலுமாக திருப்பி செலுத்துவதற்குள் கடன் வாங்கியவர்கள் படும்பாடு சொல்லிமாளாது. கடன் சுமையால் குடும்ப நிம்மதி இழந்து, தனது மகிழ்ச்சியை இழந்து, சுயசிந்தனை இழந்து சமூகத்தில் அவமானத்துக்கு ஆளாகும் போது அவன் எடுக்கும் விபரீத முடிவு தற்கொலை. இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்க இருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக வாழும் முறையை பழக வேண்டும். இல்லாவிட்டால் கடன் அன்பை முறிப்பது மட்டுமல்ல உயிரையும் குடிக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-09-2019

  23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2019

  22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்